ஞாயிறு, 3 டிசம்பர், 2017

படைப்பாற்றல் கல்வி முறை (ALM-Active Learning Methodology)...

படைப்பாற்றல் கல்வி முறை...

தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு

படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology)

அறிமுகம் : 

படைப்பாற்றல் கல்வி முறையானது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முறையாகும். இது மாணவர்களின் படைப்பற்றல் திறனை வெளிக்கொணர்வதற்கு உதவும் முறையாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 2000-க்கு அதிகமான மனித நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டு அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நாளடைவில் பிறபாடங்களும் இம்முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. 

படைப்பாற்றல் கற்றலின் படிநிலைகளை முழுமையாக பின்பற்றி ஓர் அலகினைக் கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள காலம் 90 நிமிடங்கள் ஆகும்.

படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் ஒன்பதாகும்... 
அவை, 
1)அறிமுகம் : (10 நி)

முந்தைய பாடங்களில் தொடர்புடைய கருத்துகள் இருப்பின் அதனை நினைவுகூர்ந்தும், ஆர்வமூட்டும் செயல்பாடுகளின் வாயிலாகவும் பாடத்தினை அறிமுககப்படுத்துதல். 

2) படித்தல்: (10 நி)

பாடப்பகுதியை முதலில் ஆசிரியர் படித்தல். பின்பு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவர் படித்தல். மாணவர் அடிக்கோடிட்ட புதிய சொற்களுக்கு ஆசிரியர் பொருள் கூறல். (மொழி பாடங்களுக்கு குரல் ஏற்ற இறக்கம், உணர்ச்சி வெளிப்படுத்துமாறு படித்தல்). 

3)மனவரைபடம்: (15 நி)

பாடக்கருத்துக்கு ஏற்ற மன வரைபடத்தினை மாணவர்கள் வரைதல். ஒரு குழு மன வரைபடத்தை வழங்குதல். விடுபட்ட கருத்துகளுடன் ஆசிரியர்தம் மன வரைபடத்தினை வழங்குதல். 

4)தொகுத்தலும் வழங்குதலும்(10 நி) :

பாடக்கருத்தினை மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில் தொகுத்தல் 
1.வார்த்தை வலை(Word web
 2. அட்டவணை(Tables).
 3. குறிப்புகள்(Hints).
 4. வரிசைமுறையில் எழுதுதல். 
5. படங்கள் வரைதல். 
6. உண்மைத் தகவல்கள். 7. காலங்கள். 
8. மீன்முள் 
9.தகவல் பலகை மாணவர்கள் ஏதேனும் கருத்தை விட்டிருப்பின் அதனை இணைத்து, ஆசிரியர் தம் தொகுத்தலை வழங்குதல்.

 5) வலுவூட்டுதல்: (15 நி) 

பாடப்பொருளை வலுவூட்டும் வகையில், ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல். 

6) மதிப்பீடு: (15 நி) 

மாணவர்களின் அடைவுத்திறனை சிறு வினாக்கள் கேட்பதன் வாயிலாக மதிப்பீடு செய்தல்.

 7)குறைதீர் கற்றல்: (15 நி) 
கற்றல் அடைவில் குறைபாடுடைய மாணவர்களை மதிப்பீட்டின்போது கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற குறைதீர் கற்றலை வழங்குதல்.

8)எழுதுதல்:

பாடக்கருத்துகளை வலுப்படுத்தும் வகையிலும், இதன் மூலம் எழுதும் திறன் வளரும் வகையிலும் செயல்பாடுகளை வடிவமைத்தல்.

 9)தொடர்பணி

பாடக் கருத்துகளுக்கு பொருத்தமான செயல்திட்டங்களை அளித்தல். ஆசிரியர் வழிகாட்டுதலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுத்தலாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

சிறப்புக்கள்:

படைப்பாற்றல் கல்வி முறை என்பது ஒரு திட்டமிட்ட கற்றல் முறையாக முன்வைக்கப்படுகிறது. மாணவர்களும் ஆசிரியரும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாகவும் இம்முறையானது கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக