செவ்வாய், 12 டிசம்பர், 2017

வானிலை, 'லைவ்' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது...



ஆறு மாதங்களுக்கு பின், சென்னை வானிலை மையத்தின், 'லைவ்' தகவல் இணையதளம், மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னையில் செயல்படுகிறது. இங்கு செயற்கை கோள் வழி கண்காணிப்பு, மழை, வெப்பநிலை கண்காணிப்பு மையம், ரேடார் ஆய்வு மையம் ஆகியவை செயல்படுகின்றன. சென்னை துறைமுக கட்டடத்தில், ரேடார் அமைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையின், 500 கி.மீ., சுற்றளவை கண்காணித்து, தகவல்களை அளிக்கும்.


'வர்தா' புயலின் போது, ரேடார் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதை, இந்திய வானிலை மையம், சில மாதங்களில் சரி செய்தது. ஆனாலும், சென்னைக்கான, 'லைவ்' வானிலை தகவல் அளிப்பதில், சில சிக்கல்கள் இருந்தன. அதனால், ஆறு மாதங்களாக, சென்னை வானிலை மையத்தின், சென்னை, 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்படாமல் இருந்தது.


தற்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும், 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வழியே, ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் முந்தைய வெப்ப நிலை, பனி, காற்றில் உள்ள ஈரப்பத அளவு, மழை அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக