ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்வு -மத்திய அரசு ஒதுக்கீடு...


ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலும், உள்நாட்டில் அவர்களுடைய திறமையை பயன்படுத்தும் வகையிலும், பி.எம்.ஆர்.எப்., எனப்படும் பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக, 1,650 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது.

ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் மையம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடுகளில் அவர்களுக்கு அதிக அளவு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு நம் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், அவர்களுடைய திறமையை பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. மேலும், ஆராய்ச்சிகள் இங்கு நடைபெறுவதும் தடைபடுகிறது. இதை தடுக்கும் வகையில், 'ஆராய்ச்சி மாணவர்களுக்கான, பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உயர்த்தப்படும்' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, 1,650 கோடி ரூபாயை ஒதுக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, ஆண்டுக்கு, 3,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி மைய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வரும், 2018 - 19 கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு மாதத்துக்கும், 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இதைத் தவிர, வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, ஆராய்ச்சி நிதியாக, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக