பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணியிலேயே தன்னைச் சுருக்கிக்கொண்டுவிட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பல்துறை சார்ந்த நூல்களையும் பதிப்பிக்கும் தனது தொடக்கக் காலத்துப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயன்படும் வகையில், அனைத்துத் துறை சார்ந்த நூல்களையும் இனிமேல் பாடநூல் கழகம் வாயிலாக எளிதாகப் பெற முடியும் என்பது வரவேற்புக்குரியது.
பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் மொழியாகத் தமிழ் ஆனதையடுத்து, தமிழக அரசு 1961-ல் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் பாட நூல்களை வெளியிட ஆரம்பித்தது. மூத்த பேராசிரியர்களைக் கொண்டு தமிழிலேயே நேரடியாகப் பாட நூல்கள் எழுதி வெளியிடப்பட்டன. மேலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் உலகளவில் முக்கியத்துவம் பெற்ற அறிமுக நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டன. இந்த மொழியாக்க முயற்சிகள், தமிழக மாணவர்களுக்குப் பேருதவியாக அமைந்தன. எம்.பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது தொடங்கிய இந்தப் பதிப்பு முயற்சிகள் அடுத்து அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சிக்காலம் வரையில் தொடர்ந்தன. ஆனால், அதன் பிறகு பாடநூல் கழகம் இந்தப் பதிப்பாக்க முயற்சிகளைக் கைவிட்டுவிட்டது. அதுவரை வெளிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மாணவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டது. கல்வியாளர்கள் மத்தியில் இதுகுறித்த ஆழ்ந்த கவலை நிலவியபோதும் தமிழக அரசு போதிய அக்கறை காட்டத் தவறிவிட்டது.
இந்த நிலையில்தான், பாடநூல் கழகத்தின் செயல்பாடுகளில் தற்போது வேகம் கூடியிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டமும், பாட நூல் வரைவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொது விவாதமாக மாறியிருக்கும் நிலையில், அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மறு பதிப்பு முயற்சிகள் அமைந்திருக்கின்றன. பாடநூல் கழகத்தால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எழுதப்பட்ட நூல்கள் தேடிக் கண்டெடுக்கப்பட்டு, மறுபதிப்பு செய்யப்பட்டுவருகின்றன. தமிழ் இணைய மின்னூலகத்திலும் இந்நூல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. பிரதிகள் இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தேடியெடுக்கும் பணியும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
மறுபதிப்போடு நில்லாமல் புதிய பதிப்பாக்க முயற்சிகளையும் தொடங்கியிருக்கிறது பாடநூல் கழகம். சர்வதேச அளவில் இயங்கிவரும் பதிப்பாளர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு 40-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறார்களுக் கான புத்தகங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கான முயற்சிகளும் நடந்துவருகின்றன.
பல்துறைப் பேரறிஞர்களின் பங்களிப்போடு பெரும் பொருட்செலவு வேண்டியிருக்கும் இத்தகைய பதிப்புப் பணிகளை அரசே மேற்கொண்டு நடத்துவதுதான் அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். கடந்த காலத்தில் அந்தப் பொறுப்பை, தமிழகத்தை ஆட்சிசெய்த முதல்வர்கள் உணர்ந்திருந்தார்கள். பாடநூல் கழகத்தின் பதிப்பு முயற்சிகளில் தனிப்பட்ட அக்கறை செலுத்தினார்கள். கடந்த 25 ஆண்டுகளில் அந்தப் பணி தடைபட்டுப் போயிருந்தது. மீண்டும் அதைத் தொடர்வதோடு புதிய நூல் வரவுகளுக்கும் திட்டமிட்டுச் செயலாற்றிவரும் பாடநூல் கழகம் தனது பயணத்தை இதே பாதையில் தொடர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக