திங்கள், 12 மார்ச், 2018

முன்பதிவு ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்ற முடியுமா? ரயில்வேயின் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...


நம் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட
ரயில்வே டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு மாற்ற முடியுமா?

இந்த கேள்விக்கு பலருக்கு பதில் தெரியாது. எப்படி மாற்றுவது, அல்லது அதற்கு என்ன வழிமுறை என்பதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

இதனால், பெரும்பாலானோர் டிக்கெட்டை ரத்து செய்வோம் அல்லது சில நேரங்களில் அதை அப்படியே விட்டுவிடுவோம்.

இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக மாற்றிவிட்டு, எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டி முறைகளை வெளியிட்டுள்ளது.

1. முக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு நிலையங்களில் இருக்கும் தலைமை கண்காணிப்பாளரே ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும், பெயரை மாற்ற வேண்டும், இருக்கை, படுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்.

2. ஒரு பயணி அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவித்தால், மாற்றித்தரப்படும்.

3. ஒருபயணி தனது முன்பதிவு டிக்கெட்டை தனது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்,மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால், டிக்கெட் மாற்றத் தரப்படும்.

4. ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்கள் சுற்றுலா செல்லும் போது, அதில் சில மாணவர்கள் திடீரென வரவில்லை அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தால். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோல் கடிதம் பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த முறையில் எந்த மாணவர்களையும் பெயரையும் மாற்றிக்கொள்ளலாம்.

5. ஒரு திருமணத்துக்காக மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், பள்ளி , கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ், பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.

இவ்வாறு ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக