திங்கள், 2 ஏப்ரல், 2018

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய ஆய்வு முடிவு வெளியீடு...

கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்...
-------------------------------------------------
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் நடத்திய சர்வேயில் தமிழக மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை கற்பதில் தேசிய அளவில் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தேசிய அடைவுத்திறன் தேர்வு (நேஷனல் அச்சீவ்மென்ட் சர்வே) என்ற பெயரில் நாடு முழுவதும் 3, 5, 8ம் வகுப்பு மாணவ மாணவியரிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம்  தேதி சர்வே ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. சாதாரணமாக தேர்வுகள் ஒவ்வொரு மாணவரின் கல்வி திறனை பரிசோதிப்பதாக அமையும். அதே வேளையில் இந்த அடைவு திறன் தேர்வு கல்வி முறையின் ஆரோக்கிய பரிசோதனையை கண்டறிய நடத்தப்பட்டது. 3 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களிடம் 45 கேள்விகளுக்கும், 8ம் வகுப்பு மாணவர்களிடம்  60 கேள்விகளுக்கும் விடைகள் சேகரிக்கப்பட்டன. இந்த கேள்விகள் பாடம் தொடர்புடையது மட்டுமின்றி அவர்களின் ஆசிரியர்கள், பள்ளி சூழல், வீட்டுச்சூழல் ஆகியவற்றை பற்றியும் அமைந்திருந்தது. 

 நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 71 மாவட்டங்களில் 1.10 லட்சம் பள்ளிகளில் இருந்து மொத்தம் 22 லட்சம் மாணவ மாணவியர் இந்த தேர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தேசிய அளவிலான கல்விக்கொள்கைக்கு வழிகாட்டுதல், தேசிய, மாநில, மாவட்ட மற்றும் வகுப்பறை அளவில் கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்துதல், அதன் வாயிலாக சிறந்த மாணவர்களை உருவாக்குதல், இந்த சர்வேயின் நோக்கம் ஆகும்.
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பில் 1723 பள்ளிகளை சேர்ந்த 26591 மாணவர்கள், 2179 ஆசிரியர்களும், ஐந்தாம் வகுப்பை சேர்ந்த 1713 பள்ளிகளில் இருந்து 28237 மாணவர்கள், 2486 ஆசிரியர்களும், 8ம் வகுப்பை சேர்ந்த 1447 பள்ளிகளில் இருந்து 32563 மாணவர்கள், 5536 ஆசிரியர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் சமூக அறிவியல், மொழிப்பாடம், கணிதம் ஆகியவற்றில் 3, 5 ம் வகுப்புகளில் இருந்து 8ம் வகுப்பை அடையும்போது தமிழக மாணவர்களின் கல்வி திறன் தேசிய சராசரியை ஒப்பிடும்போது முந்தைய வகுப்புகளைவிட கணிசமாக குறைவது தெரியவந்துள்ளது. மொழிப்பாடத்தில் மட்டும் தேசிய சராசரிக்கு இணையாக கல்வி திறன் உள்ளது. மூன்றாம் வகுப்பில் கணிதத்தில் 62 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 66 சதவீதம் பேரும், மொழிப்பாடத்தில் 62 சதவீதம் பேரும் கேள்விகளுக்கு சரியான விடையை அளிக்கின்றனர்.  இது ஐந்தாம் வகுப்பில் 49, 52, 58 சதவீதம் ஆக இருக்கிறது. 8ம் வகுப்பில் மொழிப்பாடத்தில் 57 சதவீதம் பேர் சரியான விடையை அளிக்கும்போது கணிதம் 35, அறிவியல் 36, சமூக அறிவியல் 33 சதவீதம் பேர் மட்டுமே சரியான விடை அளிக்கின்றனர். வகுப்பறையில் ஆசிரியர்கள் போதிப்பது 89 சதவீதம் பேருக்கு மட்டும் முழுமையாக புரிகிறது.  10ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களிலும் தமிழக மாணவர்கள் தேசிய சராசரிக்கும் கீழ் பின்தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வேயில் கண்டறியப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி தமிழக அரசு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். 
// தினகரன் //

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக