ஞாயிறு, 20 மே, 2018

பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாட வகுப்பு நடத்த -அமைச்சர் உத்தரவு...


புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

இந்த கல்வியாண்டில் 170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன. 

இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய  பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது.  அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக