ஞாயிறு, 6 மே, 2018

தமிழகத்திற்கு வரும் 2018-19ம் கல்வியாண்டுக்கு மொத்தம் 1427.37 கோடி மத்திய அரசின் பங்களிப்பு~ எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ இணைத்து சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டம்…


சர்வ சிக்‌ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

பள்ளி கல்வித்துறையில் சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. 

இத்திட்டத்தில் 1 முதல் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் வழிக்கற்றலும், 5 முதல் 8ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பித்தல் நடைபெறுகிறது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, பள்ளி வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை கட்டுவது, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி, பெண் கல்வி போன்ற பல்வேறு கல்வி இணை செயல்பாடுகள் இந்த திட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டோடு இத்திட்ட செயல்பாடுகள் முடிவுக்கு வந்த நிலையில் பின்னர் காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

மேலும் கடந்த 2005ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுகின்ற சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் ( ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றை இணைத்து 'சமக்ர சிக்‌ஷா அபியான்' (எஸ்எஸ்ஏ) என்ற புதிய திட்டத்திற்கு மத்திய  அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் இனி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி செயல்பாடுகள் சமக்ர சிக்‌ஷா அபியானின் கீழ் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே எஸ்எஸ்ஏ மற்றும் ஆர்எம்எஸ்ஏக்கு தனித்தனியே அலுவலர்கள் நியமித்து மாநில அளவில், மாவட்ட அளவில், வட்டார அளவில் கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இரண்டும் ஒன்றிணைக்கப்படுவதால் இவ்விரு திட்டங்கள் சார்ந்த அலுவலகங்களும் இனி கலைக்கப்படும். 

அவற்றுக்கு பதிலாக சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தை செயல்படுத்த புதிய அலுவலர்களை கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். ஒரே அலுவலகம் செயல்படும். கல்வித்துறை அமைச்சரை தலைவராக கொண்ட ஆளுகை குழுவும், பொது கல்வித்துறை செயலாளரை கொண்ட நிர்வாக குழுவும் இடம்பெறும். புதிய குழுக்களுக்கான அதிகாரங்களும், கட்டுப்பாடுகளும் தொடர்பான விதிமுறைகள் ஒரு மாத காலத்திற்குள் வகுக்கப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் திட்டம் செயல்பாட்டிற்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எஸ்எஸ்ஏ, ஆம்எஸ்எஸ்ஏக்கு நியமிக்கப்பட்டுள்ள தனித்தனி திட்ட இயக்குநர்களுக்கு பதிலாக ஒரே திட்ட இயக்கநர் இடம்பெறுவார். சமக்ர சிக்‌ஷா அபியானுக்கு நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. 

 இவை ஒருபுறம் இருக்க வரும் கல்வியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் மாவட்ட அளவில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமக்ர சிக்‌ஷா அபியான் தொடர்பான வரைவு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பட்ஜெட் விபரங்கள் ஓரிரு நாட்களில் மாநில திட்ட இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்திற்கு 1427.37 கோடி
சமக்ர சிக்‌ஷா அபியானில் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு இடம்பெறும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதமும், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதம் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்திற்கு வரும் 2018-19ம் கல்வியாண்டுக்கு மொத்தம் 1427.37 கோடி மத்திய அரசின் பங்களிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக