கரியமில வாயு, மீத்தேன், குளோரோபோரோ கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும், உலகச் சூழியலும் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் 2,100-ம் ஆண்டுக்குள் கடலில் 8 அடியும், 2,300-ம் ஆண்டுக்குள் 50 அடியும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் இ காப் தலைமையிலான ஆய்வாளர்கள் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பு மற்றும் கடல்மட்டம் அதிகரிப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அது குறித்த ஆய்வு அறிக்கையை ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளங்கள் குறித்த ஆண்டு ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
அது குறித்து பேராசிரியர் ராபர்ட் இ காப் கூறியதாவது:
''உலக அளவில் கடல் மட்டத்தின் அளவு 2,100-ம் ஆண்டுக்குள் 8 அடியும், 2,300-ம் ஆண்டுக்குள் 50 அடியும் உயரும் அபாயம் நிலவுகிறது. இதற்கு முக்கியக்காரணம் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுவது தொடர்ந்து அதிகரித்தால், கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும், உலகின் சூழியலுக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கடல்மட்டத்தின் அளவு 0.2 அடி உயர்ந்துள்ளது. மிதமான அளவு பசுமை இல்லவாயுக்கள் அதிகரித்து வந்தால், 2,100-ம் ஆண்டில் கடல்மட்டத்தின் அளவு 1.4 அடி முதல் 2.8 அடியாகவும், 2,150-ம் ஆண்டுக்குள் 2.8 அடியில் இருந்து 5.4 அடியாகவும் அதிகரிக்கலாம். 2,300-ம் ஆண்டுக்குள் 14 அடி வரை அதிகரிக்கக்கூடும்.
33 அடி கடல்மட்ட உயரத்துக்கும் குறைவான பகுதியில் 760 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கடல்மட்டம் உயரும்போது இவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலுக்கு உள்ளாகும். கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள், பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, சூழியல் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
2000-ம் ஆண்டில் இருந்து 2050-ம் ஆண்டுவரை உலக சராசரியில் கடல்மட்டத்தின் அளவு 6 முதல் 10 இன்ச் வரை அதிகரிக்கக் கூடும் என்று நம்புகிறோம். அதேசமயம், சில இடங்களில் 18 இன்ச் வரை உயரக்கூடும். இதற்கு மிகமுக்கியக் காரணமாக இருப்பது பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றமும், அதைக் கட்டுப்படுத்தாமல் மனிதர்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவதுமேயாகும்.
உலக அளவில் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருவது மனிதகுலத்துக்கு எச்சரிக்கை மணியாகும். இதற்கான காரணங்களை நாம் அறிவோம். கடல்மட்டம் உயராமல் இருப்பதற்கான வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்''.
இவ்வாறு பேராசிரியர் ராபர்ட் இ காப் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக