வெள்ளி, 9 நவம்பர், 2018

ஆசிரியர்கள் புகார் - 2 BEO - கள் , 'சஸ்பெண்ட்'


ஆசிரியர்களுக்கு, பணப்பலன்களை பெற்று தராமல், காலதாமதம் செய்ததால், இரு வட்டார கல்வி அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.




கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் இரு வட்டார கல்வி அலுவலகங்கள், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் செயல்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன் மற்றும் அவர்கள் கடன் வேண்டி மனு அளித்திருந்தனர். மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்காதால், பணப்பலன்களை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்தனர்.





இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அனைத்து ஆசிரியர்கள் சார்பில், கல்வி அலுவலரை கண்டித்து கண்டன நோட்டீஸ் ஒட்டப்பட்டது.கடந்த மாதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தங்கவேல், குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர், கபீர் ஆகியோர், ஆசிரியர்களிடம், 'சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பலன் உட்பட அனைத்து சலுகைகளும் பெற்று தரப்படும்' என, உறுதியளித்தனர்.





இந்நிலையில் ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி பெற்று தராமல் தாமதம் செய்ததாக, கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் சேகர், குமுதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல் கூறியதாவது:




கிருஷ்ணராயபுரம் தாலுகா வட்டார கல்வி அலுவலர் சேகர் மற்றும் குமுதா ஆகியோர், ஆசிரியர் களுக்கு பெற்று தர வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி செய்து தராமல், ஓராண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, இரு அலுவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.