செவ்வாய், 6 நவம்பர், 2018

மாணவர் சேர்க்கை கட்டணம் UGC புதிய உத்தரவு

*மாணவர் சேர்க்கை கட்டணம் யுஜிசி  புதிய உத்தரவு*

படிப்புக்கான முழுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி சேர்க்கைக்குப் பிறகு, படிப்பைக் கைவிடும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பித் தராதது, அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க மறுப்பது தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த விரிவான உத்தரவை யுஜிசி இப்போது பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கையின்போது விண்ணப்பப் படிவத்துடன், கல்லூரி தகவல் கையேட்டை விலை கொடுத்து வாங்குமாறு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது.

யுஜிசி வழிகாட்டுதலின்படி உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய இணையதளங்களில் வெளியிட்டிருக்கும் தகவல்களையே பார்த்துத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு, அதற்கான அனுமதியை கல்வி நிறுவனங்கள் வழங்கவேண்டும்.

 *கல்விக் கட்டணம்*: உயர் கல்வி நிறுவனங்கள் சேர்க்கையின்போது மாணவர்களிடம் ஒரு பருவம் அல்லது ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். படிப்பு முழுவதற்குமான கட்டணத்தை சேர்க்கையின்போது கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது. அதோடு, சேர்க்கைக்குப் பின் படிப்பைக் கைவிட விரும்பும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்கு ஏற்ப அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும்.

அதாவது, கல்லூரிகள் அறிவித்த மாணவர் சேர்க்கைக்கான கடைசித் தேதிக்கு 15 நாள்களுக்கு முன்பே, படிப்பைக் கைவிடுவதாகத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை 100 சதவீதம் திரும்ப அளிக்கவேண்டும்.
சேர்க்கைக்கான கடைசித் தேதியிலிருந்து 15 நாள்களுக்கும் குறைவாக படிப்பைக் கைவிடும் அறிவிப்பைத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு 90 சதவீத கட்டணத்தைத் திரும்ப அளிக்கவேண்டும்.

அறிவிக்கப்பட்ட சேர்க்கைக்கான கடைசித் தேதிக்குப் பிறகு 15 நாள்களுக்கு அறிவிப்பைத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு 80 சதவீத கட்டணத்தை திரும்ப அளிக்கவேண்டும்.
அதே போன்று, அறிவிக்கப்பட்ட கடைசித் தேதிக்குப் பிறகு 15 நாள்களுக்கு மேல் 30 நாள்களுக்கு அறிவிப்பை தெரிவிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட கடைசித் தேதிக்குப் பின்னர் 30 நாள்களுக்குப் பிறகு அறிவிப்பை வெளியிடும் மாணவர்களுக்கு கட்டணம் எதையும் திரும்ப அளிக்கத் தேவையில்லை என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.