ஞாயிறு, 2 டிசம்பர், 2018

பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம் - Namakkal CEO


சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசினார்.
நாமக்கல்லில் தேசிய பசுமை படை அமைப்பு சார்பில் ‘பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம்’ என்ற தலைப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில் முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசியதாவது:- நன்கு படிக்கின்ற மாணவர்களை மட்டுமின்றி படிக்காத மாணவர்களையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல ஆசிரியர்கள் அவர்களை புரிந்து கொண்டு சொல்லித் தர வேண்டும்.
சிறப்பு வகுப்பு மட்டும் தீர்வாகாது. நல்ல திறமையையும், பயிற்சியையும் ஒவ்வொரு மாணவருக்கும் கொடுக்கும் பள்ளி தான் சிறந்த பள்ளி. பருவ மழை இல்லாமல் போனதற்கு மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை பாதுகாக்கப்படாமல் போனதே முக்கிய காரணம். அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு முக்கியமாக பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அது குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை மட்டும் வழங்காமல், அவர்களை அதற்கு ஏற்ப செயல்பட வையுங்கள். அதை பள்ளி பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கொண்டு செல்ல வேண்டும். இதை சிறந்த முறையில் செயல்படுத்த முன்வரும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.