வெள்ளி, 1 மார்ச், 2019

தமிழ்நாடு அரசின் விடுமுறை நாள்களில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் கூட்டங்கள் போன்றனவற்றை நடத்திடுவதை கைவிடுமாறு வேண்டுகோள்...

தமிழ்நாடு அரசின் விடுமுறை நாள்களில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் கூட்டங்கள் போன்றனவற்றை நடத்திடுவதை கைவிடுமாறு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரிடம் மற்றும் திட்ட இயக்குநரிடம்
(அகஇ) தொடக்கநிலை ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து  வலியுறுத்தி தமிழ்நாட்டு தொடக்கநிலை ஆசிரியர்களின் மேற்கண்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளச்செய்யப்பட்டுள்ளது.

உண்மைநிலை இவ்வாறு இருக்கையில் நாமக்கல் மாவட்டத்தில்  வரும் (02.03.19)சனிக்கிழமை அன்று அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின்  தலைமையாசிரியர்களின்  கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கவலைத்தருகிறது. 
மேற்கண்ட  நியாயமற்ற  அறிவிப்பை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கடுமையாக ஆட்சேபிக்கிறது.

தமிழ்நாடு கல்வித்துறை தற்போது அரசு விடுமுறைநாளில் ,சனிக்கிழமையில் தலைமையாசிரியர் கூட்டம் நடத்திடுவது என்பது ஒருவகை சீண்டல் முயற்சியா?!  
முன் ஒத்திகையா?! என்று 
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஐயமும்,அச்சமும் கொள்கின்றனர்.
இத்தகு ஐயமும்,அச்சமும் ஒருங்கிணைந்த மனநிலையானது ஆரோக்கியமற்ற சூழலையே கல்விக்களத்தில் ஏற்படுத்தும் வாய்ப்பும்,ஆபத்தும் உள்ளது .

தமிழ்நாடு அரசு விடுமுறைநாளில் அரசுப்பணிகளை செய்திட பணிப்பது, கூட்டங்கள் நடத்திடுவது அறமற்றதாகும்.

தமிழ்நாடு மாநிலத்தில் எங்கும் கூட்டப்படாதக் கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தான் கூட்டப்பட்டுள்ளது
(!?)என்பது பல்வேறு வினாக்களை மாவட்ட ஆசிரியர்களிடம்  எழுப்புகிறது.

மேற்கண்டுள்ளவற்றை கனிவுடன் பரிசீலித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு  பள்ளிக்கல்வித்துற முதன்மைச்செயலாளர்  ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் வரும்(02.03.19) சனி அன்று கூட்டப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர் கூட்டத்தை ஒத்திவைத்திடும் வகையில் வழிகாட்டுதல் செய்திடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

-முருகசெல்வராசன்.,  மாவட்டச்செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக