ஞாயிறு, 13 அக்டோபர், 2019

*🌷அ
க்டோபர் 13, வரலாற்றில் இன்று.*

*🌷சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினம் இன்று.*


*நிலநடுக்கம், வெள்ளம், புயல், இடி, மின்னல், எரிமலை போன்றவை பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை இன்னல்களாகும். சாலை விபத்து, தீ விபத்து, நீரில் மூழ்குதல், கட்டிட விபத்து போன்றவை மனிதனின் கவனக் குறைவாலும், அறியாமையினாலும் தோற்றுவிக்கப்படும் இன்னல்களாகும். இன்னல்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளை அறிந்து செயல்படுவதை பேரிடர் மேலாண்மை என்கிறோம்.*

*ஒன்றும் அறியா பள்ளிக் குழந்தைகள் கூட,*
*இத்தகைய பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.*

*உலகெங்கும் பெரும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் ஆபத்து பெருகி வருகிறது. இதிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்று மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை 1990 முதல்  அறிவித்தது. உலக நாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் மோசமான விளைவுகள் நிகழாமல் செய்வதும், பாதிப்பைக் குறைப்பதும் இந்தப் பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.*

*உலகத்தில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஆசிய, பசிபிக் பகுதியில்தான் ஏற்படுகின்றன. புவியியல் அமைப்பாலும், வானிலையாலும், பூகோள அமைப்பாலும் இந்தப் பேரிடர்களில் பெரும்பாலானவை இந்தியாவில் ஏற்படுகின்றன.*

*புயலால் 41% நிலநடுக்கத்தால் 37%, வெள்ளத்தால் 16%, சூறாவளிப் புயலால் 2%, பனிப்புயல், எரிமலை, வெப்ப அலை, நிலச்சரிவு, பேரலைகளால் ஒவ்வொன்றுக்கும் 1% குறைவான உயிர்சேதம் ஏற்படுகிறது என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.*

*நமது நாட்டில் 55% நிலப்பரப்பு நில நடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதியாகும். இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளை ஐந்து மண்டலாகப் பிரித்துள்ளார்கள். தமிழ்நாடு இரண்டாவது மண்டலமாக உள்ளது.*