ஞாயிறு, 1 டிசம்பர், 2019

டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

மக்கள் எழுத்தாளர் இன்குலாப் நினைவு தினம் இன்று.


இன்குலாப்  தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார்.


சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

இன்குலாப்பின் கவிதை:

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
.
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
.
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!