திங்கள், 4 மே, 2020

மே 4, வரலாற்றில் இன்று.

பிரபல நாவல் ஆசிரியரும், அறுவை சிகிச்சை நிபுணருமான ராபின் குக் (Robin Cook) பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1940) பிறந்தவர். இவருக்கு 8 வயதாகும்போது குடும்பம் நியூஜெர்சியில் குடியேறியது. வெஸ்லியன் பல்கலைக்கழகத் திலும், கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மருத்துவ முதுகலைக் கல்வியை முடித்தார். அங்கு சிறிது காலம் பணிபுரிந்தார்.

பிரான்ஸில் உள்ள காஸ்டியூ சொசைட்டி ரத்த (Blood-Gas) பரிசோதனைக் கூடத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இவரது கண்ணோட்டம் விரிவடைந்தது. மருத்துவ உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதத் தொடங்கினார்.

அமெரிக்க கடற்படையில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு லெப்டினன்ட் கமாண்டர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இவரது முதல் நாவல் ‘தி இயர் ஆஃப் தி இன்டர்ன்’. கடும் உழைப்பு, ஆராய்ச்சி மூலம் விவரங்களை சேகரித்து அவற்றின் அடிப்படையில் கதைக்களம், கதாபாத்திரங்களை உருவாக்குவது இவரது சிறப்பு அம்சம்.

இவரது மருத்துவ அறிவுதான் இவரது பல நாவல்களுக்கான கருவை வழங்கி வருகிறது. உறுப்பு தானம், செயற்கை கருத்தரிப்பு, மருந்து ஆராய்ச்சிகள், மரபணு பொறியியல், ஆராய்ச்சி மோசடிகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார்.

இவரது பல நாவல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. ‘உடல்நல பாதிப்பில் இருந்து விடுபடுவதை மக்கள் பெரிதாகக் கருதுகிறார்கள். பெரிய ஆபத்தில் இருந்து தப்பியதாக உணர்கிறார் கள். என் நாவல்களின் வெற்றிக்கு அதுவே காரணம்’ என்கிறார்.

முக்கியமான, சிக்கலான மருத்துவ விஷயங்கள் மக்களுக்கு எளிதில் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே மருத்துவ த்ரில்லர் நாவல்களை எழுதுவதாகக் கூறுகிறார். இவரது பல புத்தகங்கள் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய ‘கோமா’, ‘ஷாக்’ நாவல்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இன்று மருத்துவ ஆராய்ச்சியில் நிகழும் வேகமான மாற்றங்கள், வெவ்வேறு பிரச்சினைகள், எதிர்காலப் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாக வைத்தே அனைத்து நாவல்களையும் எழுதுகிறார்.

இவரது ‘கோமா’, ‘ஸ்பிங்ஸ்’ நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடின. இவரது பல நாவல்கள் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களாக வந்துள்ளன. இவரது நாவல்கள் விறுவிறுப்பாக இருப்பதோடு, மருத்துவ அறிவை ஊட்டுவதாகவும் உள்ளன.

‘மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள்’ என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிடும் பட்டியலில் இவரது நூல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இவரது நூல்கள் ஏறக்குறைய 10 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன.

தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை பெருமையாகக் கருதுகிறார். ஒரு எழுத்தாளர் டாக்டராகவும் இருக்கிறார் என்பதைவிட, ஒரு டாக்டர் எழுத்தாளராகவும் இருக்கிறார் என்று கூறப்படுவதையே விரும்புகிறார். தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் இந்த டாக்டர், நாவல் எழுதும் பணியையும் சிறப்பாக செய்துவருகிறார்.