வியாழன், 11 ஜூன், 2020

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:எஃப்.எம். எனப்படும் பண்பலை வானொலி ஒலித்த தினம் இன்று(1935).*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

எஃப்.எம். எனப்படும் பண்பலை வானொலி ஒலித்த தினம் இன்று(1935).

இப்போது சகலர் கையிலும் உள்ள செல்போனில் பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள், வானிலை அறிவிப்புகள், திரைநட்சத்திரங்களின் நேர் காணல்கள் என்று பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி மூலம் காலை முதல் இரவு வரை கேட்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால்  25 வருஷத்துக்கு முந்திய ரேடியோ ரசிகர்களுக்கு பண்பலை வரப்பிரசாதம்.

அதிலும் அப்போதெல்லாம் இவ்வளவு வானொலி நிலையங்களும் கிடையாது. ஆல் இண்டியா வானொலி, இலங்கை, சிங்கப்பூர், பி.பி.சி., சீனத் தமிழ் வானொலிகளை இரைச்சலையும் பொருட்படுத்தாது காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டு ரசிப்பார்கள் அந்தக் கால வானொலி நேயர்கள். இத்தனைக்கும் ஏ.எம். அலைவரிசை, ஷார்ட்வேவ் (குறுகிய அலை) அலைவரிசை என இருவித ஒலி பரப்புகள் இருந்தாலும் இரண்டும் இரைச்சல் கலந்தே ஒலித்தன.அதாவது கல்லையும் அரிசியையும் கலந்து கடித்ததைப் போல இருந்தது அன்றைய ரசிகர்களின் நிலை இதையடுத்து வானொலியின் இரைச்சலைப் பெரிய அளவு குறைக்கும் நோக்கில் எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகமானது.
அதனைக் கண்டுபிடித்தவர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் (1890-1954). அமெரிக்காவில் பிறந் தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து அதிலேயே பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.

1933இல் அவர் எஃப்.எம். ரேடியோவுக்கான காப்புரிமையைப் பெற்றார்.

 1935இல் அதனை நியூஜெர்ஸி மாநிலத்தில் பொதுமக்களுக்காக இதே நாளில் ஒலிபரப்பினார்.

எஃப்.எம். அலைவரிசையைப் பயன்படுத்திப் பலனடைந்த பல தனியார் நிறுவனங்கள், எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கான கண்டுபிடிப்புக் கட்டணத்தைத் தராமல், அவரை அலைக்கழித்தன.

 நீதிமன்ற வழக்குகளால் அவர் நிம்மதியிழந்தார்.

 ஒருநாள் வீட்டின் மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்துக்குப் பிறகு, அவருக்குச் சாதகமாக வழக்குகள் முடிந்தன.நீதிமன்றங்களுக்கு ரேடியோ தொழில்நுட்பங்கள் புரியவில்லை எனக் காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் வாழ்க்கையில் வலிகளை அனுபவித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், நமக்கு விட்டுச் சென்ற சொத்துதான் பண்பலை வானொலி என்றால் அது மிகையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக