புதன், 1 ஜூலை, 2020

*🌐ஜூலை 1, வரலாற்றில் இன்று:தேசிய மருத்துவர்கள் தினம் இன்று.*

ஜூலை 1, வரலாற்றில் இன்று.

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது  முதல்வர் என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்) பிறந்த தினத்தைத்தான் டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.

 1882-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார் ராய். 1962-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தனது 80-வது வயதில் அவர் மறைந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். அவரது அளப்பரிய சேவை கருதி இந்திய அரசு அவருக்கு 1961-ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவித்தது. முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்து வந்தார். இவரது பிறந்த நாளான ஜூலை 1-ம் தேதியிலேயே இவர் மரணம் அடைந்தார். அவரின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு கடந்த 1976-ம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒருவர் உண்டு என்றால் அவர்கள் டாக்டர்தான். டாக்டர்களைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor’s Day) கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக