வெள்ளி, 10 ஜூலை, 2020

*🌐ஜூலை 10, வரலாற்றில் இன்று:எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த தினம் இன்று.*

ஜூலை 10, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த தினம் இன்று.

  ஆர்.நாராயணசாமி எனும் இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு
(ஜூலை 10, 1919 - ஜனவரி 17, 1992)தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கட்டுரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

1948 முதல் 1977 வரை கரிச்சான் குஞ்சு அவர்கள், "மன்னை தேசிய மேல்நிலைப் பள்ளியில்" தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


கு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.


கரிச்சான் குஞ்சு ஆங்கிலம், இந்தி, வடமொழி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சியில் கவிஞர் திருலோகசீதாராம் நடத்திய "சிவாஜி" இதழில் கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதினார். தவிர, "கலாமோகினி" இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாயின.
காதல் கல்பம், குபேர தரிசனம், வம்சரத்தினம், தெய்வீகம், அன்றிரவே, கரிச்சான் குஞ்சு கதைகள், சுகவாசிகள், தெளிவு, கழுகு, ஒரு மாதிரியான கூட்டம், அம்மா இட்ட கட்டளை ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள். இவைதவிர, "பசித்த மானிடம்" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இந் நாவல்தான் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. "சங்கரர்", "கு.ப.ரா.", "பாரதி தேடியதும், கண்டதும்" என்னும் மூன்று வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார். ஆனந்த வர்த்தனன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். "சுகவாசிகள்" என்னும் இவரது குறுநாவல் "மனிதர்கள்" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. சாகித்திய அகாதெமி, "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் இவருக்கும் இடமளித்து பெருமை சேர்த்துள்ளது.

1 கருத்து: