திங்கள், 20 ஜூலை, 2020

*🌐ஜூலை 20, வரலாற்றில் இன்று:கால் பட்ட பகுதிகளில் எல்லாம் வெற்றிகளை குவித்த மாவீரன் அலெக்சாண்டர் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 20, வரலாற்றில் இன்று.

 கால் பட்ட பகுதிகளில் எல்லாம் வெற்றிகளை குவித்த மாவீரன் அலெக்சாண்டர் பிறந்த தினம் இன்று.

மாவீரன் அலெக்சாண்டர் தன்னம்பிக்கைக்கான அடையாளம். மிகச்சிறிய பிரதேசத்தில் இருந்து கிளம்பி அவர் காலத்தில் அறியப்பட்ட நிலப்பரப்பில் பெரும்பகுதியை தன் வீரத்தால் வென்றவர் அவர். இளம் வயதில் யாரும் அடக்க
யோசித்த முரட்டு குதிரையை அது நிழலை பார்த்து அஞ்சுகிறது என்று கண்டறிந்து எதிர் திசையில் திருப்பி அடக்கி தன்னுடைய சொத்தாக அவர் ஆக்கிக்கொண்டார்.

தந்தையின் விருப்பத்தின் பேரில் அரிஸ்டாட்டில் அவர்களிடம் கல்வி கற்றார் அவர். ஹோமரின் இலியட் ஒடிசி நூல்களை படித்து முடித்ததும் அவரின் உலகை நோக்கி பயணம் போகவேண்டும் என்கிற ஆர்வம் பொங்கியது. கூடவே வாசனைப்பொருளை அதிகம் ஒருமுறை வகுப்பில் பயன்படுத்திய பொழுது ,"இந்தியாவில் இருந்து வரும் அரிய பொருளது ! பார்த்து சிக்கனமாக பயன்படுத்து !" என்று ஆசிரியர் கடிந்தது இந்தியாவை நோக்கி அவரின் கனவுகளை செலுத்தியது. அப்பா பிலிப் ஓரு போரில் கொல்லப்பட இருபது வயதில் மன்னரானார் அலெக்சாண்டர்.

சின்னச்சின்ன கனவுகள் காணத்தெரியாத அவர் உலகமே தன்னுடைய எல்லை என்று எண்ணிக்கொண்டார். பல்வேறு நாடுகள் மீது படையெடுத்தார். பாரசீகம் துவங்கி இந்தியா வரை அவரின் வெற்றிகள் நீண்டன. இந்தியாவிற்குள் நுழைய வந்த பொழுது ஆரம்பத்தில் சில மன்னர்கள் போர் செய்யாமல் அடிபணியவே இந்தியர்கள் இப்படித்தான் என்று எண்ணிக்கொண்டு இருந்தார் அவர்.போரஸ் என்கிற மன்னன் அதீத வீரம் காட்டிய பொழுது யானைப்படையை படாத பாடுபட்டு சமாளித்த அலெக்சாண்டர் அவரை கைது செய்ததும் , "என்ன வேண்டும் உனக்கு ?" என்று கேட்டதும் போரஸ் கம்பீரமாக ,
"மன்னனைப்போல நடத்து என்னை !" என்றார்.

இந்தியாவின் வெப்ப பருவநிலை,போரஸ் உடன் புரிந்த அதிரவைக்கும் போர்,வீட்டு ஞாபகம் ஆகியன கிரேக்க வீரர்களை மேலும் முன்னேற விடாமல் செய்தன. மீண்டும் தாயகம் திரும்பினார் அலெக்சாண்டர். போகிற வழியில் பாபிலோனியாவில் தங்கினார். அங்கே பெரிய மது விருந்துக்கு பிறகு உடல்நலம் குன்றி அவர் இறந்து போனார். அப்பொழுது அவருக்கு வயது முப்பத்தி மூன்று.

கால் பட்ட பகுதிகளில் எல்லாம் வெற்றிகளை குவித்த அலெக்சாண்டர் இறக்கிற பொழுது இப்படி சொன்னார் ,"என் கல்லறையில் என் கரங்களை வெளியே தெரியும்படி வைத்திடுங்கள். உலகையே வென்ற அலெக்சாண்டர் போகிற பொழுது வெறுங்கையோடு தான் போனான் என்று உலகம் அறியட்டும் !" தன்னை வெல்லுதல் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லாமல் சொன்ன,
தன் எதிரிகளை கண்ணியமாக நடத்திய மாவீரனை பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக