செவ்வாய், 20 அக்டோபர், 2020

அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு தினம் இன்று.

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர்
 ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

ராஜம் கிருஷ்ணன்
1925ஆம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15ஆவது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.

பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர்.
1970ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மணிகள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்
பெறுகின்றன.

இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே. 

கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், கணவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-
முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக