நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.
ரசகுல்லா தினம் இன்று.
சுவைமிகு ரசகுல்லா, தங்களது பாரம்பர்ய உணவே என்று ஒடிசா மாநிலத்துடன் போராடி வென்ற மேற்கு வங்க அரசு நவம்பர் 14ஆம் தேதியை ரசகுல்லா நாளாக கொண்டாடுகிறது.
கடந்த கால ரசகுல்லா சண்டை?
பாலில் செய்யப்படும் இனிப்பு வகை உணவுப் பொருளான ரசகுல்லா, தங்கள் மாநிலத்தின் கண்டுபிடிப்பே என்று கூறி ஆண்டுதோறும் ’ரசகுல்லா திவாஸ்’ என்ற பெயரில் ஒரு நாள் கொண்டாட்டங்களை ஒடிசா மாநில அரசு கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது.
ஒடிசாவின் பூரி நகரில் 13ஆம் நூற்றாண்டிலேயே ரசகுல்லா இருந்ததாகவும், பூரி ஜெகன்னாதருக்கு, லட்சுமி தாயார் ரசகுல்லா கொடுத்ததாக வரலாறு இருப்பதாகவும் ஒடிசா கூறிவந்தது. ரசகுல்லாவின் வரலாற்றைக் கண்டுபிடிக்க ஒரு தனி கமிட்டியே நியமிக்கப்படும் என்று கடந்த 2015இல் ஒடிசாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய அமைச்சர் பிரதீப் குமார் கூறினார்.
ஆனால், ரசகுல்லா தங்கள் மாநிலத்தின் உணவே என்று கூறி மேற்குவங்கம் களத்தில் இறங்கியது. ரசகுல்லாவானது திரிந்த பாலில் செய்யப்படுவது என்றும், திரிவடைந்த பாலானது சுத்தமில்லாததாக் கருதப்படும் நிலையில், அது கடவுளுக்குப் படைக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மேற்குவங்கம் வாதாடியது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று மேற்குவங்க மாநில உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் அப்துர் ரசாக் மோலா கூறியிருந்தார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இனிப்பு தயாரிப்பாளர் நபீன் சந்திர தாஸ், கடந்த 1868இல் ரசகுல்லாவைக் கண்டுபிடித்ததாகவும் அம்மாநிலம் கூறிவந்தது.
மேற்குவங்க மாநில உணவு கலாசாரத்தின் அடையாளங்களுள் ஒன்று ரசகுல்லா என முதலமைச்சர் மம்தா தொடர்ந்து கூறிவந்தார். இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கிடைத்தது.
புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருள்கள் அந்தந்த பகுதிகளுக்கே சொந்தம்.
ஆக ரசகுல்லா ஒரு வழியாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமானதென கடவுளையும், நீதி மன்றத்தையும் சாட்சியாக வைத்து பெறப்பட்ட ரசகுல்லா உணவு உரிமையை கொண்டாடும் வகையில் நவம்பர் 14ஐ ரசகுல்லா தினமாக அறிவித்துள்ளது மேற்குவங்க அரசு.
*இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக