இபிஎஸ் 95’ ஓய்வூதியத் திட்டம் வரமா? சாபமா?
#கே_பி_பாபு தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் தொடர்ந்து போராடியதன் விளைவாக வும் உச்சநீதிமன்றத்தில் திரு. நகாரா அவர்கள் தொடுத்த வழங்கில், “ஓய்வூதியம் என்பது கருணையினால் வழங்கப்படுவதில்லை; அது தொழி லாளர்கள் உரிமை” என்று தீர்ப்பு அளித்ததன் விளைவாகவும் ‘தொழிலாளர் ஓய்வூதியத்திட்டம் 95’ என்ற (EMPLOYEES PENSION SCHEME 95) திட்டத்தை 1995 நவம்பர் 16 அன்று அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அறிமுகம் செய்தார். நாடாளுமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வருங்கால வைப்புநிதி திட்டம் 1952 சட்டத்தின் ஒரு பகுதி யான பென்ஷன் திட்டத்தை கொண்டுவரும் போது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் கருத்துகளை கேட்காமலும், எந்த விவாதமும் இல்லாமலும் இ.பி.எஸ்1995 திட்டத்தை அவசர கதியில் அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் ஒன்றிய அரசு 1.16% பங்களிப்பும் தொழிலாளி தனது பங்களிப்பாக, நிர்வாகம் செலுத்தும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்பான 12% லிருந்து 8.33% ஐ பென்ஷன் நிதிக்காக செலுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952 மற்றும் குடும்ப ஓய்வூதிய திட்டம் 1971, ஆகிய இரண்டு திட்டங்களில் கடைப்பிடிக்கப்பட்ட சட்டப்படியான அரசின் சம பங்களிப்பு மறுக்கப்பட்டது. இதுபோன்று தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல அம்சங்கள் இந்த திட்டத்தில் உள்ளதை சிஐடியு சுட்டிக்காட்டியது. ஆனால் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் இந்த திட்டத்தை 10 ஆண்டு களுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்படும் என்று உறுதி யளித்ததை மற்ற சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால் கடந்த 26 ஆண்டுகளில் எந்த முன்னேற்ற மும் செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகள் பறிப்பு இபிஎஸ் 95 - திட்டத்தில் தொழிலாளி சேர்வதற்கான விருப்பத்தை கேட்காமல் சேருவதற்கு கட்டாயப் படுத்தக் கூடாது என்று சி.ஐ.டி.யு சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஒன்றிய அரசு, இ.பி.எஸ்95 திட்டம் ஒரு சிறந்த சமுகநல பாதுகாப்பு திட்டம் என்றும், இதில் பென்ஷன் மட்டுமல்ல, தொழி லாளி விரும்பினால் 1/3 பென்ஷனை விட்டுகொடுத்து (COMUTATION SCHEME) தனது பங்களிப்பில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளலாம் என்றும்; ‘போட்ட முதலீடு திரும்பக் கிடைக்கும்’ (RETURN OF CAPITAL) என்ற பெயரில் 20 ஆண்டுக்கு பிறகு அவரது பென்ஷனை போன்று 100 மடங்கு தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மேலும் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என்றும் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டது. உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டு தொழி லாளர்கள் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் இந்த திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த எல்லா அம்சங் களையும் 2008ல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக ரத்து செய்தது. இபிஎஸ் 95 திட்டத்தில் உள்ள 10(2) ஷரத்தின் படி வழங்க வேண்டிய 2 ஆண்டுகளுக்கான பணிக்கால உயர்வு (SERVICE WIGHTAGE) என்ற கூடுதல் தொகையை 2013 வரை வழங்கவில்லை. இபிஎஸ் பென்ஷனர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கு தொடுத்த பிறகு 2015ல்தான் சட்டத்தில் உள்ள உரிமையை வழங்கியது. இபிஎஸ் 95 திட்டத்தில் 1/3 பங்கு பென்சனை விட்டுக் கொடுத்து கம்யூடேசன் செய்தவர்களுக்கு 100 மாதம் தொகையை முன்பணமாக அளித்து விட்டு 100 மாதம் முடிந்த பிறகும் அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் 1/3 தொகையை பிடித்தம் செய்து வந்தது. இ.பி.எஸ் பென்ஷனர்களின் தொடர் போராட்டத்தின் காரண மாகவும், மத்திய வாரியக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டதாலும் 2020 பிப்ரவரியில் 180 மாதம் முடிந்தவர்களுக்கு முழுபென்ஷன் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தது. குறைந்தபட்ச பென்ஷனாக ரூ.1000கூட பெற முடியாத அவலம் இபிஎஸ் பென்ஷனர்களின் தொடர் போராட்டத் திற்குப் பிறகு மத்தியில் ஆட்சியிலிருந்த மன்மோகன்சிங் அரசு குறைந்தபட்ச பென்ஷனை அமல்படுத்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பகத்சிங் கோஷாரியா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்ட குழுவின் தலைவர், தொழிலாளி செலுத்துவது போன்று ஒன்றிய அரசும் தனது பங்காக பென்ஷன் நிதிக்கு 8.33% பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றும் பென்ஷன் தொகைக்கு செலுத்தப்படும் சம்பள வரம்பை ரூ.6500/-லிருந்து ரூ.15,000/-மாக உயர்த்த வேண்டும் என்றும் குறைந்தபட்ச பென்ஷனாக இடைக்கால நிவாரணமாக ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என்றும், பென்ஷனை பஞ்சப்படியுடன் இணைக்க வேண்டும் என்றும் 2013ல் ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் குறைந்தபட்ச பென்ஷனாக ரூ.1000 மட்டும் 01/04/2014 முதல் வழங்குவதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்ச ரவை 2013 மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. 2014 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு 01/04/2014 என்பதற்கு பதில் 01/09/2014 முதல் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.1000/- வழங்க உத்தரவிட்டது. ஆனால் இ.பி.எஸ் திட்டத்தின் அடிப்படையில் 50 முதல் 57 வயது வரையில் உள்ள குறைக்கப்பட்ட பென்ஷன் வாங்குபவர்களுக்கு ரூ.1000/- வழங்கப் படுவதில்லை. இதனால் இந்தியா முழுவதும் உள்ள 70 லட்சம் பென்ஷனர்களில் இன்றும் 30 லட்சம் பேருக்கு மேல் ரூ.1000/-க்கும் கீழ்தான் பென்ஷன் பெறுகின்றனர். உயர்த்த மறுக்கும் ஒன்றிய அரசு நமது தமிழகத்தை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டங்களில் இபிஎஸ் பென்ஷனர்களின் குறைந்தபட்ச பென்ஷன் உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கை களை அமல்படுத்திட பலமுறை ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில், ஒன்றிய அரசு இபிஎஸ் பென்ஷனர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு உயர் அதிகாரக் கண்காணிப்புக் குழு ஒன்றை 2018ல் அமைத்தது. அந்த குழு தனது பரிந்துரை களை 2019ல் அளித்தது. அதில் குறைந்தபட்ச பென்ஷனை உயர்த்துவதற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மத்திய அறங்காவலர் குழு(CBT) குறைந்தபட்ச பென்ஷனை ரூ.3000%ஆக உயர்த்தவும், ஒன்றிய தொழி லாளர் துறை அமைச்சர் குறைந்தபட்ச பென்ஷனை ரூ.2000 ஆக உயர்த்த 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டு களில் இரண்டு முறை பரிந்துரை செய்துள்ளனர். இ.பி.எஸ் திட்டத்தில் உள்ள ஷரத்து 13(1)ன் அடிப்படையில், பென்ஷன் நிதிக்கு அடிப்படை சம்பளத்தின் உச்சவரம்பின்றி முழு சம்பளத்திற்கு 8.33% பங்களிப்பு அளிக்க விருப்பம் தெரிவித்தால் அதன் அடிப்படையில் தொழிலாளியின் முழு சம்பளத்திற்கு பென்ஷன் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்பதை இபிஎப் நிர்வாகம் அமல்படுத்தவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற பிறகு, தங்களது சம்பளத்திற் கான 8.33% பங்களிப்பை 1955 நவம்பர் முதல் வட்டியுடன் பி.எப். நிர்வாகம் கணக்கிட்டு தெரிவிக்கும் தொகையை செலுத்தி முழு சம்பளத்திற்கு பென்ஷன் பெற்றுக் கொள்ளலாம் என்று 27/03/2017ல் சுற்றறிக்கை வெளியிட்டது. 31/05/2017 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியிட்ட 27/03/2017 சுற்றறிக்கையை இபிஎப் நிர்வாகம் திரும்ப பெற்றது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகளால் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு அனைத்து உயர் நீதிமன்றங்களும் பென்ஷனர்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கின. ஆனால் இபிஎப் நிர்வாகம், உயர்நீதிமன்ற தீர்ப்பு களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை ஏற்க மறுத்த இபிஎப் நிர்வாகமும் ஒன்றிய அரசும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தன. தற்போது அந்த மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது. 2020 மார்ச் மாதம் முதல் உயர் பென்ஷன் வழங்குவதை முன் அறிவிப்பின்றி நிறுத்தியது அரசு. திருத்தங்களும் பாதிப்புகளும் 2014ல் இ.பி.எஸ் திட்டத்தில் பென்ஷன் பங்களிப்புக் கான சம்பள உச்சவரம்பை ரூ.6500/-லிருந்து ரூ.15000/- மாக உயர்த்தியது. இதன் மூலம் இ.பி.எப்க்கு வருவாயை அதிகரித்து கொண்டது. ஆனால் பென்ஷன் சம்பளத்தை கணக்கிடும் போது முன்பிருந்த 12 மாத சராசரி சம்பளம் என்பதை 60 மாத சராசரி சம்பளம் என்று மாற்றியமைத்து பென்ஷன் தொகையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பென்ஷன் கணக்கிடும் காலத்தையும் 3 பிரிவுகளாக பிரித்து அதன் மூலம் பென்ஷன் தொகை குறைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் தன்னிச்சையான இந்த முடிவுகளை எதிர்த்து பென்ஷனர்கள் தொடுத்த வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம், ஒன்றிய அரசு 2014 ல் கொண்டுவந்த இந்த திருத்தங்களை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இ.பி.எஸ் திட்டத்தில் 2014ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் புதியதாக பணியில் சேர்பவர்களில் ரூ.15000க்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யபடாது என்றும், பென்ஷன் திட்டமும் கிடையாது என்றும் திருத்தங்களை செய்துள்ளது. தொழிலாளி வருங்கால வைப்புநிதிக்கு செலுத்தும் 12% பங்களிப்பை 10% சதமாக குறைத்துக் கொள்ள அனுமதிப்பது; இ.பி.எஸ் திட்டதில் உள்ளவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் (NPS) மாற்றி கொள்வதற்கான திட்டத்தை யும் அறிவித்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களை அமல்படுத்துவதன் மூலம் வருங்கால வைப்பு நிதித் திட்டமும், அமைப்பும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது மோடி அரசு. தமிழக அரசுக்கு வேண்டுகோள் இபிஎஸ் 95 பென்ஷனர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷனை ரூ.9000/- மாக உயர்த்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றவும்; கேரள மாநிலத்திலும் புதுச்சேரி மாநி லத்திலும் உள்ளது போன்று இபிஎஸ் பென்ஷனர் களுக்கு மாநில அரசு வழங்கும் முதியோர் பென்ஷன் தொகையையும் சேர்த்து கேரள அரசு வழங்குவது போன்று இபிஎஸ் பென்ஷனர்களுக்கு கூடுதலாக ரூ.1600/- வழங்கிடவும் தமிழக அரசின் நடவடிக்கை யை எதிர்பார்க்கிறோம். ஒன்றிணைந்து போராடுவோம் வருங்கால வைப்புநிதி அமைப்பை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை முறியடித்து இபிஎப்-ஐ பாதுகாக்க பென்ஷனர்களும், இன்றைய தினம் பணியிலிருக்கும் தொழிலாளர்களும், இணைந்து போராட இ.பி.எஸ் பென்ஷன் அறிவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16ல் சூளுரைப்போம்! கட்டுரையாளர் : செயலாளர், சென்னை இபிஎப் ஓய்வூதியர் நலச்சங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக