புதன், 5 ஜனவரி, 2022

"மீண்டும் மஞ்சப்பை" திட்டத்திற்கு ஆளுநர் பாராட்டு - ஆளுநர் உரை பகுதி 2

 

ஆளுநர் உரை பகுதி:2


இயற்கையோடு இயைந்த வாழ்வு என்ற தமிழர்களின் தொன்மையான பண்பாட்டை மீட்டெடுக்கவும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிகளால் உண்டாகும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ‘மீண்டும் மஞ்சப்பை’ என்னும் மக்கள் இயக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு அதிக அளவில் கனிமவளங்களைக் கொண்டிருந்தாலும், அதற்கேற்ற வருவாயை மாநில அரசு பெறுவதில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக கனிமங்களிலிருந்து பெறப்படும் வருவாயில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், சுரங்கப் பணிகள் மேற்கொள்வதற்கும், அரசிற்கு உரிய வருவாயைத் திரட்டுவதற்கும் ‘இயற்கை வள மேலாண்மைத் திட்டம்’ ஒன்று வகுக்கப்படும்.

பல ஆண்டுகளுக்குப் பின் முல்லைப் பெரியாறு அணையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அளவான 142 அடி உயரத்திற்கு நீரை இந்த ஆண்டு தொடர்ந்து பல நாட்கள் தேக்க முடிந்தது. மாண்பமை உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையின்படி அணையின் முழுக் கொள்ளளவான 152 அடியை எய்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

அண்டை மாநிலங்களுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கும் அதே வேளையில், நதிநீர்ப் பங்கீட்டில் தனது உரிமைகளை ஒருபோதும் கைவிடாமல், தனது நியாயமான பங்கிற்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடும். காவிரி ஆற்றில் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை, உழவர்களின் நலன் மீது அக்கறை கொண்ட இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

கிராமப்புரப் பொருளாதாரத்தில் உழவர்களின் வருவாயைப் பெருக்குவதிலும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்வதிலும், கால்நடை வளர்ப்பு வகிக்கும் முக்கியமான பங்கை இந்த அரசு நன்கு அறியும். இலவச கால்நடை மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, குறிப்பாக தொலைதூர கிராமங்களில் 7,760 சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது இந்த அரசின் முக்கியக் குறிக்கோளாகும். தற்போது இலங்கையில் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 மீனவர்களையும் 75 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். தொடர்ந்து ஏற்படும் இந்நிகழ்வுகளுக்கு சுமூகமான தீர்வுகாண, இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க ஆவன செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து நமது மீனவர்களைப் பாதுகாப்பதற்காக, தடையில்லா தகவல் தொடர்பு அமைப்புகளை வழங்க, மாநிலத்தில் உள்ள அனைத்து இயந்திரப் படகுகளிலும் தகவல் தொடர்பு கருவிகளை (transponders) நிறுவ இந்த அரசு திட்டமிட்டுள்ளது. மீன்பிடி குறைவு காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகை ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டில் 1.22 இலட்சம் மீனவர் குடும்பங்களுக்கு 74 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு காலத்தின் போது மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல இயலாததால், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்புகளை ஈடு செய்வதற்காக, ‘இல்லம் தேடி கல்வி’ என்ற முன்னோடித் திட்டம் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் பங்களிப்புடன் தன்னார்வலர்கள் மூலமாக 12 மாவட்டங்களில் முன்மாதிரி அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இத்திட்டம் தற்பொழுது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை, 80,138 இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளைச் சார்ந்த 80,000 அலுவலர்களைப் பயன்படுத்தி, GPS செயலி வாயிலாக முறையாகக் கணக்கெடுத்து 1,73,792 குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் வடிவமைக்கப்படுகிறது என்பதை நமது அரசு நன்கு உணர்ந்துள்ளது. தாய்மொழிப் பற்றும், உலகை வெல்ல உதவும் ஆங்கிலமும் இணைந்த இருமொழிக் கொள்கை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும் சமூகநீதிப் பார்வை, அறிவியல் வழிச் சிந்தனையும், தொழில்முனையும் திறனும் படைத்த இளைஞர் சமுதாயம், கலை, இலக்கியம், விளையாட்டு என பன்முகத்திறன் கொண்ட வெற்றியாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றை முதன்மை இலக்குகளாக முன்வைத்துச் செயலாற்றிட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இந்த உயரிய நோக்கங்களுக்குச் செயல்வடிவம் தந்திடும் வகையில், மாநிலக் கல்வி அமைப்பின் முதுகெலும்பாய்த் திகழும் அரசுப் பள்ளிகளை நவீனமாக்கிட ஒரு மாபெரும் திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 24,345 அரசுத் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms), உயர்ந்துவரும் மாணவர் சேர்க்கைக்கேற்பப் புதிய கட்டடங்கள், 6,992 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள், நவீன அறிவியல் மற்றும் மொழி ஆய்வகங்கள், அனைத்துப் பள்ளிகளுக்கும் அகன்ற அலைவரிசை (broadband) வசதி, தூய்மையான பராமரிப்புடன் கூடிய சுகாதார வளாகங்கள் உருவாக்கப்படும். இவை மட்டுமன்றி, நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிகளும், மாணவர்களுக்கான மென்திறன் வளர்ப்புப் பயிற்சிகளும் வழங்கப்படும்.

மாநிலத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தையும் மேம்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள், அனைத்துப் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களும் மாணவர்களும் பயனடையும் வகையில் உயர்தரத் தகவல் தொழில்நுட்பத் தளங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உயர்கல்வி பாடத்திட்டத்தை மறுசீரமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகின்றது. இது தவிர, தொழில்துறையின் உதவியுடன் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடத் திட்டத்தையும் ஆய்வக வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 8,371 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 181 கோடி ரூபாய் செலவிடப்படும்.

தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கி, நிர்வாகத் திறனை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். பல்வேறு துறைகளின் தரவுகளை, ஒருங்கிணைத்து ஆராய்வதன் மூலம், அரசுத் திட்டங்களின் பலன்களை உரிய பயனாளிகளுக்கு கொண்டு செல்வதே ‘தரவுத் தூய்மைத்’ திட்டத்தின் நோக்கமாகும். வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வையும் மேம்படுத்தி, கோப்புகளின் மீது விரைவாக முடிவெடுக்கவும் மின் அலுவலக முறையை (E-Office) செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் சொத்துகளைத் திறம்பட மேலாண்மை செய்வதற்குத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு ஒன்று செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

தரவு மையங்களில் (Data Centres) 30,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்து, தரவு மைய முதலீடுகளின் முகவரியாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. மேலும், அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கும் தரவு மையங்கள் அமைப்பதை எளிதாக்குவதற்கும் ‘தரவு மையக் கொள்கை-2021’ என்ற புதிய கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றிட இந்த அரசு உறுதியாக உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஏழு மாதங்களில், மூன்று முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியது.

இதன் பயனாக, 56,230 கோடி ரூபாய் முதலீட்டில் 1,74,999 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில், இதுவரை 21,508 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட இத்தகைய பெருமளவு முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது, இந்த அரசின் மீது தொழில்முனைவோர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நற்சான்றாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை, தமிழ்நாடு நிதிநுட்பக் (Fintech) கொள்கை ஆகிய இரண்டு புதிய கொள்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதாரம், 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு இலட்சம் கோடி டாலர் என்ற இலக்கை அடைய இக்கொள்கைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

மருத்துவக் கருவிகள் உற்பத்தித் துறை, ஒரு வளர்ந்து வரும் துறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொழிலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக, ஒரகடத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கருவிகள் பூங்கா ஒன்றை அரசு அமைத்து வருகின்றது. நமது நாட்டிற்கே முன்னோடியாக, ஒரு மாபெரும் அறைகலன் பூங்காவினை (Furniture Park) தூத்துக்குடியில் 1,100 ஏக்கர் பரப்பளவில் இந்த அரசு அமைத்து வருகின்றது. இந்தப் பூங்காவில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பூங்காவின் முதல் கட்டப் பணிகளை இம்மாத இறுதிக்குள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரு பூங்காக்கள் மூலம், கிட்டத்தட்ட மூன்று இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை அளிப்பதிலும் ஒரு முக்கியக் காரணியாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை விளங்கி வருகிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடிகளைக் களையவும், கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும் இந்த அரசு பல விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வணிக வங்கிகள் அதிக கடன் வழங்குவதை ஊக்குவித்து, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு இவ்வரசின் தமிழ்நாடு மாநிலக் கடன் உத்தரவாதத் திட்டம் வழிகோலும்.

வரும் ஆண்டு தொடங்கப்பட உள்ள வேளாண்-தொழில்களுக்கான பெருவழித் திட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் தொழில் கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம், ஐந்து புதிய தொழிற்பேட்டைகளை 241 கோடி ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில், 31 தொழிற்பேட்டைகளில் மனைகளின் விலை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்றம் பெறக்கூடிய தொழில்களாகக் கண்டறியப்பட்ட துறைகளில் நமது மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நவீன தொழிற் பயிற்சிகள் அரசால் தொடங்கப்படும்.

கோவிட் பெருந்தொற்றினால் நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை இந்த அரசு உணர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய தள்ளுபடி தொகையான 160 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. இத்துடன் மின்-வணிக வலைதளம், ‘TNKhadi’ என்ற கைபேசி செயலி போன்ற பல்வேறு புதுமையான நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது.

குறைந்த மின் அழுத்தத்தையும், கூடுதல் மின்சுமையைத் தவிர்க்கவும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் 8,905 மின்பகிர்மான மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என இந்த அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரிப் பற்றாக்குறை நிலவியபோதும், பெருமளவில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டபோதும், தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டதற்கு இந்த அரசின் சீரிய முயற்சிகளே காரணமாகும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மக்களாட்சியினை கடைக்கோடியிலும் உறுதிப்படுத்துவதே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். இவ்வரசு பதவியேற்றவுடன், நீண்டகாலமாக நடைபெறாமலிருந்த ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியது. மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 02.10.2021 அன்று, அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைகள் நடைபெற்றன. நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தல்களையும் விரைவில் நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம், கிராமங்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்த அரசு புத்துயிர் அளித்துள்ளது. இந்த ஆண்டு 1,997 ஊராட்சிகளில் 1,200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையும், பகுத்தறிவு சிந்தனையையும் ஊக்குவிப்பதற்காக 4,116 கிராமப்புர நூலகங்கள் 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகின்றன. 1997 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டுவரை கட்டப்பட்ட 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு முதல், படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.

நாட்டில் நகர்ப்புரங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். நகர்ப்புரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு தீர்மானித்துள்ளது. சாலைகள்,

தெரு விளக்குகள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், நீராதார அமைப்புகள், மின் மயானங்கள் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ‘கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம்’ அரசால் செயல்படுத்தப்படுகின்றது. வளர்ச்சித் திட்டங்களில் மக்களை நேரடியாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு, நிறைவாகச் செயல்பட்ட ‘நமக்கு நாமே திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புர ஏழைமக்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டம்’ அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், சமூகப் பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல் பொதுச்சொத்துக்களை உருவாக்கிப் பராமரிக்கவும் உதவும். இத்திட்டத்தில், இதுவரை, 31,620 நபர்கள் பணிபுரியக் கண்டறியப்பட்டு, 18,526 நபர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னையின் வளர்ச்சியில் அரசு தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக, 500 கோடி ரூபாய் மதிப்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம், 430 மில்லியன் டாலர் மதிப்பில் சென்னை மாநகரக் கூட்டாண்மைத் திட்டம், 905 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மாநகரத் திறன்மிகு போக்குவரத்து அமைப்பு போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி சாலைகள், போக்குவரத்து, வெள்ளநீர் வடிகால்கள், குடிநீர் வழங்கல், பொழுதுபோக்கு வெளிகள் உள்ளிட்ட சமூகக் கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகின்றது.

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை குடிசைகளற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்டமாகும். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்லாமல், குடிசைகளில் வாழும் மக்களின் வாழ்விடத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவது என்ற அரசின் நோக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயர் ‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என மாற்றப்பட்டது. நகர்ப்புர ஏழைமக்கள் குறைந்த விலையில் குடியிருப்புகளைப் பெறும் வகையில், பயனாளிகளின் பங்களிப்புத் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தொகையை எளிதாக தவணை முறையில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஈடுபாட்டுடன் குடியிருப்புகளை முறையாகப் பராமரிப்பதை உறுதி செய்ய, ‘நம் குடியிருப்பு நம் பொறுப்பு’ என்ற திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பொருளாதாரத்தையும், சமூக வளர்ச்சியையும் உயர்த்துவதற்கு மாநிலத்திலுள்ள சாலைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இந்த அரசு கவனம் செலுத்துகிறது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், இந்த ஆண்டில், 2,989 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 894 கி.மீ. சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னைப் பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 407 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பரங்கிமலை - மேடவாக்கம் சாலை சந்திப்பில் கீழ்பாலம், பரங்கிமலை – பூந்தமல்லி - ஆவடி சாலையில் பல்வழி மேம்பாலம், மத்திய கைலாச சந்திப்பில் மேம்பாலம் என மூன்று முக்கியத் திட்டங்களுக்கு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட, மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தினால், கடந்த நான்கு மாதங்களில் மகளிர் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், பெண்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும். ஒருங்கிணைந்தப் பன்முறை நகரப் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்வதற்கும், பயணிகளுக்குச் செல்லிடம் வரை போக்குவரத்து இணைப்பை வழங்கவும், சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பார் போற்றும் வரலாறு, செழுமையான பண்பாடு, இயற்கை வளங்களின் அழகியல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதன் வாயிலாக, மாநிலத்தில் சுற்றுலா மூலம் பொருளாதாரம் பொலிவு பெறுவதற்கான திட்டம் அரசால் வகுக்கப்படும். இந்த ஆண்டு, சாகச சுற்றுலாவை உள்ளடக்கிய புதிய சுற்றுலாக் கொள்கை வெளியிடப்படும்.

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய, ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து இலட்சம் ரூபாயை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத்தொகையாக அரசு வைத்து வருகின்றது. வைப்பீடு செய்யப்பட்ட அத்தொகை குழந்தைகள் 18 வயதை எட்டும்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக 287 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் இதுவரை 7,513 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ், நிவாரணம் வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இழப்பீட்டுத் தொகை வழங்கவும், ‘தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு நிதி’ என்ற ஒரு சிறப்பு நிதியை அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இதுவரை 103 குழந்தைகளுக்கு இரண்டு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில், பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்குப் பணி நியமன ஆணைகளை இந்த அரசு வழங்கியுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 1,628.61 கோடி ரூபாய் மதிப்பில் 432.82 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ‘ஒரு கால பூஜை’ திட்டத்தில் 12,959 கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக 1,000 ரூபாயை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில்களிலும், கோயில்களுக்குச் சொந்தமான திருமண அரங்குகளிலும் மாற்றுத் திறனாளிகளின் திருமணங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயில்களின் வரலாறு, கட்டடக்கலை, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட செந்தமிழ் இலக்கியங்கள் குறித்த புத்தகங்களை வெளியிடுவதற்கு, நவீன வசதிகளுடன் பதிப்பகப் பிரிவு இந்து சமய அறநிலையத் துறையால் அமைக்கப்படும். கோயில்களிலும் மடங்களிலும் கிடைக்கப்பெறும் அரிய பனைவோலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோயில்களின் வரலாறு, மரபு, பண்பாடு, தமிழ் மொழி தொடர்பான நூல்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தும் புத்தகக் கடைகளை முக்கிய கோயில்களில் அமைத்திட ஊக்குவிக்கப்படும். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமைவாய்ந்த திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், புனரமைத்துப் பாதுகாத்திடவும் உரிய ஆலோசனைகளை வழங்கிட, மிகுந்த அனுபவம் வாய்ந்த மத்திய, மாநிலத் தொல்லியல் துறைகளிலிருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் தொல்லியல் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருக்கோயில் நிலங்களை மீட்டெடுப்பதிலும், திருக்கோயில் சொத்துகளை சிறப்பாக மேலாண்மை செய்வதிலும், இந்த அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.

அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகமானது 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவியல்ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, நவீன வசதிகளுடன்கூடிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. தொல்லியல் களங்களைப் பாதுகாக்கும் வகையில், தொல்லியல் களங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தடைவிதித்துள்ளது.

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளோருக்கு சுயமரியாதை, கண்ணியம் மற்றும் சமூக நீதியை உறுதிப்படுத்துவதே திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நரிக்குறவர், இருளர் ஆகியோர் குடும்பங்களின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றியது போன்ற செயல்கள், விளிம்பு நிலையில் உள்ளோர் மீது அவர் வைத்திருக்கும் தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்துகின்றது.

பட்டியலின, பழங்குடி மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தன்னாட்சி அதிகாரங்களுடன், சட்டப்படி அமைக்கப்பெற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை அரசு உருவாக்கியதன் மூலம், அவர்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை உயர்த்துதல், புதிய விடுதிகளுக்கு ஒப்புதல் அளித்தல், புதிய பயிற்சித் திட்டங்களைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இடையறா முயற்சியின் பயனாக இளநிலை மற்றும் நிறைநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய அளவிலான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBCs) 27 சதவீதம் இட ஒதுக்கீடு சாத்தியமானது. இதுபோன்றே, அனைத்து தொழிற் படிப்புகளிலும் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். இவ்வாறு, நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே சமூக நீதிக் கருத்துகளை முன்வைத்து மானுடம் வெல்லும் பாதையில் மற்ற மாநிலங்களை வழிநடத்திச் செல்லும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பொறுப்பை இந்த அரசு நிறைவேற்றும்.

பொதுவாக, நுழைவுத் தேர்வுகள் கிராமப்புர மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே, தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றன என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

சிறுபான்மையினரின் நலனையும், வளர்ச்சியையும் பேணிக் காப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து ஹஜ், ஜெருசேலம் போன்ற புனிதப்பயணம் மேற்கொள்வோருக்கு மானியத்தை அரசு தொடர்ந்து வழங்கும். சிறுபான்மையினரை கவலையடையச் செய்த குடியுரிமை திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தின் நோக்கத்தை நிறைவேற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிய வேலைவாய்ப்புகளைக் கண்டறியும் நோக்கத்தோடு, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சமவாய்ப்புக் கொள்கையை வெளியிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளைக் கண்டறிய, மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையம் ஒன்றை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

மாநிலத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க இந்த அரசு விழைகிறது. உலக அளவில் நம் மாநில விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரண்டு கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும், பணி ஆணையையும் வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தினை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் விளையாட்டு வீரர்களுக்கான அரசுப் பணி இடஒதுக்கீட்டில் சிலம்பாட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பதவியேற்றபின், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, எதிர்பாராத மழைப்பொழிவு என எதிர்கொண்ட அனைத்துச் சோதனைகளையும் வென்று அவற்றை சாதனைகளாக மாற்றி, மக்களின் நலனிற்காக அயராது செயல்படும் அரசாக இந்த அரசு இயங்குகின்றது. இதே வேகத்துடனும், துல்லியத்துடனும் ஒவ்வொரு நாளும் செயல்படுவோம் என்று உறுதியேற்கிறோம். சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, அன்புடைமை போன்ற தத்துவங்களை இந்த அரசு கடைப்பிடித்து வருகின்றது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய உன்னதமான தலைவர்களின் சிந்தனைகள் இந்த அரசின் வழித்தடத்தைத் தீர்மானிக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி, இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக மட்டுமன்றி, தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக நமது மாநிலத்தை உருவாக்குவோம்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, காலத்தை வென்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளுடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

வாழிய செந்தமிழ்!

வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக