வாழ்வியல், வேலையும் வாழ்வும், www.arunchol.com 10 நிமிட வாசிப்பு நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி? ஸ்ரீதர் சுப்ரமணியம் 22 Jan 2022 உங்கள் பயோடேட்டாவைத் திறன்பட, தனித்துவமாக உருவாக்கிவிடுகிறீர்கள். முகப்புக் கடிதமும் தெளிவாக எழுதி அனுப்பிவிடுகிறீர்கள். உங்கள் பயோடேட்டா மற்றும் கடிதத்தைப் படித்து வியந்து உங்களை நேர்முகத் தேர்வுக்கும் அழைத்துவிடுகிறார்கள். அப்புறம் என்ன செய்வீர்கள்? நேர்முகத் தேர்வுக்குச் சென்ற இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? நேர்முகத் தேர்வுக்கு, குறித்த நேரத்துக்கு முன்னரே அலுவலகத்தை அடைய வேண்டியது அதிமுக்கியமான முதல் தேவை. அலுவலகம் எங்கே இருக்கிறது என்று தெரியாவிடில், கூகுள் மேப்பில் முன்னரே செக் செய்துகொள்ளுங்கள். அங்கே ஓலா டாக்ஸிகள் வருவார்களா, வண்டிக்கு பார்க்கிங் எங்கே கிடைக்கும், பஸ் வசதிகள் சரிவர கிடைக்கின்றனவா என்பதையெல்லாம் விசாரித்து வைத்துக்கொள்ளுங்கள். காலை 10 மணிக்கு இன்டர்வியூ எனில் 9.30 மணிக்கே அங்கே இருக்கும்படி திட்டமிட்டுக்கொள்ளுங்கள். ஒழுங்காக முகத்தை மழித்துவிட்டு அல்லது தாடி மீசையைத் திருத்தம்செய்துகொண்டு, நல்ல உடைகளை அணிந்து செல்லுங்கள். ஆடையில், தாடியில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை பெறுவதற்கான ஆர்வம் உங்களுக்கு நிஜமாகவே இருக்கிறது என்பதை நீங்கள் வாயைத் திறப்பதற்கு முன்னமே உங்கள் தோற்றம் சொல்லிவிடும் என்பது வேலையை அளிக்கும் மனிதவளத் துறையினரின் நம்பிக்கை. வேலையில் சேர்வதற்கான ஆர்வம் உங்களிடம் இருக்கிறது என்பதை இன்னொரு முக்கிய விஷயம் காட்டும். எனது இன்டர்வியூக்களில் நான் கேட்கும் இரண்டாம் கேள்வி, 'எங்கள் நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?' பாதிப் பேர் இதிலேயே கழன்றுவிடுவார்கள். அவர்களுக்கு நிறுவனத்தின் பெயரைத் தாண்டி வேறு எதுவுமே தெரிந்திருக்காது. இன்னும் பலர் நிறுவனத்தின் பெயர், அவர்கள் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவை தாண்டி எதுவும் தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் எனில் அந்த நிறுவனத்தில் உங்கள் வாழ்வின் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளைக் குறைந்தபட்சம் செலவிடப்போகிறீர்கள் என்று அர்த்தம். எல்லாம் ஒழுங்காகப் போனால், அந்த நிறுவனத்திலேயே ரிடையர் ஆகும் வரைகூடப் போகலாம். இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஒரு விஷயத்தில் என்ன ஏது என்று விசாரிக்காமலேயே வேலைக்கு சேர்ந்துவிட முடியுமா என்ன? எனவே நீங்கள் இன்டர்வியூவுக்குப் போகும் நிறுவனம் குறித்து ஒரு சிறிய ஆராய்ச்சிசெய்யுங்கள். முப்பது வருடங்களுக்கு முன்னர் வரை ஒரு நிறுவனம் குறித்து தெரிந்துகொள்வதற்குப் பெரிய வாய்ப்பில்லாத நிலை இருந்தது. இன்றோ உலகம் இணையத்தில் ஐக்கியமாகி கையடக்கமாக சுருங்கிவிட்டது. கூகுளே உங்களுக்கு முக்கால்வாசி தகவல்களை கொடுத்துவிடும். எப்படியும் நேர்முகத் தேர்வுக்கு ஓரிரு நாட்கள் அவகாசம் கிடைக்கும். அப்படி இல்லையேல் அவகாசம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்தின் மனித வளத் துறையில் இருந்து 'இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பி இன்டர்வியூவுக்கு வர்றியா?' என்று யாரும் கேட்க மாட்டார்கள். அப்படி எந்த நிறுவனமாவது கேட்டால் அந்த ஒரு காரணமே போதும், அந்த நிறுவனத்தில் நீங்கள் சேராமல் நிராகரிப்பதற்கு! பணிவுடன் மறுத்துவிடுங்கள். 'எனக்கு இன்டர்வியூ தயாரிப்புக்கு கால அவகாசம் தேவை' என்று வெளிப்படையாகவே கேட்டு நேரம் வாங்குங்கள். அந்தப் பதிலேகூட உங்களின் மதிப்பைக் கூட்டும் பின்னர் அப்படிப் பெற்ற நேரத்தை நெட்பிளிக்ஸ்சில் வீணாக்காமல் ஒழுங்காக நேர்முகத் தேர்வுக்கான முன் தயாரிப்புக்குச் செலவிடுங்கள். நிறுவனம் குறித்து அனைத்து விபரங்களையும் படித்துக் குறித்துக்கொள்ளுங்கள். நிறுவனத்தை யார் எப்போது நிறுவினார்கள்? அவர்களின் முக்கிய தயாரிப்புகள், சேவைகள் என்னென்ன? அவர்களின் முக்கியமான கஸ்டமர்கள் யார்? ஆண்டு வருமானம் எவ்வளவு? மொத்தம் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள்? நிறுவனம் வலிமை பெற்றுவருகிறதா அல்லது பலவீனமடைந்துவருகிறதா? அப்படி அவர்கள் பெற்றுவரும் வலிமைக்கு அல்லது ஆகிவரும் பலவீனத்துக்கு என்ன காரணம்? இதுவரை அவர்கள் வரலாற்றில் ஏதாவது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்களா? வெளிநாடுகளில் அவர்கள் சேவைகள் விரிவடைந்து இருக்கிறதா? பொது நிறுவனம் எனில் தற்போதைய பங்கு மதிப்பு என்ன? இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நான் சொல்லவருவது உங்களுக்கு இந்நேரம் புரிந்துவிட்டிருக்கும் என்று நம்புகிறேன். இதையெல்லாம் ஒரு நோட்டில் குறித்துக்கொள்ளுங்கள். மனப்பாடம் எல்லாம் செய்ய வேண்டாம். அந்தக் குறிப்புகளை இன்டர்வியூவுக்கு எடுத்துக்கொண்டேகூட போகலாம். கம்பெனி குறித்த கேள்விகளில் சில தரவுகள் நினைவில் வரவில்லை எனில், அவர்கள் எதிரிலேயே அந்த நோட்ஸைத் திறந்து பார்த்து, 'சென்ற ஆண்டு உங்கள் நிறுவனத்தின் வருவாய் ஏழு கோடியே எழுபத்து ஐந்து லட்சம் வந்திருக்கிறது!' என்று சொல்லலாம். தவறே இல்லை. சொல்லப்போனால், "எவ்வளவு பொறுப்பாக தயார் செய்து கொண்டு வந்திருக்கிறான்/ள் பார்" என்று உங்கள் மீது மரியாதை கூடவே செய்யும். அடுத்து இதர கேள்விகளுக்குத் தயார்செய்ய வேண்டும். பழைய தமிழ்ப் படங்களில் இன்டர்வியூ காட்சிகளில் பொது அறிவுக் கேள்விகள் கேட்பதாகக் காட்டுவார்கள். தமாசுக்காக 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?' போன்ற கேள்விகள் கேட்பதாகக்கூட காட்சிகள் வரும். இன்றைய நவீன தனியார் நிறுவனங்களில் இதெல்லாம் கிடையாது. ஜிம்பாப்வேயின் ஜனாதிபதி யார் என்பதெல்லாம் அவர்களுக்கு தேவையே இல்லை. உங்கள் சிறப்புத் திறன் எதுவோ அது சார்ந்த கேள்விகள்தான் பெரும்பாலும் கேட்பார்கள். அதிலும் இரண்டு வகை கேள்விகள் உள்ளன. அறிவு-சார் கேள்விகள் (Knowledge Questions) திறன்-சார் கேள்விகள் (Competency Questions) அறிவு என்பது ஒரு துறை அல்லது தொழில்நுட்பம் குறித்து நம் மூளையில் இருக்கும் தகவல்கள். திறன் என்பது அந்தத் தகவல்களை நாம் நமது வேலையில் எப்படிப் பயன்படுத்துகிறோம். எந்த அளவுக்கு வீரியத்துடன் அவற்றைப் பயன்படுத்தி வேலையை முடிக்கிறோம் அல்லது பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்பது குறித்தது. உங்களுக்கு ஜாவா எனும் கணினி மொழி தெரிந்திருக்கலாம். அதில் உள்ள அனைத்து ஆணைத் தொடர்களும் அத்துப்படியாக இருக்கலாம். ஆனால், அதனை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம். ஒரு ஜாவா ஆணைத்தொடரில் ஏதாவது பிழை இருந்தால் அதனை எவ்வளவு விரைவில் கண்டறிகிறோம், எவ்வளவு சிக்கனமாக புரோகிராம் எழுதி ஒரு வேலையை முடிக்கிறோம் போன்ற விஷயங்கள்தான் உங்கள் திறனை முடிவுசெய்கின்றன. ஒரு நிறுவனத்துக்கு உங்கள் அறிவைவிடத் திறன்தான் முக்கியமாக இருக்கும். காரணம் இன்று அறிவு என்பது இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஒரே ஒரு கூகுள் தேடலில் ஜாவாவின் மொத்த அறிவும் உங்கள் திரையில் மினுமினுக்கும். ஆனால், அதை எப்படித் திறன்பட பயன்படுத்தி உங்கள் நிறுவனத்தின் தேவைகளை எதிர்கொள்வது என்பதை கூகுள் சொல்லாது. அதற்குத்தான் நீங்கள் வேண்டும். எனவே உங்கள் பதில்கள் அறிவு-சார் பதிலாக இல்லாமல், திறன்-சார் பதிலாக இருக்க வேண்டும். நவீன யுகத்தில் இன்டர்வியூ செய்பவர்களுக்கேகூட பயிற்சி கொடுக்கிறார்கள். கேள்விகளை எப்படி அமைக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களைச் சோதிக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. அதேபோல நீங்களும் தகுந்த பதில்களைத் தயாரித்துக்கொண்டுபோனால் வெற்றிகரமாகக் கேள்விகளை எதிர்கொள்ளலாம். 'Competency-based questions' என்று கூகுள்செய்து பாருங்கள். இன்டர்வியூவில் பங்கெடுக்கும் முன்னர், நீங்களே ஒரு நேர்முகக் தேர்வாளராக மாறி கேள்விகளை உருவாக்குங்கள். அந்தக் கேள்விகளை உங்கள் கணினியில் அல்லது நோட்டுப் புத்தகத்தில் எழுதி அதற்கு பதில்களை யோசித்து உருவாக்குங்கள். அந்தப் பதில்கள் திருப்திகரமாக உள்ளனவா என்று நீங்களே சுய விமர்சனத்துக்கு உள்ளாக்குங்கள். உங்கள் நண்பர் அல்லது உடன்பிறப்பு யாராவது முன்வந்தால் அவர்களிடம் கேள்விகளைக் கொடுத்து இன்டர்வியூவை நிஜமாகவே நடத்த சொல்லலாம். மொபைலில் அந்த 'ரிகர்சல் இன்டர்வியூ'வை ரெகார்ட் செய்து பின்னர் கேட்டு, அதில் எங்கெங்கே தடங்கல்கள் வந்தன, எந்தக் கேள்விக்கு பதில் மொக்கையாக தொனித்தது என்று கண்டுபிடித்து அதற்கான பதில்களைத் திருத்தி எழுதலாம் அதற்காக அந்தப் பதில்களை உட்கார்ந்து மனப்பாடம் செய்துவிடாதீர்கள். இன்டர்வியூவில் பதில்கள் தங்கு தடையற்று வந்தே ஆக வேண்டும் என்பதில்லை. மனனம் செய்து பேசினால் நீங்கள் ஒப்பிக்கிறீர்கள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்துவிடும். மாறாக, உங்கள் பதில் இயல்பாக வெளிப்பட வேண்டும். அப்படிப்பட்ட இயல்பான பதிலில் தயக்கங்கள், தடங்கல்கள் வருவது இயற்கைதானே. எனவே அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். சொல்லப் போனால், நீங்கள் நன்கு தயாரித்திருந்த கேள்வியையே இன்டர்வியூ செய்பவர் கேட்டாலும்கூட உடனே சட்டென்று பதில் சொல்லாமல் கொஞ்சம் யோசிப்பதுபோல 'பாவ்லா' காட்டி விட்டு பின்னர் ஏதோ நினைவுக்கு வந்ததுபோல பேச ஆரம்பியுங்கள். நீங்கள் யோசிக்கும் அந்த சில கணங்கள் 'பாத்தியா? எப்படி கில்லி மாதிரி கேள்வி கேட்டேன்!' என்று இன்டர்வியூ செய்பவர் மகிழலாம். அந்த சந்தோஷத்தை ஏன் கெடுப்பானேன்? நேர்முகத் தேர்வு நடக்கும்போது கேள்வி கேட்பவருக்கு முன்னுரிமை கொடுங்கள். அதாவது, நீங்கள் பிஸியாக பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவர் இடைமறித்தால் உடனே நிறுத்திவிடுங்கள். அவர் அடுத்த கேள்விக்குப் போய்விட்டால் நீங்களும் அவருடன் அடுத்த பதிலுக்குப் போய்விடுங்கள். ‘நான்தான் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேனே; என்னப்பா அவசரம்!’ என்று முதல் பதிலை முழுமையாக முடிக்க எண்ணாதீர்கள். கேட்பவருக்கு உண்மையில் உங்கள் பதில் தேவையே இல்லை. உங்களுக்குப் பதில் தெரிந்திருக்கிறதா இல்லையா என்று புரிந்துகொள்வது மட்டும்தான் தேவை. இவனுக்குப் பதில் தெரிந்திருக்கிறது என்ற புரிதல் கிடைத்துவிட்டால் அவர் மேலும் நேர விரயம் செய்ய வேண்டாம் என்று அடுத்த கேள்விக்கு போக முயற்சிக்கலாம் அல்லது நீங்கள் ஒரே பதிலை நீட்டி முழக்கி வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருக்கலாம். அதை நிறுத்திவிட முனையலாம். எப்படி இருந்தாலும் அவர் இடைமறித்தவுடன் நீங்கள் பேசுவதை நிறுத்தினால் அது அவருக்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். இரு தரப்பிலும் நேரமும் மிஞ்சும். நேர்முகத் தேர்வுகள் பல நேரங்களில் மன அழுத்தங்கள் உருவாக்கும் அனுபவமாகப் பலருக்கு இருக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள தயாரித்தல்களை பின்பற்றினால் அந்த மன அழுத்தம் பெருமளவு விலகி மிகுந்த தன்னம்பிக்கையுடன் நம்மால் நேர்முகத் தேர்வுகளை அணுக இயலும். அப்படி அணுகும்போது வெற்றி கிடைப்பதான் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது. உறுதியுடன் உழைப்பையும் மேற்கொள்ளுங்கள். தன்னம்பிக்கை அதிகரித்து வெற்றியை உரித்தாக்குங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக