பெருந்தகையீர், வணக்கம். வரைவு தேசிய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு (Draft NHEQF) குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது கருத்தை ஒன்றிய அரசிற்கு அனுப்பி உள்ளது. அந்த கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிக் கட்டமைப்பு (Draft NHEQF) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்காத ஆவணமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில சட்டமன்றங்கள் இயற்றியுள்ள சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் இனி ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படியே செயல்பட முடியும். பல்கலைக்கழக உரிமையாளராக மாநில அரசுகள் இருக்கலாம், அதன் நிர்வாக, கல்வியியல் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்படும்.
அரசுக் கல்லூரிகள் பத்தாண்டுகளில் (2030க்குள்) பல்துறைப் பாடப்பிரிவுகள் (multi disciplinary) கொண்ட கல்வி, நிதி உள்ளிட்ட நிர்வாகத் தன்னாட்சி பெற்ற உயர் கல்வி நிறுவனமாக மாறவேண்டும் அல்லது தனக்கு ஏற்பு தந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து விட வேண்டும்.
தமிழ் நாடு அரசு கல்லூரிகளுக்கு / அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு அரசு நிதி போதிய அளவு தரவில்லை என்றால் இத்தகைய மாற்றம் எவ்வாறு சாத்தியப்படும். தற்போது உள்ள கல்லூரிகளில் மூன்றில் இரண்டு பங்கு கல்லூரிகள் பத்தாண்டு முடிவில் (2030) மூடப்படும் என்பதே இதன் விளைவாக இருக்கும்.
நான்காண்டு பட்டப்படிப்பு, எந்த பட்ட (UG Degree Course) படிப்பில் சேரவும் "நீட்" போன்ற தேர்வு உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான கூறுகளைக் கொண்ட ஒரு வரைவு,
மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சர்களிடம் எந்தவித விவாதமும் நடத்தாமல் நடைமுறைப்படுத்த முயல்வது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
மாநிலங்கள் நகராட்சி நிலைக்கு சுருக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர், அவ்வாறு நடக்க இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாத்தியம் இல்லை என்று கூறினார்.
நகராட்சி நிலை என்ற அச்சத்தையும் கடந்து, ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை நடைமுறைப் படுத்தும் முகவர் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படும் ஆபத்தை வரைவு தேசிய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு (Draft NHEQF) உணர்த்துகிறது.
பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் இந்திய அரசின் உயர் கல்வித் துறை இந்த வரைவை நடைமுறைப் படுத்த தீவிரம் காட்டாமல் அனைத்து மாநிலச் சட்டப் பேரவையிலும் விவாதித்து, அதன் கருத்துக்களை துறைச் சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு தந்து, அதன் அறிக்கையை நாடாளுமன்றம் விவாதித்தப் பின்னரே இறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பு. பா பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
Click here for download pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக