வெள்ளி, 30 செப்டம்பர், 2022
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வருமா பழைய பென்ஷன் திட்டம்? விகடன் கட்டுரை...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்- ஆசிரியர் மாநாட்டில், 'வாழ்வாதாரப் பழைய பென்ஷனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க, 'நிதிநிலை சீரடைந்ததும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று உறுதி அளித்துள்ளார்.
"பழைய பென்ஷனை மீண்டும் கொண்டு வருவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன" எனத் தமிழக நிதியமைச்சர்
பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், கடந்த மாதம் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
"பழைய பென்ஷனை மீண்டும் கொண்டு வருவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று தமிழக முன்னாள் நிதிச் செயலாளர் ஒருவரும், பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணர் குழுவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வரின் இந்த வாக்குறுதியானது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்களிடம் கொஞ்சம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்
பழையது போய், புதியது வந்தது எப்போது? ஆங்கிலேய ஆட்சியில் 1871-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட 'பழைய பென்ஷன்' எனப்படும் வரையறுக்கப்பட்ட பயன் தரும் பென்ஷன் (Defined Benefit Pension), தமிழக அரசு மற்றும் மத்திய அரசில் 2003-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அதாவது, கடந்த 26.06.2001-ல் பென்ஷனை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை பரிந்துரை செய்தது. இதன் விளைவாக, சி.பி.எஸ், என்.பி.எஸ் என்கிற இரு திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
சி.பி.எஸ்*
இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழக அரசின் பென்ஷனுக்கான செலவினங்கள் அதிகமாக உள்ளது என்பதால், 2002-03-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பின்படி, 01.04.2003 முதல் சி.பி.எஸ் (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்ததால், பழைய பென்ஷன் முடிவுக்கு வந்தது. சி.பி.எஸ் திட்டத்தை தமிழக அரசின் டாடா பிராசஸிங் சென்டர் பராமரிக்கிறது. சி.பி.எஸ்ஸில் கட்டப்படும் பணம் முழுவதும் தமிழக அரசுக் கணக்கில் (Public account) உள்ளது.
தமிழக அரசு சி.பி.எஸ் பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அதாவது, 01.01.2004 முதல் மத்திய அரசும் தன் ஊழியர்களுக்கான (பங்களிப்பு) நேஷனல் பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. ஊழியர்களின் மாதாந்தர பங்களிப்பு 10% மத்திய அரசின் பங்களிப்பு 14% இவை இரண்டும் சேர்ந்த 24% தொகை மத்திய அரசின் (Public account) கணக்கில் இல்லை. ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Pension Fund Regulatory and Development Authority) பராமரிப்பில் என்.பி.எஸ் டிரஸ்டில் உள்ளது.
பழைய பென்ஷனுக்கு இணையாக எல்லா வசதிகளும் என்.பி.எஸ்ஸிலும் உண்டு 01.04.2004 முதல் 31.03.2019 வரை என்.பி.எஸ் திட்டத்துக்கான தனது பங்களிப்பாக 10% தொகையை மட்டுமே மத்திய அரசு தன் ஊழியர்களின் கணக்கில் செலுத்திவந்தது. அவ்வப்போது எழுந்த 'பழைய பென்ஷன்' கோரிக்கையை சமன்படுத்தும் விதமாக 01.04.2019 முதல் என்.பி.எஸுக்கான தனது மாதாந்தர பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்தியது, மத்திய அரசு. என்.பி.எஸ் திட்டத்தில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு, மத்திய அரசின் பழைய பென்ஷன் திட்டத்தைச் சார்ந்த ஊழியருக்கு உள்ளது போன்றே பணிக்கொடை வழங்கப்படுகிறது.
பணியில் உள்ள என்.பி.எஸ் ஊழியர்களுக்கு உடல் இயக்கம் பாதிக்கப்பட்டாலோ, மூளை செயல்திறன் இழந்து போனாலோ, பழைய பென்ஷன்தாரர்களுக்கு உள்ளது போலவே இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension) உண்டு. பணியில் உள்ள என்.பி.எஸ் ஊழியர் இறந்துபோகும் பட்சத்தில் அவரின் குடும்பத்துக்கு
குடும்ப பென்ஷன் உண்டு.ஜி.பி.எஃப்-க்கு இணையாக கிடைக்கும் நன்மைகள் என்.பி.எஸ்ஸில் கணக்கு II-லும் (Tier II Account) கிடைக்கும். ஆக மொத்தம், பழைய பென்ஷனுக்கு இணையாக எல்லா வசதிகளும் என்.பி.எஸ்
திட்டத்திலும் உண்டு.
ஆண்டு முழுக்க பென்ஷன் பெற என்ன செய்யலாம்?*
ஓய்வு பெறும்போது என்.பி.எஸ் மூலம்
கிடைக்கும் தொகையை என்.பி.எஸ்ஸின் அன்யூட்டி திட்டத்தில் டெபாசிட் செய்தால், மாதம் தோறும் பென்ஷன் போல ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக் கும். அவ்வாறு கிடைக்கும் அன்யூட்டி தொகை ஓய்வு பெறும் தேதியில் பழைய பென்ஷன்தாரர் பெறும் பென்ஷனுக்கு இணையாகவும் இருக்கலாம். ஆனால், அன்யூட்டியில் வருடாந்தர உயர்வை எதிர் பார்க்க முடியாது. வாழ்நாள் முழுக்கக் கிடைக்கும் தொகை ஒரே அளவாகவே இருக்கும். ஆனால், செலவு ஏறுமுகமாக இருக்குமே! தவிர, சம்பள கமிஷன் (Pay Commission) உயர்வு, அகவிலைப்படி உயர்வு என எதுவும் என்.பி.எஸ்ஸில் கிடைக்காதே என்பது அரசு ஊழியர்களின் கவலை
அரசு ஊழியர்களுக்குக் கொண்டாட்டம்; அரசுக்கு..*?அகவிலைப்படி தரப்படும் போதெல்லாம் 'பழைய பென்ஷன் மூலம் கிடைக்கும் தொகை உயர்ந்துகொண்டே போகும். சம்பள கமிஷன் வந்தால் 'ஓஹோ' என்று எகிறும். இதனால் அரசு ஊழியர்களுக்குக் கொண்டாட்டம். ஆனால், அரசுத் தரப்புக்குத் திண்டாட்டம். கடந்த காலத்தில் பழைய பென்ஷன் மூலம் கிடைத்த தொகை எப்படி உயர்ந்து வந்தது என்பதைப் பாருங்கள்...
1984-ல் குறைந்தபட்ச பென்ஷன் (235+12) ரூ.247 மட்டுமே. தற்போதைய குறைந்தபட்ச பென்ஷன் (7850+2669+300) ரூ.10,819.
செப்டம்பர் 1984-ல் அதிகபட்ச பென்ஷன் (1500+54) ரூ.1,554 மட்டுமே. தற்போதைய அதிகபட்ச பென்ஷன்
(1,12,500+38250+300) ரூ.1,50,780.
எகிறிய குடும்ப பென்ஷன்...*
அதுமட்டுமல்ல, 1.7.1960-க்குமுன் ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப பென்ஷன் இல்லை.8.2.1971 முதல் குறைந்தபட்ச குடும்ப பென்ஷன் ரூ.50; அதிகபட்சம் ரூ.300-தான்.31.12.2015 வரை அதிகபட்ச குடும்ப பென்ஷன் (23100+26,796) ரூ.49,896 மட்டுமே. ஆனால், 01.01.2016 முதல் அதிகபட்ச (உயர்த்தப் பட்ட) குடும்ப பென்ஷன் ரூ.1,12,500. இத்துடன் முடிந்ததா என்றால், இல்லை. பணிக் கொடைக்காக அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்ய வேண்டி யிருக்கிறது.
அதாவது, * 01.01.1996-ல் 3.5 லட்சம்; 01.01.2006-ல் 10 லட்சம்: 01.01.2016-ல் 20 லட்சம்; தற்போதைய 38% அகவிலைப்படி 50% என்ற அளவை எட்டிவிட்டால் அதிகபட்ச பணிக்கொடை ரூ.25 லட்சமாகும்.பழைய பென்ஷன் வருமா? பழைய பென்ஷனைக் கொண்டுவருவதில் இத்தனை பிரச்னைகள் இருக்கின்றன. இதை எல்லாம் தாண்டி, மீண்டும் பழைய பென்ஷன் வருமா என்று கேட்டால், அதற்கும் கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதாவது, 2019-20 பட்ஜெட் அறிக்கையின்படி, தமிழக அரசு பென்ஷன் பெற்றவர் எண்ணிக்கை 7,37,699. தற்போதைய 2022 23 பட்ஜெட் அறிக்கையின் படி பென்ஷன் பெறுபவர்களின் எண்ணிக்கை 7,15,761 மட்டுமே.அதாவது, வயது மூப்பு காரணமாக இறப்பு ஏற்படுவதால், எண்ணிக்கை குறைகிறது. மேலும், 01.04.2003 முதல் சி.பி.எஸ் திட்டத்தின்கீழ் பணிக்கு வந்து தற்போது வரை ஓய்வு (மற்றும் இறப்பு) எண்ணிக்கை வெறும் 24,719 மட்டுமே. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்தோர் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20,000 பேர்
ஓய்வுபெறுவதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். இதனால் இளம் வயதில் உள்ள சி.பி.எஸ் ஊழியர்கள் பழைய பென்ஷன் பெற வாய்ப்பு உண்டு. மேலும், சி.பி.எஸ். திட்டம் தொடங்கப்பட்ட 2002-03 நிதியாண்டில் பழைய பென்ஷனுக்கான செலவு அப்போதைய அரசின் வருவாயில் ரூ.3,488.20 கோடி இது அரசின் வருவாயில் 16.86%.தற்போதைய 2022-23 பட்ஜெட்டின்படி, பழைய பென்ஷனுக்கான செலவு ரூ.39,508.37
கோடி என்றாலும், இது நமது வருவாயில் 17.07% மட்டுமே. அதாவது, 2002-03 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பழைய பென்ஷனுக்கான கூடுதல் செலவு 0.21 சதவிகிதம்தான். இந்தக் கணக்கை எல்லாம் தெரிந்துகொண்டுதான் 'பழைய பென்ஷனைக் கொண்டு வருவோம்' என தமிழக முதல்வர் சொன்னாரா?
பழைய பென்ஷன் திட்டத்தை எப்படிக் கொண்டுவருவோம் என அவர் எடுத்துச் சொன்னால், அரசு ஊழியர்கள், ஆசிரியர் நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள்!
தவறான தகவல்..! தமிழக அரசு ஊழியர்களில் ஒரு சிலர், தமிழக அரசு ஊழியர்கள் என்.பி.எஸ்ஸில் உள்ளதாக தவறாக நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. தமிழக அரசு ஊழியர்கள் சி.பி.எஸ் திட்டத்தில்தான் உள்ளனர்.
இதற்கான கணக்கை பராமரிப்பது அரசு டாடா சென்டர். நமது சி.பி.எஸ் தொகை பி.எஃப். ஆர்.டி.ஏ-யில் உள்ளது என்பதும் தவறான தகவல். மத்திய அரசு ஊழியர்களுக்கான என்.பி.எஸ்ஸை பராமரிப்பதுதான் ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA).
*நன்றி விகடன்*
வியாழன், 29 செப்டம்பர், 2022
தொடக்கக் கல்வி - கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு - ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் - பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் - 58 மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பணியிடங்கள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக...
புதன், 28 செப்டம்பர், 2022
செவ்வாய், 27 செப்டம்பர், 2022
திங்கள், 26 செப்டம்பர், 2022
ஞாயிறு, 25 செப்டம்பர், 2022
முற்கால தமிழ் நாகரிகம் – பிரபு திலக்...
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீ வைகுண்டம் அருகே இருக்கும் இரண்டு அழகிய சிற்றூர்கள் ஆதிச்ச நல்லூர், சிவகளை. இந்த ஊர்களில் இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் சமீபத்தில் கிடைத்துள்ள அரிய சான்றுகள், மிகவும் முற்கால தமிழ் நாகரிகம் இந்த பகுதிதான் என்பதை உறுதி செய்கின்றன. இரண்டு ஊர்களிலும் தற்போது நடைபெற்றுவரும் அகழாய்வில் தங்கத் துண்டுகள் கிடைத்துள்ளன. இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தங்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.
விஞ்ஞான அணுகுமுறையுடனும் மிகுந்த கவனத்துடனும் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் செய்யப்பட்டுள்ள அகழாய்வில் இதுவரை 200க்கும் மேலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புக்கூடுகள், உடையாத நல்ல முறையில் உள்ள மட்பாண்டங்கள், பலவகையான கிண்ணங்கள், உருண்டை வடிவான பானைகள், குடுவைகள், உருளை வடிவப் பாத்திரங்கள், பெரிய ஜாடிகள், மிகுதியான அளவில் மாவரைக்கும் கல், கழுத்தணிகள், கடகம், காப்புகள், வளையல்கள், மோதிரம், மகுடங்கள் போன்ற பலதும் கிடைத்துள்ளன.
முதலில் ஜெர்மானியர்கள்தான் இப்பகுதியில் வந்து ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். இனங்களின் வேர்களைக் கண்டறிவதுதான் அவர்களின் அக்கறை. அதனடிப்படையில் டாக்டர் ஜாகோர் என்ற பெர்லின் அருங்காட்சியக ஆய்வாளர் 1876ஆம் ஆண்டு தொடங்கி, தாமிரபரணியின் தென்பகுதியில் சுமார் 114 ஏக்கர் பரப்பளவு பரந்து காணப்படும் ஏரலில் ஆய்வுகள் செய்தார். இவர்தான் முதன்முதலில் இப்பகுதியை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர். இவருக்கு ஆதிச்சநல்லூரில் சில தாழிகள் கிடைத்தன. மேலும் மட்பாண்டங்கள், இரும்புபொருட்கள், எலும்புக் கூடுகளின் பகுதிகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் ஜாகோர் சேகரித்தார். ஆனால், அவற்றை அப்போது அவர் வெளியிடவில்லை. இப்போது அவரது சேகரிப்புகள் பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜாகோரைத் தொடர்ந்து பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்.லோனிசு லாபிக்கு 1903-04 ஆண்டுகளில் பல மட்கல வகைகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள், தொங்கு விளக்குகள், இரும்பு வாட்கள் போன்றவற்றை ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தார்.
அதன்பின்னர், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ என்பவர் மேற்கொண்ட அகழாய்வில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் இங்கு தொன்மையான நாகரிகம் ஒன்றிருந்ததை உறுதிப்படுத்தின. இவர் சேகரித்த வெண்கலப் பொருட்கள், சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த தாய் தெய்வ அமைப்புடைய வெண்கலத் திருவுருவம் போன்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆதிச்சநல்லூர் ஊரிருக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆதிச்ச நல்லூருக்கு அருகில் உள்ள கொற்கையின் பண்பாட்டுக் காலத்துக்கும் முற்பட்டதாக இது இருக்க வேண்டும். கரிமம் 14 முறைப்படி கண்டுபிடிக்கப்பட்ட கொற்கையின் காலம் கி.மு. 785. கொற்கையிலிருந்து வடக்காக ஒன்பது கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. எனவே, முற்காலத்தில் சிறந்த வாணிக நகரமாக இருந்து, கடல் பின்னோக்கிச் சென்ற பின் தனது சிறப்பை இவ்வூர் இழந்திருக்க வேண்டும்” என்கிற முடிவுக்கு அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வுகள் வந்தன.
சங்க இலக்கியங்களின் காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்களைத் தேடுவதுதான் அலெக்ஸாண்டர் ரீயினுடைய நோக்கம். இவர் ஆதிச்சநல்லூரில் ஜாகோரைவிட அதிக தாழிகளை கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 1872க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இவரது சேகரிப்பில் உள்ளன. முதன்முதலில் ஆதிச்சநல்லூரில் தங்கம் மற்றும் வெண்கல கலைப்பொருட்கள் மூடியுடன் கிடைத்து இவரது ஆய்வில்தான். மற்றும் வெண்கல எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, கொம்பினையுடைய மறிமான், சேவல், புலி, யானை முதலியவையும் கிடைத்தன. மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் பாகங்களாகவும் கிடைத்தன. விலங்கு உருவங்கள், இரும்புப் பொருட்கள், எண்ணற்ற பானை ஓடுகள் என்று அகழாய்வில் கிடைத்த அனைத்தையும் அலெக்சாண்டர் ரீ அட்டவணைப்படுத்தி பதிப்பித்தார். அவரது அறிக்கை, கீழ்த் தாமிரபரணிச் சமவெளியின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பொதுவான தகவல்களைத் தருகின்றன
ஆதிச்ச நல்லூர் அகழாய்வு மூலம் சங்ககாலத்துக்கு நம்மால் தேதி குறித்துவிட முடியும். ஏனெனில், ஆதிச்சநல்லூர் புதை குழிகளில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் அடக்க முறைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன” என்று ஆய்வாளர்கள் கருதுவது முக்கியமானது.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி பகுதிகளில் மட்டும்தான் இதுபோல் புதைகுழிகள் அதிகம் காணப்படுகின்றன. ஈமச் சடங்குக்கு கல் நடுகிற பழக்கம் உள்ள புதைகுழிகள் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் கிடைத்துள்ளன. இதனடிப்படையில் ஆதிச்சநல்லூர், கல்நடுகிற பழக்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என கருதலாம். கேரளாவில் மாங்காட்டு அகழாய்வில் கிடைத்துள்ளவற்றைவிட முற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான தாழிகளில் முழுமையான எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. சில தாழிகளில் எலும்புக்கூட்டின் பகுதிகள் மட்டும்தான் காணப்படுகிறது. இந்த எலும்புகூடுகளின் ஆய்வு முடிவுகள் இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடையை உடையவர்கள் என்று தெரிவிக்கிறது. எலியட் ஸ்மித் என்பவர் இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மினிய மக்கள் எனக் கூறியுள்ளார். திராவிட இனத்தின் ஒரு கலவைக் கூறாக இந்த ஆர்மினிய இனக்கூறு கருதப்படுகிறது.
இந்த இரண்டு ஊர்களிலும் சமீப அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் மீண்டும் இறந்தவர்களை புதைத்த இடத்திலும், சிவகளையில் முதல்முறையாக மக்கள் வாழ்விடப் பகுதியிலும் தங்கப் பொருள் கிடைத்துள்ளது.
சிவகளையில் முதுமக்கள் தாழிகள் மற்றும் மக்கள் வாழ்விட பகுதி என பிரித்து இரண்டு பகுதிகளில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு இடுகாடுகளில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இருந்து எலும்புக்கூடுகள், பற்கள், மக்கள் பயன்படுத்திய பானைகள், இரும்பு பொருட்கள் ஆகியவை அதிகமாக கிடைத்துள்ளன. மக்கள் வாழ்விடப் பகுதிகளில் இருந்து மண்ணாளான புகைப்பான், தக்களிகள் (நூல் நூற்க கூடியது) மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வாள்கள், கூர்முனை கருவிகள், கத்திகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இரும்பாலான ஆயுதங்கள் கிடைத்துள்ளன.
தாமிரபரணி நதிக்கரை ஓரமாக இதுவரை நடந்த அகழாய்வுகளில் இறந்தவர்களைப் புதைத்த இடுகாட்டு மேடு பகுதிகளில் மட்டுமே அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், முதல்முறையாக சிவகளையில் மட்டுமே தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் மக்கள் வாழ்விட பகுதிகளில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் கிடைத்த பொருட்களை வைத்து வரும் நாட்களில் தமிழர்களுடைய பாரம்பரியமான நாகரிகம் வெளிவரும்; அதுமட்டுமில்லாமல் தாமிரபரணி நதிக்கரை ஓரம் எப்படியான நாகரிகம் இருந்தது, மக்கள் எவ்வாறான பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ்ந்தனர் என்பதும் வெளியே வரும் என்பதால் இந்த ஆய்வு முக்கியமானது.
சிவகளை அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை வைத்து பார்க்கும் போது இரும்பு காலகட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக செம்பு உலோகங்களால் ஆன மனித உருவ சிலைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தாமிரபரணி என்றால் தாமிரம் அல்லது செம்பு உலோகம் என்று பொருள். எனவே, செம்பு தாதுகள் அதிகம் நிறைந்த இடமாக இருந்திருக்கும். இந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து பார்க்கும் போது இரும்பு காலத்திற்கு முன் செம்பு உலோக பயன்பாட்டில் இருந்த காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் அதிகமாக உள்ளது. தற்போது கிடைத்த பொருட்களின் அடிப்படையில் சிவகளை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது” என்கிறார்கள்.
உண்மைதான், இந்த இரண்டு அகழாய்வுகளும் நம் முன்னோர்களின் கலாசாரத்தையும் சமூக பொருளாதார கட்டமைப்பையும் அறிந்துகொள்ள வாய்ப்புகளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாடு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிறப்பிடம் என்பதும் தொன்மையான நாகரிகத்தினை உடைய ஒரு பிரதேசம் என்பதும் பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. என்றாலும் இப்போது ஆதிச்ச நல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்துள்ள தடயங்கள் கிட்டத்தட்ட கி.மு. 1000த்துக்கும் முன்னால் வரைக்கும் செல்லக்கூடும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதாவது 3000 வருடங்களுக்கு முந்தையவை. இது தமிழர்களின் மிகவும் முற்கால நாகரிகம் என்பதுடன் மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
'சனி கிரகத்தின் துணைக்கோளில் வேற்று கிரகவாசிகள்?'.. விஞ்ஞானிகளுக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்!
வாஷிங்டன்: பூமியை போல் மற்ற கோள்களிலும் உயிர்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து வரும் நிலையில், சனிக்கோளின் துணைக்கோளான என்செலடசில் வேற்றுக்கிரக வாசிகள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பூமி எப்படி தோன்றியது... பூமியை போன்ற வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா.. என்ற ஆய்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பூமிக்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலம் குறித்து அறிந்து கொள்ள உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேற்றுக்கிரகவாசிகள்
இந்த அண்டத்தில் நமது பூமியைத் தவிர வேறு கிரகங்களிலும் மனிதர்கள் வாழ வாய்ப்புள்ளதா? என்பது குறித்தும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் வேற்றுக்கிரகவாசிகளை பார்த்தததாகவும் அவர்களுடன் அவ்வப்போது பேசியதாகவும் சிலர் கூறுவதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி கவனத்தை ஈர்க்கும். அப்படி ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்... அவர்களின் பழக்கவழக்கங்கள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது.
சனி கிரகத்தின் துணைக்கோளில் ஏலியன்கள்
ஏன் பல ஹாலிவுட் படங்கள் கூட ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன. வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் , சூரிய குடும்பத்தில் ஆறாவது கோளாக இருக்கும் சனி கிரகத்தின் துணக்கோளான என்செலடஸ் என்ற கோளில் ஏலியன்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
உயிரினங்கள் வசிக்கலாம்
ஏனனில், என்செலடசின் மேற்பரப்பு முழுவதும் ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. ஐஸ் கட்டிகளின் மேற்பரப்புக்கு கீழே திரவ நிலையில் பெருங்கடல்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த பெருங்கடல்களில் உயிரினங்கள் வசிக்கலாம் என்ற ஐயமும் விஞ்ஞானிகளுக்கு வலுத்துள்ளது. என்செலடஸில் உள்ள ஒசோனில் பாஸ்பரஸ் அதிக அளவில் இருக்கலாம் என்றும் உயிர்கள் வாழ்வதற்கான முக்கிய கூறுகள் இவையே என்பதும் விஞ்ஞானிகள் எடுத்து வைக்கும் வாதமாக இருக்கிறது.
அறிவியல் ஆய்வு இதழில்
இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் நேஷனல் அகடமி ஆஃப் சைன்ஸ் (PNAS) என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த இதழைசேர்ந்த கிரிஸ்டோபர் கிலேன் என்பவர் கூறுகையில், ''சூரிய குடும்பத்தில் மனித குலம் வேறு எங்கும் உள்ளதா? என்பதை தேடும் முக்கிய கோளாக என்செலடஸ் உள்ளது. நாசாவின் காசினி விண்கலம் சனி கிரகத்தையும் அதன் அமைப்புகளையும் ஆய்வு செய்த பிறகு அங்கு சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் கிடைக்கும் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டும் வகையில் அமைந்து வருகிறது'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ''உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து அடிப்படை தேவைகளும் இது கொண்டுள்ளதாகவே நாங்கள் அறிகிறோம். இருந்தாலும் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவைகளில் ஒன்றாக கருதப்படும் பாஸ்பரஸ் நிறைந்து இருப்பதாக நேரடியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும் சனி கிரகத்தின் நிலவின் ஐஸ் பரப்புக்குக்கு கீழே உள்ள கடலில் பாஸ்பரஸ் இருப்பதற்கான ஆதாரங்களை எங்கள் குழு கண்டுபிடித்துள்ளது'' என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)