சனி, 10 ஜூன், 2023

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதுபோன்று ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி சீரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பள்ளிகளை திறக்க தாமதம் ஏற்படுவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு பாட சுமை இல்லாதவாறு சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

மேலும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை, 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக