தலை’ இல்லாமல் செயல்படும் 3,343 அரசுப் பள்ளிகள்; நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம்!
Published on 04/07/2023 (10:50) | Edited on 04/07/2023
இளையராஜா
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதமாகும் நிலையில், 3,343 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கற்பித்தல் நடைமுறை, பாடத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. போதாக்குறைக்கு தற்போது 3000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்படும்போது தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராகவும், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாததால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 670 மேல்நிலைப் பள்ளிகள், 435 உயர்நிலைப் பள்ளிகள், 1003 நடுநிலைப் பள்ளிகள், 1235 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 3343 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்குதல், மிதிவண்டி, மடிக்கணினி வழங்குதல் மற்றும் ஆசிரியர்களின் வருகை, கல்வி, பள்ளி மேம்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நிர்வாகப் பணிகளும் தலைமை ஆசிரியர்களைச் சார்ந்துதான் உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் அங்கு பணியாற்றி வரும் மூத்த ஆசிரியர் ஒருவருக்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதால் குறிப்பிட்ட அந்த ஆசிரியர் கையாள வேண்டிய பாட வகுப்புகள் பாதிக்கப்படும். மேலும், அவருக்கு சக ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பும் அளிக்கமாட்டார்கள். அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளிக்கல்வித்துறை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக