நன்றி:தினமணி-16.12.17
ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் அவமரியாதையாகப் பேசாமல், கனிவுடன் பேசி உற்சாகமாகப் பணியாற்றும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் மாவட்டச் செயலர் முருக செல்வராசன், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வித் துறை உயர் அதிகாரிகள் மரியாதையாக நடத்த வேண்டும். கற்றல், கற்பித்தல் பணியில் சுதந்திரமான சூழ்நிலையில் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும்.
பள்ளிப் பார்வை, ஆய்வு, ஆய்வுக் கூட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நாகரிகமான வார்த்தைகளால், சூழலுக்கு ஏற்ப புதிய யுக்தியுடன் சுட்டி காட்டி குறைகளைக் களைந்திட வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை மனித தன்மையுடன் நடத்த வேண்டும். இதுதொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறையினர் அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் உற்சாகமாகப் பணியாற்றும் சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.