வெள்ளி, 30 மார்ச், 2018
அங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் ~ பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு…
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், அங்கீகார விபரங்களை, பெயர் பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுஉள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில், ஏற்கனவே ஏற்பட்ட பிரச்னைகள், விதிமீறல்களை சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், செயலர், உதயசந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், கடிவாளம் போடப்பட்டுஉள்ளது.தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யில் பாடத்திட்ட இணைப்பு அந்தஸ்தை மட்டும் பெற்றால் போதாது; தமிழக அரசின் விதிகளின் படி,பள்ளிக் கல்வித் துறையில் அங்கீகாரம் பெற வேண்டும்.பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரம் இல்லாவிட்டால், அந்த பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியது.அதேபோல், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும். 25 சதவீத இடங்களில், இலவச மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை : இந்நிலையில், மற்றொரு அதிரடியாக, அனைத்து பள்ளிகளும், தங்களின் அங்கீகார விபரங்களை, பள்ளி பெயர் பலகை மற்றும் நோட்டீஸ் பலகையில் நிரந்தரமாக எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக,பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகள், மழலையர் பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். மேலும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., பள்ளிகள் போன்ற அனைத்து வகை பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
அறிவிப்பு பலகை : இந்த பள்ளிகள், தாங்கள் சார்ந்த பாடத்திட்டம், அதற்கான இணைப்பு எண், தமிழக அரசிடம் பெற்றுள்ள அங்கீகார எண், அதற்கான ஆண்டு உள்ளிட்ட விபரங்களை, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரியும் வகையில், அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறும் எண்ணமில்லை~ மத்திய அரசு…
புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற்றுவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் கடந்த 2004 ஏப்ரல் 1 மற்றும் அதற்கு பிறகு சேர்ந்தவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டனர். அதன்படி, தனிநபர் சேமிப்புகள் ஓய்வூதிய நிதியத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு அந்த நிதி மத்திய அரசின் முதலீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்றும், புதிய திட்டமே ஊழியர்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.
வியாழன், 29 மார்ச், 2018
கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்...
கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நாட்டில் 8 சதவீத பள்ளிகள் மட்டுமே பின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு கல்வி கற்கும் உரிமை சட்டம் குறித்த மாநாட்டை டில்லியில் நடத்தியது. இதில் 20 மாநிலங்களில் இருந்து அரசு சாரா அமைப்புகளை சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு விபரம்:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதம் மட்டுமே, கல்விக்காக செலவிடப்படுகிறது. ஆனால், 6 சதவீதம் செலவிடப்பட வேண்டும் என, உலக நாடுகள் கூறுகின்றன. உலகின் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், செலவிடப்படுவதை விட, நான்கு மடங்கு குறைவாக, கல்விக்கான தனி நபர் செலவினம், இந்தியாவில் உள்ளது. பள்ளி ஆசிரியர்களில், 20 சதவீதம் பேர், முறையான பயிற்சி பெறாதோர். கல்வி மையங்களில், வளர்ச்சிக்கான கல்வியின் தேவை உள்ளது. இதற்காக, பல்வேறு சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டபோதும், அவற்றை அமல்படுத்துவதில், அரசுகள் அலட்சியமாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் பேசிய, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள பள்ளிகளில், 8 சதவீதம் மட்டுமே, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த சட்டம், மிகுந்த ஆலோசனைகளுக்கு பின் இயற்றப்பட்டது. ஆனால், இதை செயல்படுத்துவதில் மந்த போக்கு காணப்படுவதால், ஒரு தலைமுறை குழந்தைகள், அடிப்படை கல்வி அறிவு பெற முடியாமல் போகிறது. இந்தியாவில் கல்வியின் தரம், மிக மோசமான நிலையில் உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், கல்வியின் தரத்தை உயர்த்த முடியாது இவ்வாறு அவர் கூறினார்.
EMIS-Mobile App - New Version Published...
EMIS-Mobile Android Application-இல் புதிய Version வந்துள்ளது. Playstoreல் Update செய்து கொள்ளவும்.
Click here for update ...
மார்ச்~31ம் தேதி வேலை நாள்…
தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்களுக்கு வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2017-18ம் நிதியாண்டு வரும் மார்ச்~31ல் முடிவுறுவதால் பட்டியல்களை நேர்செய்வதற்காக வேலை நாளாக அறிவித்துள்ளது.
மதிப்பீட்டை உயர்த்தும், 'ஸ்மார்ட் கார்டு'; வரும் கல்வியாண்டில் வழங்கப்படுமா?
எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட, அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில், 'ஸ்மார்ட் கார்டு'வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்கள், எமிஸ் இணையதளம் மூலமாக, கடந்த 2012ல் இருந்து திரட்டப்படுகிறது. இதை ஒருங்கிணைத்து, ஆதார் எண் சேர்க்கும் பணிகள், 99 சதவீதம் முடிந்தது. மேலும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, மாணவர்களுக்கு அடையாள அட்டை உருவாக்கும் வகையில், பிரத்யேக செயலி சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில், மாணவர்களின் புகைப்படத்தை பதிவேற்றி, பெயர், வகுப்பு, பிரிவு, ரத்த வகை, முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை வடிவமைக்கப்படும். இதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.வரும் கல்வியாண்டில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சீருடையும் மாறுவதால், அடையாள அட்டை வழங்கினால், அரசுப்பள்ளி மாணவர்களின் மீதான புறத்தோற்ற பிம்பம் மாறும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர். கல்வியாளர்கள் சிலர் கூறுகையில்,
'பள்ளிக்கல்வித்துறையில், வரும் கல்வியாண்டில் தான், பல அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. பாடத்திட்டம் மாறுவதோடு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, 'டேப்லெட்' மூலம், வகுப்பு நடத்தப்பட உள்ளது.ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்பட உள்ளதால், அரசுப்பள்ளிகள் மீதான நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதோடு, பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் நாளிலே, மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இதற்கான முன் ஆயத்த பணிகள் துவங்க, இயக்குனர் உத்தரவிட வேண்டும்' என்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)