வெள்ளி, 11 மே, 2018

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வாய்ப்பு இல்லை-நிதித்துறை அதிகாரி...

துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்க உத்தரவு...


:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்வுகள் நிறைவு பெற்று, கடந்த மாதம், 20ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 
ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வருகைப்பதிவை அதிகரிக்க மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வருகைப்பதிவு துவங்கப்பட்டது.வழக்கமாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே துவங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும், 'பிளக்ஸ்' பேனர் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'முன்கூட்டியே துவங்கினாலும், பள்ளி திறப்புக்கு பத்து நாட்களுக்கு முன்பே பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவி, உயர்ந்துள்ள கல்வித்தரம் குறித்து, பெற்றோரிடம் விரிவாக எடுத்து கூறி, மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் அதிகரிக்க முயற்சித்து வருகிறோம்,' என்றார்.

வியாழன், 10 மே, 2018

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது - இயக்குநர் செயல்முறைகள்...

மின் வாரிய உதவி பொறியாளர் பணி...


மின் வாரியம், 25 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ளது.

 தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவி பொறியாளர் உட்பட, 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன.
இதனால், ஒருவரே, பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.இதையடுத்து, எலக்ட்ரிகல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் பணியிடங்களை, முதன்முறையாக, எழுத்து தேர்வு வாயிலாக நிரப்புவதற்கான அறிவிப்பை, பிப்., 14ல் வாரியம் வெளியிட்டது. இதற்கு, 81 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

அண்ணா பல்கலை வாயிலாக, எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலையில், இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இதனால், உதவி பொறியாளர் எழுத்து தேர்வை, ஆகஸ்டில் நடத்தித் தருவதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. தேர்விற்கான பாடத்திட்டம், மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, வேலைக்காக, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாமல், 2 மாதங்கள் கஷ்டப்பட்டு படித்தால், தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்து, உதவி பொறியாளர் பணிக்கு தேர்வாகலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்~ஜாக்டோ - ஜியோ நிர்வாகி தகவல்…


ஜாக்டோ - ஜியோ சார்பில் சென்னையில்  நடந்த கோட்டை முற்றுகை போராட்டம், 20ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள உயர்நிலை குழு கூட்டம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:

கோட்டை முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மே 6ம் தேதியே எங்கள் அமைப்பின் நிர்வாகிகளை வீடு புகுந்து கைது செய்தனர். ஒவ்வொரு தாலுக்காவிலும் உள்ள உறுப்பினர்களை தேடித் தேடி 3,000 பேரை கைது செய்து எங்களின் போராட்டத்தை முடக்க முயன்றனர். ஆனால், போலீசாரிடம் சிக்காத நிர்வாகிகள் 250 தனியார் பஸ்களிலும், 400க்கும் அதிகமான வேன்களிலும் ஏறி சென்னை  புறப்பட்டனர். அவர்களை நடுவழியில், டோல்கேட்களில் இறக்கிவிட்டனர். எங்கள் உறுப்பினர்கள் வந்த பஸ்களின் பெர்மிட்டை ரத்து செய்வோம் என்றும் மிரட்டியதோடு, வேன் டிரைவர்களின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டனர்.

நடுவழியில் இறக்கிவிட்டாலும் பரவாயில்லை என்று கூறி, அதிகாலை 2 மணிக்கு சென்னையை நோக்கி பல உறுப்பினர்கள் நடக்கத் தொடங்கினர். பின்னர், அவ்வழியாக வந்த பஸ்களில் ஏறி சென்னை வந்துள்ளனர். எங்கள் அமைப்பை சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்தனர். கைது செய்யப்பட்டு விடுதலையானதும்  அனைவரும், மீண்டும் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டோம். அதைத்தொடர்ந்து போலீசார் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். சென்னையில் கைது செய்யப்பட்டிருந்த முக்கிய நிர்வாகிகளை போலீஸ் வாகனத்தில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அழைத்து வந்தனர். வேன் டிரைவர்களின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அளித்ததோடு, எங்கள் உறுப்பினர்கள் வந்த வேன்களிலேயே சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்தனர். அதேபோல், வெளியூர்களில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ததோடு, அதுதொடர்பாக வயர்லெஸ் மூலம் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்தே தற்காலிகமாக பேராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தோம்.

ஆனால், கடைசி வரை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராதது பெரும் தவறு. நாங்கள் என்ன தீவிரவாதிகளா, நாங்களும் அரசின் அங்கம் தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று கவர்னர் உரையில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாகவும் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளோம். வரும் 20ம் தேதி திருச்சியில் 114 சங்கங்களின் நிர்வாகிள் 250 பேர் ஒன்று கூடி அடுத்தகட்ட பேராட்டம் தொடர்பாக முடிவெடுப்போம். அதற்குள் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு  கூறினார்.

CBSE மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை...


சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

உத்தரவு :

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2015 - 16ம் கல்வி ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பில் இருந்து, படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், நான்காம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயமாகிறது.

பிறமொழியை தாய்மொழியாக உடைய, மொழி சிறுபான்மை மாணவர்கள், தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை படித்தால், அவர்களுக்கு, 10ம் வகுப்பில், தமிழ் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பில் சேர்ந்தால், தமிழ் கட்டாயமில்லை என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாடத்திட்டம் இல்லாமல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில், தமிழகத்திலேயே படித்த மாணவர்கள், தமிழக பாடத்திட்டத்தில், ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில் சேர்ந்தால், அவர்களுக்கும் தமிழ் கட்டாயம் இல்லை என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.

3ம் வகுப்பு வரை :

பிற பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 2017 - 18 கல்வியாண்டு வரை, 3ம் வகுப்பு வரை மட்டுமே, தமிழ் கட்டாயம் ஆகியுள்ளது. எனவே, நான்காம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ளவர்கள், தமிழை
படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களுக்கு தமிழக பாடத்திட்டத்தில், திடீரென தமிழை கட்டாயமாக்க முடியாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து, உயர் நீதிமன்றமும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி, தமிழுக்கு விலக்கு அளிக்கும் அரசாணையை, அரசு பிறப்பித்துள்ளது. தமிழ் படிக்க விலக்கு அளிக்கும் சட்டம், 2024 - 25 வரை அமலில் இருக்கும். பின், பிறமொழி பாடத்திட்ட மாணவர்களுக்கும், 10ம் வகுப்பில், தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

புதன், 9 மே, 2018

சிவில் சர்வீஸ் தேர்விலும் கடும் கட்டுப்பாடுகள்...

அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் உண்மையில்லை~ தலைமை செயலக சங்கம் அறிக்கை...

பி.எப் பென்ஷன் தொகையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்...

ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு...


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மே8 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

அடுத்தகட்ட போராட்டம் குறித்து திருச்சியில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ - ஜியோ தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் செவ்வாய்க்கிழமை கோட்டையை முற்றுகையிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காவல் துறையினர் கைது நடவடிக்கையை தொடங்கினர். இதன்படி, தமிழகம் முழுவதிலும் 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டமும் கைது நடவடிக்கைகளும்...: 

சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், தலைமைச் செயலகம் செல்லக் கூடிய சாலைகளான அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது, பெண் ஊழியர்கள் உள்பட பலரும் வேனில் ஏற மறுத்தனர். அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸார், வேனில் ஏற்றினர். இந்தப் போராட்டத்தால், வாஜாலா சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்துகளும், இதர வாகனங்களும் வேறு திசையில் திருப்பி விடப்பட்டன.

சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்கவைத்தனர். அதேபோல், காமராஜர் சாலையில், எழிலகம்-சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து ரயில்களில் வந்தவர்களையும் கைது செய்து சமூக நலக்கூடம், மதரசா பள்ளி, மாநிலக் கல்லூரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடங்களில் தங்கவைத்தனர். இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பலரை காவல்துறையினர் கைது செய்து அருகில் இருந்த சமூக நலக்கூடங்களில் தங்கவைத்தனர்.

மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்த போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கை பிற்பகல் வரை நீடித்தது. இப்போராட்டத்தில் சென்னையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் ஒத்திவைப்பு: 

இதனிடையே சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர்.