வியாழன், 21 பிப்ரவரி, 2019
தமிழ்த்தாயே!ஊழித்தாண்டவம் ஆடுவாயாக!!
வரித்திட்டம்,
மின் திட்டம்,
நீட்த்தேர்வு
என்பனவற்றையெல்லாம்
மத்தியரசு
மாநில அரசுகளின் வழியிலேயே மாநிலங்களில் நடைமுறைப்படுத்திட
இசைவு பெறும் என்று அறிந்திருக்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு ,
எட்டாம்வகுப்பு பொதுத்தேர்வு போன்றனவற்றில் மாநில அரசுகள் வழியில் இல்லாமலேயே துறையின் இயக்குநர்கள்,
மாவட்ட சிஇஓக்கள் போன்ற அலுவலர்களின் வழியிலேயே நடைமுறைப்படுத்திட எத்தனிப்பது
மாநில உரிமைக்கு,
மாநிலத்தின் கல்வி உரிமைக்கு,
மாநில சுய ஆட்சி உரிமைக்கு விடப்பட்டுள்ள சவலாக கருத இடமில்லை என்றாலும்,
பங்கம் விளைவிக்கிறது என்றே ஆழ்மனம் கவலைகொள்கிறது.
பெரிதும் சிலாகித்து சட்டமன்றத்திலேயே பாராட்டுப்பெற்ற முப்பருவ பாடமுறை சத்தமின்றி கொல்லப்படுகிறது.
தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு முறை இயற்கை மரணம் நோக்கி தள்ளப்படுகிறது.
எளிய செயல்வழி மற்றும் எளிய படைப்பாற்றல் வழி கல்விமுறைகளின் வழியிலான தேர்வு முறைகள் கைவிடப்படுகிறது.
சுமையின்றி கற்றல் என்பது தூரதேசத்து கதையாகிறது.
1 - 14 வயது குழந்தைகளுக்கு இலவசக்கல்வி என்பது தமிழ்நிலத்தில் கட்டணக்கல்வியாகிறது.
தாய்மொழி வழிக்கல்வியின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கிறது.
ஏகலைவன்களின் தேசமாக தமிழ்தேசம் பின்னுக்கு தள்ளப்படும் சதித்திட்டமாகிறது.
குலக்கல்வி முறைக்கு சத்தமின்றி
தமிழ் சமூகம் தள்ளப்படுகிறது.
கல்வி சிறந்த தமிழகம் என்பார் மகாகவி பாரதி.
கல்வி சிதைந்த தமிழகமாக சிதைக்கப்படுகிறது.
நெஞ்சம் பதறுகிறது.
குடல் குலையெல்லாம் அதிர்கிறது.
உடலெல்லாம் நடுங்குகிறது.
சத்தமின்றி,
பொது விவாதம் இன்றி,
ஒருமித்த கருத்தொற்றுமை இன்றி
பொதுத் தேர்வு
என்று சுற்றறிக்கை வெளியாவது
நாகரீக சமுதாயத்தில் தான் இப்படி எல்லாம் நடக்கும்(!?); சாத்தியமாகும் போல் என்ற விரக்தி பீடிக்கிறது.
மாதச்சம்பளம் தேவை என்ற குடும்பநிலைக்காக
எத்தனை ..
எத்தனை ...
பாவங்களை எல்லாம் கல்வியில் செய்வது?!
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு துரோகம் இழைப்பது?!
அய்யகோ!
தமிழ் நிலமே!
நீ பிளப்பாயாக!என்னைப் புதைத்துக்கொள்வாயாக!
சிலப்பதிகாரத்து பூதங்களை அவிழ்த்து விடுவாயாக!
கண்ணகியின் அறச்சீற்றத்தை எல்லோருக்கும் ஊட்டுவாயாக!
அறமே வெல்லட்டும்
குழந்தைகள் நலம் காக்கட்டும்
-முருகசெல்வராசன்.
நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தலைவிரித்தாடும் இலஞ்ச-இலாவண்ய, ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடுக!
நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தலைவிரித்தாடும் இலஞ்ச-இலாவண்ய,
ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடுக! என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல் மாவட்டக்கிளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனடிப்படையிலேயே கையூட்டு ஒழிப்பின் ஒருபகுதியாகவே திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீது உரிய விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரிடம் ஆசிரியர் மன்றம் எதிர்நோக்குகிறது. சட்டத்தின் ஆட்சி் நிலைநிறுத்தப்படும் என்று விண்ணப்பம் படைக்கிறது.
புதன், 20 பிப்ரவரி, 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)