திங்கள், 18 நவம்பர், 2019

நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.

சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்ட தினம் இன்று (2002).


சென்னை புறநகர் பேருந்து நிலையம் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம்.

 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.

 இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.

தி. மு. க. ஆட்சியில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட இப்பேருந்து நிலையம் மருத்துவமனையாக மாற்றப்படாமல் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது !
நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.


‘மிக்கி மவுஸ்’ உருவான தினம் இன்று (1928).


மிக்கி மவுஸ் உருவான கதை

டோரிமான், சின்சான், ஸ்கூபி டூ, ஸ்நோ வைட், டாம் அண்டு ஜெரி, பென் டென், டோரா, மொட்லு பொட்லு என்று இன்றைய குழந்தைகளைக் குஷிப்படுத்தும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ஏராளம். உங்கள் தாத்தா, பாட்டி குழந்தைகளாக இருந்த காலத்துக்கு முன்பிருந்தே குழந்தைகள் உலகின் முடிசூடா மன்னனாக இருப்பது ‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரம்.

மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யார் தெரியுமா?
 வால்ட் டிஸ்னி. இவரது குழந்தைப் பருவம் ரொம்ப சோகமானது. டிஸ்னியின் தந்தை ரொம்ப கண்டிப்பானவர். கோபக்காரரும் கூட. டிஸ்னி தனது 10 வயதில் வீடுவீடாக பேப்பர் போடும் பையனாக வேலைக்குச் சென்று, சம்பாதித்ததை அப்பாவிடம் கொடுப்பார். படங்கள் வரைவதென்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், அவரது அம்மாவிடம் அனுமதி வாங்கி நுண்கலைப் பயிற்சி வகுப்புகளுக்கு தினமும் சாயங்கால வேளையில் போய்வந்தார். அப்போதுதான் அவருக்குள் ஓவியம், புகைப்படக் கலை, கார்ட்டூன்கள் மீது ஆர்வத்தை விதைத்தது.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, புதுமாதிரியான கார்ட்டூன்களை வரைவது தொடர்பான பணிகளில் டிஸ்னி ஈடுபட்டார். ஆனால் அவர் தொட்டது எல்லாமே தோல்வியானது. பல இடங்களில் டிஸ்னியின் திறமையைப் புரிந்துகொள்ளாமல், ‘உனக்குச் சரியாகப் படம் வரையத் தெரியல’ என்று வெளியே அனுப்பினார்கள். ஆனால், டிஸ்னி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை. அவர் முதலில் உருவாக்கியது ‘ஆஸ்வால்ட்’ என்ற முயல் கார்ட்டூன் கதாபாத்திரம். அப்போதைய சூழ்நிலையில் டிஸ்னி உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு அவரே உரிமை கொண்டாட முடியாமல் போனது.

எனவே வேறு ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அந்தக் கதாபாத்திரம் உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்ததாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். இதற்காக பல வருடங்கள் ஏராளமான உருவங்களை வரைந்து பார்த்தார்.

வழக்கமாக டிஸ்னி அறையில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு எலி உற்சாகமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் அந்த எலி செய்யும் சிறிய சேட்டைகளை டிஸ்னி வேடிக்கை பார்ப்பார். தனது உணவில் அந்த எலிக்கும் கொஞ்சம் கொடுப்பார். தனக்குப் பிடித்த அந்த எலியைக் கார்ட்டூனாக வரைந்து அதற்கு மனிதக் குணாதிசயங்களை புகுத்தி் கற்பனை செய்து பார்த்தார் டிஸ்னி. இப்படித்தான், வால்ட் டிஸ்னி தனது நண்பர் ஐவர்க்ஸ் உடன் சேர்ந்து ‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரத்தை உருவாக்கினார். அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘மார்டைமர் மவுஸ்’. குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்பெயர் மிக்கி மவுஸ் எனப் பின்னர் மாறியது.

மிக்கி மவுஸை மையமாக்கி எடுத்த இரண்டு அனிமேஷன் குறும்படங்களை யாரும் விநியோகிக்க முன்வரவில்லை. மூன்றாவதாக வெளியான ‘ஸ்டீம் போட் வில்லீ’யைக் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் ரசித்து வரவேற்றார்கள். இந்தப் படம் வெளியான 1928, நவம்பர் 18ஆம் நாளை மிக்கி மவுஸ் பிறந்த தினமாகக் கார்ட்டூன் ரசிகர்கள் உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

அனிமேஷன் படங்கள் வண்ண மயமானதும், மஞ்சள் காலணி, சிவப்பு கால்சட்டை, வெள்ளை கையுறையுடன் மிக்கி மவுஸ் மேற்கொள்ளும் சேட்டைகளும் சாகசங்களும் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. ஆரம்ப அனிமேஷன் படங்களில் மிக்கி மவுஸுக்குக் குரல் கொடுத்தவர் வால்ட் டிஸ்னி!. மிக்கி மவுஸ் தோழியாக மின்னி மவுஸ், தோழனாக டொனால்ட் வாத்து, காமெடிக்குக் கூஃபி நாய், வில்லனாக பீட் என்ற பூனை எனப் பல்வேறு கதாபாத்திரங்கள் உருவாக்கி, குழந்தைகளை மகிழ்வித்தன. இவர்கள் அனைவரும் அமெரிக்க நாட்டில் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்ட கலிசோட்டா மாகாணம் மவுஸ் டவுனில் வசிப்பதாக, டிஸ்னி தனது அனிமேஷன் படங்களை உருவாக்கினார்.

மவுஸ் டவுன் மற்றும் அதில் வாழும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே குழந்தைகள் நம்பினர். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் கேளிக்கைகளும் நிரம்பிய கனவு ஊரை நிஜமாக்க டிஸ்னி விரும்பினார். அப்படித்தான் அமெரிக்காவில் ‘டிஸ்னி லேண்ட்’ என்ற பிரபலக் கேளிக்கைப் பூங்கா உருவானது. அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகள் வந்தன. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.

மிக்கி மவுஸைப் பார்க்கும்போதெல்லாம் குஷியாகும் குழந்தைகளுக்கு, அதனை உருவாக்கிய வால்ட் டிஸ்னியும், தோல்விகளைக் கண்டு ஒதுங்காத அவரது விடாமுயற்சியும் ஞாபகத்துக்கு வரவேண்டும் அல்லவா?
நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.

 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை நினைவு தினம் இன்று.


 வ.உ.சி
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்.
இவரது அரசியல் வாழ்க்கை,
உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 வ.உ.சி. 1892ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.


வ.உ.சி
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் கம்பெனியை தொடங்கி கப்பல் போக்குவரத்து ஏற்படுத்திய விளையாட்டு வ.உ.சி
கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படுகிறார். ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

 வ.உ.சி. 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் காலமானார்.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

பள்ளிக்கல்வித்துறையில்  பல்வேறு அதிரடி மாற்றங்கள் - புதிய ஆணையர் பதவி ஏன் உருவாக்கப்பட்டது? அவரது பணிகள் என்ன?


பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள், 8,357 அரசு உதவி பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளனர்.

இதற்கிடையே பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப் படுகின்றன.

அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க தற்போது புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடக்கக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள், தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வயது வந்தோர் மற்றும் முறைசாரா கல்வி என பள்ளிக்கல்வியின்கீழ் 10 இயக்கு நரகங்கள் செயல்படுகின்றன.

இந்த துறைகளைச் சேர்ந்த இயக்குநர்களின் செயல்பாடு களைக் கண்காணித்து நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன. இதுதவிர புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலாக உள்ளதால் அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து சிரமங்களைத் தவிர்க்க, துறை செயலரின் அறிவுறுத்தலின்படி புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப் பட்டுள்ளது.

இனி பள்ளிக்கல்வி யின் அனைத்துத் துறைகளின் இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படு வார்கள். இவருக்கான அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஒதுக்கப்பட உள்ளது. இயக்குநர்கள் மாதம் தோறும் தங்கள் துறை சார்ந்த பணிவிவர அறிக்கையை ஆணை யரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் களுக்கான அதிகாரம் மற்றும் பணி வரம்புகளும் மறுவரையறை செய் யப்பட உள்ளன. விரைவில் அறி விப்பு வெளியாகும்’’ என்றனர்.
நவம்பர் 17,
வரலாற்றில் இன்று.

சிறந்த தமிழ் அறிஞருரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த தினம் இன்று.

1. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் (1909) பிறந்தார். தந்தை குறுநிலக்கிழார். மளிகைக் கடையும் வைத்திருந்தார். 4ஆவது வயதில் தந்தையை இழந்தவர், உள்ளூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு அரசு தொடக்கப் பள்ளியிலும் படித்தார்.

2. படிப்பைத் தொடர முடியாததால் அண்ணனுக்கு உதவியாக வயல் வேலை செய்தார். மாடு மேய்த்தார். தாயின் விருப்பத்தால், ராஜாமடம் என்ற இடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 8ஆம் வகுப்பு படித்தபோது லட்சுமணன் என்ற இவரது பெயரை ‘இலக்குவன்’ என மாற்றினார் தமிழ் ஆசிரியர். அதுமுதல் தமிழ் மீதான ஆர்வம் அதிகமானது.

3. தமிழில் பிறமொழிக் கலப்பைத் தவிர்த்தார். ஒரத்தநாட்டில் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றார். 1936இல் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, அங்கேயே
விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று பிஓஎல் பட்டம் பெற்றார். தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும் பெற்றார்.

4. குலசேகரன்பட்டினத்தில் தொடங்கப்பட்ட தமிழ் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பின்னர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவராகவும் பணிபுரிந் தார். அரசியல் காரணங்களால் அக்கல்லூரியில் இருந்து நீக்கப் பட்டார்.

5. தமிழ் வளர்ச்சிக்காக 1962இல் தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது 1963இல் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தான் பணியாற்றிய இடங்களில் தமிழ் மன்றங்களை நிறுவினார்.

6.இலக்கியம், திராவிடக் கூட்டரசு, குறள்நெறி, சங்க இலக்கியம் என்பது உள்ளிட்ட பல்வேறு இதழ்களை நடத்தினார். ஆங்கில இதழ்களையும் வெளியிட்டார். சங்கப் பாடல்களை சிறுகதை வடிவிலும், ஓரங்க நாடகங்களாகவும் அறிமுகம் செய்தார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

7. ‘மாணவர் ஆற்றுப்படை’, ‘துரத்தப்பட்டேன்’, ‘தமிழிசைப் பாடல்கள்’, ‘என் வாழ்க்கைப் போர்’, ‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ போன்ற தமிழ் நூல்கள், ‘தமிழ் லாங்வேஜ்’, ‘மீனிங் ஆஃப் தமிழ் கிராமர்’ என்பது போன்ற ஆங்கில நூல்களை எழுதியுள்ளார்.

8.தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர். இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.

9. சிங்கப்பூர், மலேசியாவில் 1971இல் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தமிழகம் முழுவதும் சொற்பொழிவாற்றி, தமிழை வளர்த்தார். முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் என்பது போன்ற ஏராளமான பட்டங்கள் இவரைத் தேடி வந்தன.

10. யாருக்கும் அடிபணியாத தன்மான உணர்வு, அஞ்சா நெஞ்சம், தமிழ் உணர்வு மிக்கவர். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 64ஆவது வயதில் (1973) காலமானார்.

நன்றி: தி இந்து நாளிதழ்.
நவம்பர் 17,
வரலாற்றில் இன்று.

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் நினைவு தினம் இன்று.

இந்திய விடுதலைப்
போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தை
தலைமை தாங்கி நடத்திய லால்- பால்-
பால் என்ற திரிசூலத் தலைவர்களில்
முதன்மையானவர் லாலா லஜபதி ராய். பஞ்சாப்
சிங்கம் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழகத்தின்
மகாகவி பாரதிக்கு ஆதர்ஷ புருஷர்.

1865ஆம் ஆண்டு ஜனவரி 28இல் பஞ்சாபின்
மோகா மாவட்டத்தில் துடிகே என்ற கிராமத்தில்
பிறந்தவர் லாலா லஜபதி ராய்.
 சட்டம்
பயின்ற லாலா நாட்டு விடுதலைக்காக தனது
வாழ்வையே அர்ப்பணித்தார்.  லாகூரில்
(தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது)
இருந்தபடி  தனது எழுத்தாலும் பேச்சாலும்
ஆங்கில ஆட்சிக்கு எதிராக
மக்களை அணிதிரட்டியவர் லாலா; நாட்டில்
சுதேசி இயக்கத்தை வீறுகொண்டு எழச்
செய்தவரும் இவரே.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம்
அமைப்பிலும் தீவிரமாகப் பங்கேற்ற லாலா,
இந்திய அரசியலில் ஹிந்துத்துவ சிந்தனை பரவ
காரணமாக இருந்தார். 1928, அக்டோபர் 30இல்
லாகூரில் நடந்த ''சைமன் கமிஷனே திரும்பிப்
போ'' போராட்டத்திற்கு தலைமை தாங்கிய
லாலாவை, ஆங்கிலேய காவலர்கள்
குண்டாந்தடியால்  கடுமையாகத்
தாக்கினர்.  அதில் பலத்த காயம் அடைந்த லாலா,
அதே ஆண்டு நவம்பர் 17இல் காலமானார்.
நவம்பர் 17,
வரலாற்றில் இன்று.

சர்வதேச மாணவர்கள் தினம் இன்று.
(International Students Day)


செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939ஆம் ஆண்டு நவம்பர்
17 இல் நடந்தது.
நாஜிப் படையினரால் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10
மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர் .

மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது