வெள்ளி, 5 ஜூன், 2020

*🌐ஜூன் 5,வரலாற்றில் இன்று:காயிதே மில்லத் பிறந்த தினம்.*

ஜூன் 5, வரலாற்றில் இன்று.

காயிதே மில்லத் பிறந்த தினம் இன்று.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி பகுதியில் உள்ள பேட்டை என்கிற ஊரில் அரசர்களுக்கு துணி விற்றுக்கொண்டு இருந்த மதத்தலைவரான மியாகான் ராவுத்தர் அவர்களின் மகனாக பிறந்தார். இளமைக் காலத்திலேயே தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கல்லூரி பட்டப்படிப்பு தேர்வை புறக்கணித்தார். பின்னர் முஸ்லீம் லீக் அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.

விடுதலைக்கு பின்னர் டிசம்பர் மாதத்தில் 1948இல் கராச்சியில் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் பகுதிக்கு ஒன்று என்றும்,இந்தியாவிற்கு இன்னொன்று என்றும் உடைந்தது. அங்கே பாகிஸ்தான் பகுதியின் தலைவராக திகழ்ந்த லியாகத் அலிகான் ,"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும்கேளுங்கள் காயிதே மில்லத் அவர்களே ! எப்பொழுதும் உதவக் காத்திருக்கிறோம்" என்ற பொழுது "எங்களுக்கான தேவைகளை, சிக்கல்களை நாங்களே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசமிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு செய்கிற உதவி ஏதேனும் இருக்குமானால் அது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்வது தான் !: என்று கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.

இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டார். அப்பொழுது எது தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த காயிதே மில்லத் அவர்கள் இப்படி பேசினார் :
" ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். . இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். . இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய கம்பீரமான தமிழினத்தின் தலைவர்...

*🌐ஜூன் 5,வரலாற்றில் இன்று:உலக சுற்றுச்சூழல் தினம்.*

ஜூன் 5, வரலாற்றில் இன்று.

 உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று.

'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடையது அரண்''தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் இயற்கை அரண்களாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளதன் மூலம்,

பழந்தமிழர்களின் சுற்றுச்சூழல் குறித்த பார்வையினை நாம் அறியலாம்.

இயற்கைதான் மிகப்பெரிய பள்ளிக்கூடம். தினம் தினம் நமக்கு நடத்துகிறது பாடம். கட்டணம் பெறாத ஆசானாகத் திகழ்கிறது இயற்கை.

மலைகளும், மரங்களும், ஆறுகளும், கடல்களும், பறவைகளும், விலங்குகளும் நமக்கான வாழ்க்கைப் பாடங்களைத் தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

கற்றுக் கொடுக்கும் ஆசான்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. மனித இனம், தம் சுற்றம் குற்றமற்று வாழ, சுற்றுச் சூழலால் ஆளப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 5 ஆம் தேதி, உலக சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக
ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

அரசியல் கவனத்தையும் , செயல்முறைகளையும் அதிகரிக்க இந்த நாள் பயன்படுகிறது.

உயிர்களின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும், உலகச் சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கும், சுற்றுச் சூழல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும்.

மாறிவரும் இயற்கைச் சமநிலைஇயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், காட்டுயிரிகள், காற்று மண்டலம், பறவைகள், கடற்கரைகள் என அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களாகும்.

மனித இனம், விலங்கினம், பறவையினம், தாவர இனம், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் நல்வாழ்வும் இந்த சுற்றுச் சூழலிலின் சமநிலையில்தான் உள்ளது.

இச்சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்படும் மாற்றங் கள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றன.

நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் இன்று மாசடைந்து வருகிறது.

சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கி விட்டது.

பள்ளிகளின் பங்கு இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான்' என்கிறார் அறிஞர் கான்ராட் லாரன்ஸ்.

குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் நல்ல எண்ணங்கள்தான் மனிதராக மாறும்போது அவை மரமாக வளர்ந்து நிற்கும்.

இதைப் பள்ளிகள் செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப்படை மூலமாக மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாக்லேட் மிட்டாய்களுக்குப் பதிலாக, மரக்கன்று ஒன்றை நடச்செய்து பராமரிக்கச் செய்தல்,

அரசு விழாக்களின் சிறப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு அரசு விழாக்களிலும் ஒரு மரக்கன்றாவது நடச்செய்து பராமரித்தல்,

தேசத்தலைவர்களைப் போற்றும் வகையில் அவர்களது பெயரிலேயே மரக்கன்று நடச்செய்தல், உலக சுற்றுச் சூழல் தினம், உலக வனநாள் போன்ற தினங்களைப் பள்ளிகளில் கொண்டாடுதல் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்துதல்,

இயற்கை உரங்களைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தல், சிறப்பாக மரம் வளர்க்கும் மாணவர் குழுக்களை ஊக்கப்படுத்தும் விதமாக
புத்தகங்கள், பூச்செடிகள் பரிசளித்துப் பாராட்டுதல்,

தங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை உருவாக்குதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தைக்கூறி
மாணவர்களை இயற்கை ஆர்வலர்களாக மாற்றுதல் போன்ற பணிகளைப் பள்ளிகள் செய்ய வேண்டும்.

தனிமனிதனின் பங்கு 'ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது' என்கிறார் கார்ல் கேன்சன்.

நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான சாமி.

இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச் சூழல் பேணுதல் போன்றவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தப் பூமிப்பந்தில் மனிதன் மட்டுமல்ல, புல் பூண்டுகளும் ஓர் அங்கம்தான் என்பதை உணர வேண்டும்.

பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை இயன்ற அளவு குறைத்திட முயற்சிக்க வேண்டும்.

கடைகளுக்குத் துணிப்பைகளைத் துாக்கிச் செல்ல வேண்டும். துணிப்பைகளைப் பயன்படுத்தினால் நமக்கும், எதிர்காலச்
சந்ததியினருக்கும் துக்கம் இல்லை.
ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.பதினைந்து லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப் பட்டுள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனும் பல லட்சங்களுக்கு அதிபதியாவான் மரக்கன்றுகளை நட்டுவைத்து மரமாக்கும் போது.

எனவே, சுற்றுச் சூழலின் முக்கியப் பங்கினை தனிமனிதன் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சூழல் மேம்பட 'துாய்மை பாரதம்' என்ற திட்டத்தை நமது அரசு செயல்படுத்தி, அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை மேம்படச் செய்துவருகிறது.

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக இனிப்பகம் மற்றும் கடைகளில் பனையோலைக் கொட்டான்களைப் பயன்படுத்த அறிவுறுத்தலாம்.

இதனால் பனைத்தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை மேம்படும். காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம்.

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வீடுகளிலும், தெருக்களிலும் தனித்தனியாகக் குப்பைகளை இடச் செய்யலாம்.

நெகிழித் தேனீர்க் கோப்பைகளுக்குப் பதிலாக மண்பாண்டக் குவளைகளைப் பயன்படுத்தச் செய்யலாம்.

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் இயற்கை சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து ஊக்கப் படுத்திப் பரிசுகள் வழங்கலாம்.

பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் நம் இயற்கையை அனைவரும் ஒன்றிணைந்து சோலைவனமாக மாற்றலாம்.

மரங்கள் நிறையும் போது, நம் மனங்களும் நிறையும். மரம் மனிதனின் மூன்றாவது கரம். மரம் நடுவோம் மனம் தொடுவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.

வியாழன், 4 ஜூன், 2020

*📘தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி* *ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக் கிளை கோரிக்கை* *தினமணி மற்றும் தினத்தந்தி நாளிதழ் செய்திகள் நாள்:04.06.2020*

*📘தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி* *ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக் கிளை கோரிக்கை*
*தினமணி மற்றும் தினத்தந்தி நாளிதழ் செய்திகள்  நாள்:04.06.2020*

DEE Proceedings_ 2020 ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறை நாள் 3.5.2020


*🌐ஜூன் 4,* *வரலாற்றில் இன்று:ஹென்றி போர்டு* *தான் உருவாக்கிய எத்தனால் மூலம் இயங்கும்* *குவாட்ரி சைக்கிளை* *சோதனை செய்த தினம் இன்று (1896).*

ஜூன் 4,
வரலாற்றில் இன்று.

ஹென்றி போர்டு தான் உருவாக்கிய  எத்தனால் மூலம் இயங்கும் குவாட்ரி சைக்கிளை
சோதனை செய்த தினம் இன்று (1896).


June 4, 1896 Henry Ford made a successful test drive of his new car in Detroit, MI. He called the vehicle a "Quadricycle." Three gallon tank, 4 horsepower, 20 MPH, priced at $200, and optional armament.

*🌐ஜூன் 4, வரலாற்றில் இன்று:ஹென்ரிச் ஓட்டோ வைர்லாண்ட் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 4, வரலாற்றில் இன்று.

ஹென்ரிச் ஓட்டோ வைர்லாண்ட் பிறந்த தினம் இன்று.

ஜெர்மனியைச் சேர்ந்த ஹென்ரிச் ஓட்டோ வைர்லாண்ட், பாலூட்டிகள் மற்றும் முதுகெழும்புடைய உயிரிகளின் கல்லீரலில் உருவாகும் பித்த அமிலங்களிலிருந்து ஸ்டீராய்டு அமிலங்கள் மற்றும் பிற அமிலங்களின் மூலக்கூறு அமைப்புகளை வரையறுத்தார்.  இக்கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 1927ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

*🌐ஜூன் 4 , வரலாற்றில் இன்று:ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் இன்று(International Day of Innocent Children Victims of Aggression).*

ஜூன் 4 , வரலாற்றில் இன்று.

ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் இன்று(International Day of Innocent Children Victims of Aggression).

இனக்கலவரம்,, மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். ஐ.நா.வின் முடிவுப்படி 1982 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது..

*🌐ஜூன் 4,வரலாற்றில் இன்று:விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சுப்பிரமணியன்(வ.வே.சு.ஐயர்) நினைவு தினம்*

ஜூன் 4,
வரலாற்றில் இன்று.

விடுதலைப் போராட்ட வீரர் வ.வே. சுப்பிரமணியம் நினைவு தினம் இன்று.

இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

வெங்கடேச சுப்பிரமணியம், திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881-ல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

வ.வே. சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.

கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.

வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907-ல் வ.வே.சு. ரங்கூன் வழி லண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.

லண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.

1909-ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சுவைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

டிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர். *பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.
பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9-ல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.

மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.

இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். சங்கேத பாஷையில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

முதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.

கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது.

புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார்.

இப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920-ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார்.

ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920-ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவுகொள்ள நினைத்தது. தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.

மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.

பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். "பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்."

தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார்.

தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா" என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4இல் அணைந்தது.

*🌐ஜூன் 4,வரலாற்றில் இன்று:மறைக்கப்பட்ட ஆளுமை,டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு பிறந்த தினம்.*

ஜூன் 4,
வரலாற்றில் இன்று.

மறைக்கப்பட்ட ஆளுமை, டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு அவர்களின் பிறந்த தினம் இன்று.

டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு
(பிறப்பு: 1887, ஜூன் 4- மறைவு: 1957 ஜூலை 23)

தென்னாட்டுத் திலகராகப் புகழ்பூத்த வ.உ.சி, 1934இல் ‘தேசிய சங்கநாதம்’ எனும் தலைப்பில் 32 பக்கங்களில் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இந்தச் சிறுவெளியீட்டில் டாக்டர் நாயுடுவின் தேசியத் தொண்டுகள் 1933 வரையில் நிகழ்ந்தவை மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

‘டாக்டர்’ எனும் பட்டப் பெயர், அவர் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில் பெரும்புகழ் பெற்றதால் அமைந்தது.

சேலம் மாவட்டம், ராசிபுரத்தில் 1887ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வரதராஜுலு நாயுடு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள் உயர் நிலைக் கல்வி கற்கும்பொழுதே நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. இளைஞரான வரதராஜுலு ‘முற்போக்காளர் சங்கம்’ எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.

அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய லட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டதைப் பற்றி பிற்காலத்தில் 1936 செப்டம்பர் 26-ஆம் தேதியிட்ட தமது ‘தமிழ்நாடு’ இதழின் தலையங்கத்தில் பின் வருமாறு கூறியுள்ளார்:
“1906ஆம் ஆண்டில் எனது 19 வயதில் இந்திய தேசிய இயக்கத்தில் நான் ஈடுபட்டேன். 1908ஆம் வருஷம் புதுச்சேரிக்குச் சென்று, சுப்பிரமணிய பாரதியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.

“1916இல் தேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றேன். இந்த வரலாற்றுச் சிறப்பை, ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்புகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-
”பால்- பால்-லால் என்று பாரதநாடு முழங்கிய காலமுண்டு. நாயக்கர், நாயுடு, முதலியார் என்று தமிழ்நாடு முழங்கிய காலமுண்டு.
மேலே,
‘பால்’ என்பது பாலகங்காதர திலகரையும்
‘பால்’ என்பது விபின் சந்திர பாலையும்
‘லால்’ என்பது லாலா லஜபதிராயையும்
குறிப்பிடுவனவாகும்.
இவ்வாறே,
நாயக்கர் என்பது, ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும்
நாயுடு என்பது டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவையும்
முதலியார் என்பது திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரையும்
குறிப்பிடுவனவாகும்”.

இவரது முதல் சிறைவாசம், 1918-இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக விதிக்கப்பட்டது. சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையில், நாயுடுவின் சார்பில் சேலம் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) வாதாடினார்.
இவருக்குத் துணையாக, சேலம் ஆதி நாராயண செட்டியார்,
மதுரை ஜார்ஜ் ஜோசப், எம்.கே.சுந்தரராஜ ஐயங்கார்,
ஆர்.எஸ். வரதராஜுலு நாயுடு
ஆகிய வழக்கறிஞர்கள் உதவினர்.

உயர் நீதிமன்ற மேல் முறையீட்டில் ராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்க வாதத்தால், நாயுடு விடுதலை பெற்றார்.
அவர் சேலத்தில் வாரப் பதிப்பாக 1919-ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த ‘தமிழ் நாடு’ இதழில் அவர் எழுதிய இரு கட்டுரைகள், ராஜதுரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறை வாசத்தை ஏற்றார்.

1923-இல் பெரியகுளம் தாலுகா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இது மூன்றாவது சிறைத்தண்டனையாகும்.

24-ஆம் வயதில் அவர் ருக்மணி எனும் பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். 1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்தபொழுது, டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். 1921-இல் மீண்டும் சேலம் வந்தபொழுது டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி, தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியடிகளிடம் கொடுத்துவிட்டார்.
1922-இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்டபொழுது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க புதுமையைக் கையாண்டார், டாக்டர் நாயுடு.

அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு தான் வரிகட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.
வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம், காந்தியடிகளின் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தது. 1925-இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார். 1929-இல் காங்கிரஸோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரஸை விட்டு வெளியேறினார். பின்னர் ஆர்ய சமாஜத்தில் இணைந்தார்.

‘ஜஸ்டிஸ்’ கட்சியை எதிர்த்ததில் டாக்டர் நாயுடுவின் பங்களிப்பைப் பின்வருமாறு திரு.வி.க. பாராட்டியுள்ளார்:
“ஜஸ்டிஸ் கட்சி முளைவிட்டபோது, அதைக் கிள்ளியெறிவதற்கென்று புறப்பட்டவர் டாக்டர் வரதராஜுலு. வரதராஜுலுவின் பிரசாரம் தமிழ்நாட்டில் நாலா பக்கமும் பரவாவிடின், ‘ஜஸ்டிஸ்’ கொடி நாடு முழுவதும் பரவி, காங்கிரஸ் உணர்ச்சிக்கேடு சூழ்ந்திருக்கும். தென்னாட்டில் காங்கிரஸ் பக்தியை வளர்த்த பெருமை நாயுடுவுக்கு உண்டு”
-என்று திரு.வி.க. எழுதியுள்ளார்.

ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு.வி.க.வைத் தொடர்ந்து, தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் டாக்டர் நாயுடு.
இவருடைய இதழியல் பணி, ‘பிரபஞ்ச மித்திரன்’ எனும் வார இதழ் மூலம் தொடங்கியது. மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும், சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட ‘பிரபஞ்சமித்திரன்’ மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்தபொழுது, டாக்டர் நாயுடு 1916-இல் அந்த இதழை வாங்கினார். அவர் ஆசிரியரானார். இது இரண்டாண்டுகள் வெளிவந்தது. 1918ஆம் ஆண்டு டாக்டர் நாயுடு சிறைப்பட்டபொழுது, ஆயிரம் ரூபாய் ஈடுகாணம் அரசால் கேட்கப்பட்டு, பத்திரிகை முடக்கப்பட்டது. 

பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு தமிழ்நாடு இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து ஆற்றிய நாயுடுவின் பணி ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

அவருக்கு இவ்வகையில் பெரிதும் துணை நின்றவர் ‘பேனா மன்னன்’ என்று பிற்காலத்தில் புகழப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.
1919-இன் இறுதியில் சேலத்தில் வாரப் பதிப்பாக வெளிவரத் தொடங்கிய தமிழ்நாடு இதழில், 21 வயதான இளைஞர் டி.எஸ்.சொக்கலிங்கம் 1923-இல் துணை ஆசிரியரானார்.1926 ஏப்ரல் 14-இல் வாரப் பதிப்புடன் நாளிதழையும் தொடங்கினார். பாரதியார் பாடல்களைச் சித்திர விளக்கங்களாக வெளியிட்ட முதல் இதழ் தமிழ்நாடு எனும் பெருமை பெற்றது.

“காலஞ்சென்ற ஜி.சுப்பிரமணிய ஐயரைப் போல டாக்டர் நாயுடுவும் பத்திரிகை உலகில் ஒரு தனிச் சுடராக விளங்கினார். தேசிய ஆதர்சங்களுடன் வெற்றிகரமாக ஒரு தேச பாஷை பத்திரிகை நடத்திய வீரர்களில் டாக்டர் நாயுடுவைக் காலஞ்சென்ற ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு இணையாகச் சொல்லலாம்” -என்று வ.உ.சி. ‘தேசிய சங்க நாதம்’ எனும் வெளியீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழும் டாக்டர் நாயுடுவின் முயற்சியே. 1916-லேயே ஆங்கில இதழ் ஒன்றைத் தொடங்க வேண்டும் என விரும்பிய டாக்டர் நாயுடு, 1932-இல் தமிழ்நாடு நாளிதழுக்கு சகோதரப் பத்திரிகையாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ எனும் பெயரில் ஓர் ஆங்கில நாளேட்டைத் தொடங்கினார். ஆனாலும், சில மாதங்களிலேயே ‘ப்ரீ பிரஸ் ஆப் இந்தியன்’ எனும் சுதேச செய்தி நிறுவனத்தை நிறுவிய தேசிய வீரர் எஸ்.சதானந்தம் வசமாயிற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’.
1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும், சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் டாக்டர் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும், தமிழ்நாடு இதழின் நலிவிற்கும் காரணமாயிற்று.

விடுதலை பெற்ற இந்தியாவில் டாக்டர் நாயுடு 1951-இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.

சிற்சில சந்தர்ப்பங்களில் பெரியாருக்கும், காமராசருக்கும் இடையே பாலமாகவும் திகழ்ந்தார். 23.7.1957-இல் அவர் இறந்தபொழுது அவருடைய இறுதிச் சடங்குகள் ஆரிய சமாஜ சடங்குகள் வழியே எரியூட்டப்பட்டது. இவரைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறு வெளிவருதல் இன்றியமையாததாகும்.

புதன், 3 ஜூன், 2020