ஜூன் 8,
வரலாற்றில் இன்று.
உளவியலாளர் ஆப்ரகாம் மாஸ்லோ நினைவு தினம் இன்று(1970).
அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். ரஷ்ய நாட்டு அரசு, யூதர்களுக்கு எதிராக அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. யூதர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் வேலை பார்க்கும், பிஸினஸ் செய்யும் உரிமை பறிக்கப்பட்டது. அந்த சமூகத்துப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. ரத்தவெறி கொண்ட ஓநாய்கள் விரட்டிய மான்களாக யூதர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அடைக்கலமானார்கள்.
அப்படி அடைக்கலமான ஒரு இளம் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார் ஆபிரஹாம் மாஸ்லோ (Abraham Maslow).
அவருக்குப் பின் வருடத்துக்கு ஒன்றாக, வரிசையாய் ஆண், பெண் என ஆறு குழந்தைகள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே, மாஸ்லோ வித்தியாசமான ஆள். தனிமையில் இனிமை காண்பவன். தன் தம்பி, தங்கைகளோடுகூட விளையாட மாட்டான். எப்போதும் புத்தகம் படித்துக்கொண்டிருப்பான். மரை கழன்றவன் என்று அக்கம் பக்கத்தார் முடிவு கட்டினார்கள். அப்பா, அம்மாவுக்கும் அதுதான் டவுட். என்றாலும் மகனை சட்டம் படிக்கச் சொன்னார்கள் அவர்கள்.
ஆனால், அப்போது பலரும் நுழையாத மனோதத்துவப் படிப்பில் சேர்ந்தார் மாஸ்லோ. மனோதத்துவம் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பாடங்களைக் கரைத்துக் குடித்து டாக்டர் பட்டம் வாங்கினார். 1954இல் தேவைகளின் படிநிலை அமைப்பு (Hierarchy of needs) என்னும் கொள்கையை வெளியிட்டார். கொள்கையா அது? பிஸினஸ் உலகத்துக்கே புதுப்பாதை போட்ட வேதம்.
மாஸ்லோ அப்படி என்ன சொன்னார்? அவர் கொள்கையின்படி, மனிதர்களின் தேவைகள் கீழ்க்கண்ட படிநிலைகளில் அமைந்துள்ளன.
படிநிலை 1 - உயிர் வாழ்க்கைத் தேவைகள் (உணவு, குடிநீர், உடல் தேவைகள் போன்றவை).
படிநிலை 2 - பாதுகாப்புத் தேவைகள் (உடை, வீடு போன்றவை).
படிநிலை 3 - சமூகத் தேவைகள் (சொந்தங்கள், நட்புகள் போன்றவை).
படிநிலை 4 - சுயமரியாதை, சமூக அந்தஸ்துத் தேவைகள் (பதவி, பட்டம் போன்றவை).
படிநிலை 5 - ஆத்ம திருப்தித் தேவைகள் (சமூகத் தொண்டு, தன்னலம் தாண்டிய செயல்கள்).
எகிப்து நாட்டு பிரமிட்டின் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தனது கொள்கையை ஒரு பிரமிட் படமாக மாஸ்லோ வரைந்தார்.
நாம் எல்லோருமே படிநிலை 1-ல்தான் வாழ்க்கையைத் தொடங்குகிறோம். ஒவ்வொரு நிலைத் தேவைகளிலும் திருப்தி ஏற்படும்போது, மனிதன் அடுத்த படிநிலைக்கு உயர்கிறான்.
படிநிலை 1. சொர்க்கபோகமான சாப்பாடு; வயிறு நிறைந்த திருப்தி; தாகத்தைத் தணிக்க தண்ணீரும் குடித்துவிட்டோம்; துணையும் கிடைத்துவிட்டது. உயிர் வாழ்க்கைக்கான அத்தனை தேவைகளும் நிறைவேறின. மனம் திருப்தி அடைந்துவிட்டதா?
இல்லை. மனம் ஒரு குரங்கல்லவா? அடுத்த படிநிலைக்குத் தாவுகிறது. உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஆடைகள் தேவைப்படுகின்றன, வாங்குகிறான். வெயில், மழை வந்தால் தன்னைப் பாதுகாக்க வீடு வேண்டும் என்று ஏங்குகிறான், ஒரு வீடு கட்டுகிறான். படிநிலை 2-ன் தேவைகளை அவன் திருப்திப் படுத்திவிட்டான்.
ஆனால், என்னிடம் எல்லா வசதிகளும் கொட்டிக்கிடக்கின்றன என்று நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா? நாமும் சமுதாயத்தால் கவனிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்ற தாகம் அவனுக்குள் ஆரம்பிக்கிறது. உறவுகளோடு பழகுகிறான்; நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். மூன்றாம் படிநிலையின் தேவைகளை அவன் இப்போது திருப்திப்படுத்திக்கொண்டுவிட்டான்.
வாழ்க்கையில் நாம் சாதித்துவிட்டதை உலகம் ஒப்புக் கொண்டுவிட்டது; சந்தோஷத்துக்கு இது போதுமே என நீங்கள் நினைக்கலாம். அந்தக் குரங்கு அப்படி நினைக்கவில்லையே? நான்காம் படிநிலைக்குத் தாவுகிறது.
இப்போது என்ன வேண்டுமாம்? ளோடு, தன்னிடம் வசதி இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்டை நீட்டி, பெரிய ஃப்ரிட்ஜ், டிவி என ஆடம்பரமாக வாழ்ந்தால் தான் அந்தஸ்து என நினைப்பது.
அந்தஸ்து கிடைத்துவிட்டது. ஆனால், அதைத் தம்பட்டம் அடிக்கும் அடையாளங்கள் வேண்டாமா? சிறிய கார் வைத்திருப்பவன் தன் குடும்பத் தேவைகளுக்கு மீறிப் பெரிதாக இருக்கும் இன்னோவா கார் வாங்குகிறான். பக்கத்து வீட்டுக்காரனை வாய்பிளக்க வைக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோ.வி., மியூஸிக் சிஸ்டம், ஏ.சி. என வாங்கித் தள்ளுகிறான்.
அந்தஸ்து அடையாளங்கள் இந்த பொருட்கள் மட்டுமல்ல, பதவி பட்டங்களாகவும் இருக்கலாம். தொண்டன் வட்டத் தலைவனாக ஆசைப்படுகிறான். வட்டம் மாவட்டமாக, மாவட்டம் மந்திரியாக நினைக்கிறான். இந்த தாகங்கள் தணிந்தவுடன், அறிவு ஜீவியாகப் பிறர் தன்னை நினைக்கவேண்டும் என்னும் ஆசை முளைக்கிறது. பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணவில்லை என்றாலும், பல்கலைக்கழக டாக்டர் பட்டம் வாங்கத் துடிக்கிறது.
ஆடின ஆட்டமெல்லாம் போதும், ஆறு மனமே ஆறு என இப்போதுதான் மனசாட்சி பேச ஆரம்பிக்கிறது. தன்னைத் தாண்டி, பிறர் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான். ஐந்தாம் படிநிலைக்கு அவன் வருகிறான். சமூக சேவையில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.
ஆனால், இப்போதும் அவனுடைய உந்துதல் சக்தி நூறு சதவிகிதப் பொதுநல சேவையல்ல. சுயநலம் கலந்த பொதுநலம். ஆனால், மெல்ல மெல்ல ஆத்ம திருப்திக்காகவே வாழ ஆரம்பிக்கிறான்.