செவ்வாய், 9 ஜூன், 2020

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தினம் இன்று.


கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும்.


 இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.

நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார்.

 போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.

ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது.


ஆசிய விளையாட்டுப்
போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாக செய்தார்.

பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.

பயங்கரமான ஆட்கள் நிறைந்த இடமாக கருதப்படும் திஹார் சிறையின் தலைமைப்பொறுப்பு இவர் வசம் வந்த பொழுது முடிந்தார் இவர் என்றே அனைவரும் எண்ணினார்கள். குற்றவாளிகளை மனிதர்களாக பார்த்தார் இவர். அங்கே பத்து சதவிகிதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதையும் கவனித்தார். அவர்களுக்கு என்று ஜனநாயக பிரிவுகளை உருவாக்கினார். யோகா,போதை பழக்கத்தில் இருந்து விடுதலை,விளையாட,
கல்வி கற்க ,
உற்சாகமாக செயலாற்ற உதவிகள் எல்லாமும் செய்தார். சிறைக்குளே வங்கியும் துவங்கி கைதிகளை ஊக்குவித்தார்.

டெல்லியின் மாவட்டங்களில் பொறுப்பில் இருந்த பொழுது நீல மற்றும் வெள்ளை அறைகளை அமைத்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் நடவடிக்கைகளையும் எடுத்தார் அவர்.

 தற்போது புதுவை ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

அவர் அரசியலில் சேர்ந்ததை தாண்டி 'நான் துணிந்தவள்' என்று தலைப்பிடப்பட்ட அவரின் சுயசரிதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

 துணிந்து, நிமிர்ந்து நின்று வானைத்தொட முயலும் எல்லா பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் கிரண் பேடி ஒரு முன்மாதிரியே.

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம்.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம் இன்று.

ஜார்ஜ் ஸ்டீபென்சன(9 ஜூன் 1781 - ஆகஸ்ட் 12, 1848) நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.

தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப்படுபவர். நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர். 4 அடி 8 1/2 அங்குலம் (1,435 மிமீ)நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை, இன்றும் உலகத்தரமான பாதையாக உள்ளது. அது "ஸ்டீபன்சன் பாதை" என அழைக்கப்படுகிறது.

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:நீரோ மன்னன் நினைவு தினம் இன்று(கி.பி.68).*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

நீரோ மன்னன் நினைவு தினம் இன்று(கி.பி.68).


ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் என்று சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?



ரோமானிய அரசை ஆண்ட Julio-Claudian வம்சத்தின் கடைசி வாரிசாக கிபி 54 இல் பதவியேற்கிறார் நீரோ.

இயற்கையிலேயே ரோமானிய கலாச்சாரத்திலும்,நுண்கலைகளிலும் ,
விளையாட்டிலும் ஆர்வங்கொண்ட நீரோ
அவற்றை ஊக்குவிற்கும் பொருட்டு அதற்கான பல தியேட்டர்களையும்
விளையாட்டு கூடங்களையும் கட்டினான்.
அவன் காலத்தில் ரோமானிய கலாச்சாரம் அனைத்திலும் சிறந்து விளங்கியது.

கிபி 64 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 தேதி இரவு ரோம் நகரத்தில் தீடீரென்று தீ பரவியது.
அகோரப் பசிகொண்ட அந்த தீ மொத்த ரோம் நகரையும் தின்று தீர்த்து சாம்பலாக்கியது.
மக்கள் பெரும் துயருக்குள்ளாகினர்.

ரோமப்பேரரசர் நீரோ கட்டாயத் தற்கொலைமூலம் இறந்தார். நீரோவுக்கு அப்போது வயது 30! கட்டாயத் தற்கொலை என்பது அக்காலத்தில் உயர்குடியினருக்கு மரண தண்டனை வழங்கும் முறையாக இருந்தது. 17 வயதில் ரோமப் பேரரசராகி, 13 ஆண்டுகள் ஆட்சி நடத்தியபின், நாட்டின் எதிரி என்று நீரோவை செனட் அறிவித்து, இத்தண்டனையை வழங்கியது.

 ரோம் எரியும்போது ஃபிடில் வாசித்தவருக்கு வேறென்ன கிடைக்கும் என்று தோன்றுகிறதா? உண்மை வேறு!

 தீப்பிடித்த கி.பி.64 ஜூலை 18 அன்று அவர் ரோம் நகரில் இல்லை. 50 கி.மீ. தொலைவிலுள்ள ஆண்ட்டியம் என்ற இடத்திலிருந்த அவரைச் செய்தி சென்றடைந்தவுடனே, ரோம் நகருக்குத் திரும்பிய நீரோ, எரிந்துகொண்டிருந்த தீயிலிருந்து மக்களை மீட்கும் பணியில் தானே நேரடியாக ஈடுபட்டதாக, நீரோ காலத்திய செனட்டரும், வரலாற்றாசிரியருமான டாசிட்டஸ் பதிவு செய்துள்ளார்.

 நிவாரணப் பணிகளுக்குத் தன் சொந்த நிதியை வழங்கியதுடன், பல நாட்கள் மெய்க்காவலர்கள்கூட இன்றி, இடிபாடுகளுக்கிடையே மக்களுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தீ விபத்தில் வீடிழந்தவர்கள் தங்க தன் அரண்மனைகளைத் திறந்துவிட்டதுடன், அவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவுகளையும் வழங்கினார்.

 தீ விபத்திற்குப்பின், நகரை மறுசீரமைப்பதற்கும், அதற்கு முன்பே வணிகம், கலை, விளையாட்டு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கும் நீரோ விதித்த வரிகள் செல்வந்தர்களை கோபத்துக்கு
உள்ளாக்கின.
 அவர்களுக்கு ஆதரவாக கலகம் செய்த கிறித்தவ மதத்தலைவர்கள் உள்ளிட்டவர்களைத் தயங்காமல் நீரோ கொன்றார். இவற்றாலேயே கிறித்தவ வரலாற்றாசிரியர்கள், பிற்காலத்தில், அவரைப் பற்றி மிக மோசமாக எழுதினர். ஒரு பேரரசர் என்ற எல்லைக்குள் நிற்காமல், அனைத்து நிலைகளுக்கும் நீரோ இறங்கிப் பழகியது, அக்காலத்தில் அவரை ஒரு கோமாளியாகப் பார்க்கச் செய்ததும் இவர்களுக்கு வசதியாகிப் போனது. நீரோவின் மறைவிற்குப்பின், ஒரே (கி.பி.69) ஆண்டில் 4 பேரரசர்கள் வருமளவுக்கு ரோமப் பேரரசில் பிரச்சனைகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 8 ஜூன், 2020

☀NHIS திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் கிளைம் தொகையினை அரசாணை 391 நாள்:20.12.2018 ன் படி பெறலாம்...




கோவை மாவட்டம் அன்னூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு.செல்வராஜ் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .

*இதில் நமது NHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.

அதற்குமேல் தர மறுத்து விட்டது.


தலைமை காவலர் திரு.செல்வராஜ்
 அவர்கள்,
கோவை மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டு அவரது தொடர் முயற்சியினால் சாதகமானதீர்ப்பு பெறப்பட்டது.

*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,

_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._

_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் NHIS ஏற்கவேண்டும்._

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)

01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.

அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.

*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.
அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ளஅறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..
*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..

*************************

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)

*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx

(NHIS Insurance Complaint number- 7373073730)

*🌐ஜூன் 8, வரலாற்றில் இன்று:மூளைக்கட்டி நோய் விழிப்புணர்வு தினம் இன்று.*

ஜூன் 8, வரலாற்றில் இன்று.

மூளைக்கட்டி நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

மனிதனின் மூளையில் உருவாகும் அபரிமிதமான செல்களின் வளர்ச்சியால் மூளையில் கட்டி ஏற்படுகிறது. உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் தற்போது உள்ள நவீன அறுவை சிகிச்சையின் மூலமாக எளிதாக அகற்றி விடுகின்றனர்.
இந்தியாவில் மும்பையில் செயல்படும் Brain Tumour Foundation தொண்டு நிறுவனம் ப்ரைன் டியூமரால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், சேவைகள், பரிசோதனைக்கான செலவுகள், ப்ரைன் டியூமரால் பாதிக்கப்பட்டவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் தேவையான மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான உதவிகளை குடும்ப பொருளாதார சூழலைப் பொறுத்து நோயால் பாதிக்கப்பட்டவரின் மறு வாழ்விற்காக வழங்கி வருகிறது. இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் (ஜூன்-8) மூளைக்கட்டி நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

*🌐ஜூன் 8,* *வரலாற்றில் இன்று:பிராங்க் லாய்டு ரைட் (ஜூன் 8, 1867– ஏப்ரல் 9, 1959) பிறந்த தினம் இன்று.*

ஜூன் 8,
வரலாற்றில் இன்று.

பிராங்க் லாய்டு ரைட்  (ஜூன் 8, 1867 – ஏப்ரல் 9, 1959) பிறந்த தினம் இன்று.

இவர் இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் அவரே என்று இலகுவில் சொல்லிவிடலாம். இன்றும் பொதுமக்களால் மிக நன்றாக அறியப்படுபவரும் இவரே.

*🌐வரலாற்றில் இன்று:உளவியலாளர் ஆப்ரகாம் மாஸ்லோ நினைவு தினம்.*

ஜூன் 8,
வரலாற்றில் இன்று.

உளவியலாளர் ஆப்ரகாம் மாஸ்லோ நினைவு தினம் இன்று(1970).

அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். ரஷ்ய நாட்டு அரசு, யூதர்களுக்கு எதிராக அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. யூதர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் வேலை பார்க்கும், பிஸினஸ் செய்யும் உரிமை பறிக்கப்பட்டது. அந்த சமூகத்துப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. ரத்தவெறி கொண்ட ஓநாய்கள் விரட்டிய மான்களாக யூதர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அடைக்கலமானார்கள்.

அப்படி அடைக்கலமான ஒரு இளம் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார் ஆபிரஹாம் மாஸ்லோ (Abraham Maslow).

அவருக்குப் பின் வருடத்துக்கு ஒன்றாக, வரிசையாய் ஆண், பெண் என ஆறு குழந்தைகள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே, மாஸ்லோ வித்தியாசமான ஆள். தனிமையில் இனிமை காண்பவன். தன் தம்பி, தங்கைகளோடுகூட விளையாட மாட்டான். எப்போதும் புத்தகம் படித்துக்கொண்டிருப்பான். மரை கழன்றவன் என்று அக்கம் பக்கத்தார் முடிவு கட்டினார்கள். அப்பா, அம்மாவுக்கும் அதுதான் டவுட். என்றாலும் மகனை சட்டம் படிக்கச் சொன்னார்கள் அவர்கள்.
ஆனால், அப்போது பலரும் நுழையாத மனோதத்துவப் படிப்பில் சேர்ந்தார் மாஸ்லோ. மனோதத்துவம் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பாடங்களைக் கரைத்துக் குடித்து டாக்டர் பட்டம் வாங்கினார். 1954இல் தேவைகளின் படிநிலை அமைப்பு  (Hierarchy of needs) என்னும் கொள்கையை வெளியிட்டார். கொள்கையா அது? பிஸினஸ் உலகத்துக்கே புதுப்பாதை போட்ட வேதம்.

மாஸ்லோ அப்படி என்ன சொன்னார்? அவர் கொள்கையின்படி, மனிதர்களின் தேவைகள் கீழ்க்கண்ட படிநிலைகளில் அமைந்துள்ளன.

படிநிலை 1  - உயிர் வாழ்க்கைத் தேவைகள் (உணவு, குடிநீர், உடல் தேவைகள் போன்றவை).
படிநிலை 2 - பாதுகாப்புத் தேவைகள் (உடை, வீடு போன்றவை).
படிநிலை 3 - சமூகத் தேவைகள் (சொந்தங்கள், நட்புகள் போன்றவை).
படிநிலை 4 - சுயமரியாதை, சமூக அந்தஸ்துத் தேவைகள் (பதவி, பட்டம் போன்றவை).
படிநிலை 5 - ஆத்ம திருப்தித் தேவைகள் (சமூகத் தொண்டு, தன்னலம் தாண்டிய செயல்கள்).

எகிப்து நாட்டு பிரமிட்டின் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தனது கொள்கையை ஒரு பிரமிட் படமாக மாஸ்லோ வரைந்தார்.

நாம் எல்லோருமே படிநிலை 1-ல்தான் வாழ்க்கையைத் தொடங்குகிறோம். ஒவ்வொரு நிலைத் தேவைகளிலும் திருப்தி ஏற்படும்போது, மனிதன் அடுத்த படிநிலைக்கு உயர்கிறான்.

படிநிலை 1. சொர்க்கபோகமான சாப்பாடு; வயிறு நிறைந்த திருப்தி; தாகத்தைத் தணிக்க தண்ணீரும் குடித்துவிட்டோம்; துணையும் கிடைத்துவிட்டது. உயிர் வாழ்க்கைக்கான அத்தனை தேவைகளும் நிறைவேறின. மனம் திருப்தி அடைந்துவிட்டதா?

இல்லை. மனம் ஒரு குரங்கல்லவா? அடுத்த படிநிலைக்குத் தாவுகிறது. உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஆடைகள் தேவைப்படுகின்றன, வாங்குகிறான். வெயில், மழை வந்தால் தன்னைப் பாதுகாக்க வீடு வேண்டும் என்று ஏங்குகிறான், ஒரு வீடு கட்டுகிறான். படிநிலை 2-ன் தேவைகளை அவன் திருப்திப் படுத்திவிட்டான்.

ஆனால், என்னிடம் எல்லா வசதிகளும் கொட்டிக்கிடக்கின்றன என்று நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா? நாமும் சமுதாயத்தால் கவனிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்ற தாகம் அவனுக்குள் ஆரம்பிக்கிறது. உறவுகளோடு பழகுகிறான்; நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். மூன்றாம் படிநிலையின் தேவைகளை அவன் இப்போது திருப்திப்படுத்திக்கொண்டுவிட்டான்.
வாழ்க்கையில் நாம் சாதித்துவிட்டதை உலகம் ஒப்புக் கொண்டுவிட்டது; சந்தோஷத்துக்கு இது போதுமே என நீங்கள் நினைக்கலாம். அந்தக் குரங்கு அப்படி நினைக்கவில்லையே? நான்காம் படிநிலைக்குத் தாவுகிறது.

இப்போது என்ன வேண்டுமாம்? ளோடு, தன்னிடம் வசதி இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்டை நீட்டி, பெரிய ஃப்ரிட்ஜ், டிவி என ஆடம்பரமாக வாழ்ந்தால் தான் அந்தஸ்து என நினைப்பது.

 அந்தஸ்து கிடைத்துவிட்டது. ஆனால், அதைத் தம்பட்டம் அடிக்கும் அடையாளங்கள் வேண்டாமா? சிறிய கார் வைத்திருப்பவன் தன் குடும்பத் தேவைகளுக்கு மீறிப் பெரிதாக இருக்கும் இன்னோவா கார் வாங்குகிறான். பக்கத்து வீட்டுக்காரனை வாய்பிளக்க வைக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோ.வி., மியூஸிக் சிஸ்டம், ஏ.சி. என வாங்கித் தள்ளுகிறான்.

அந்தஸ்து அடையாளங்கள் இந்த பொருட்கள் மட்டுமல்ல, பதவி பட்டங்களாகவும் இருக்கலாம். தொண்டன் வட்டத் தலைவனாக ஆசைப்படுகிறான். வட்டம் மாவட்டமாக, மாவட்டம் மந்திரியாக நினைக்கிறான். இந்த தாகங்கள் தணிந்தவுடன், அறிவு ஜீவியாகப் பிறர் தன்னை நினைக்கவேண்டும் என்னும் ஆசை முளைக்கிறது. பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணவில்லை என்றாலும், பல்கலைக்கழக டாக்டர் பட்டம் வாங்கத் துடிக்கிறது.

ஆடின ஆட்டமெல்லாம் போதும், ஆறு மனமே ஆறு என இப்போதுதான் மனசாட்சி பேச ஆரம்பிக்கிறது. தன்னைத் தாண்டி, பிறர் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான். ஐந்தாம் படிநிலைக்கு அவன் வருகிறான். சமூக சேவையில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.
ஆனால், இப்போதும் அவனுடைய உந்துதல் சக்தி நூறு சதவிகிதப் பொதுநல சேவையல்ல. சுயநலம் கலந்த பொதுநலம். ஆனால், மெல்ல மெல்ல ஆத்ம திருப்திக்காகவே வாழ ஆரம்பிக்கிறான்.


*🌐வரலாற்றில் இன்று:உலக கடல் தினம்.*

ஜூன் 8, வரலாற்றில் இன்று.

 உலக கடல் தினம் இன்று.

ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது.

கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிஜன் எனும் உயிர் வாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

உலகப் பெருங்கடல்கள் நாள் என்பது உலக நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை செய்வது குறித்து 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், ரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா கோரிக்கையை முன்வைத்தது.

அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.

அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.