வியாழன், 2 ஜூலை, 2020

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:கணினிக்கு பயன்படுத்தும் மௌஸை கண்டுபிடித்த டக்லஸ் எங்கேல்பர்ட் நினைவு தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

கணினிக்கு பயன்படுத்தும் மௌஸை கண்டுபிடித்த டக்லஸ் எங்கேல்பர்ட் நினைவு தினம் இன்று.

மனிதனுக்கும் கணினிக்கும் தொடர்பு ஏற்படுத்தும் மௌஸ் 1968இல் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபார்ட் பல்கலைககழகத்தில்  டக்லஸ் எங்கெல்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.

மனிதனுக்கும் கணினிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை சுலபமாக்குவதற்காகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.முதல் மௌஸ் மரத்தால் ஆனது. ஒரு பெரிய செவ்வகத்தைப் போல இருக்கும்! டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஒரு டெமோ மூலம் தன் மௌஸை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் டக்லஸ். 'டெமோக்களின் அன்னை', அதாவது 'Mother of All Demos' என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏ.ஆர்.சி என்று அழைக்கப்படும் Augmentation Research Centerல் வேலை பார்த்தவர்களின் கூட்டு முயற்சியாக இருந்தாலும், அதிக பெயரும் புகழும் பெற்றது என்னவோ டக்லஸ்தான். இன்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்கும் மௌஸ்களைப் போல் வண்ண வண்ண பட்டன்கள் எல்லாம் அதில் கிடையாது. ஒரேயொரு பட்டன்தான். நிறைய சக்கரங்கள் பொருத்திய மரப்பெட்டி! ஆனால், அன்று அது ஏற்படுத்திய பரபரப்பு அளவில்லாதது.

      அது சரி, அது என்ன பெயர் "மௌஸ்"? டக்லஸ் ஒரு பேட்டியில் சொல்கிறார். "முதல் மாநாட்டின் சமயம், எங்கள் கையில் அந்த புது கேட்ஜெட் இருந்தது. நாங்கள் அந்த சமயத்தில் அதற்கு என்ன பெயர் வைப்பது என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. ஒரு சிறிய மரக்கட்டை போல் இருக்கும். அதன் நுனியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. மாநாட்டில் இருந்த யாரோ ஒருவர் அதைப் பார்த்து பயந்துவிட்டு 'எலி.. எலி' என்று கத்தினார் கயிற்றை வால் என்று நினைத்துக் கொண்டு! அப்பொழுது வந்த பெயர்தான் மௌஸ்! அன்றிலிருந்து நாங்களும் மௌஸ் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்." சில வருடங்களுக்குப் பிறகு, பில் இங்கிலிஷ் 'Computer Aided Display control' என்ற அவர்தம் புத்தகத்தில் மௌஸ் என்று பெயர் சூட்டுகின்றார்.

     அந்த மரப்பெட்டி மெல்ல மெல்ல அழகாக மாறியது. முதல் மாற்றம் வந்தது மௌஸின் சக்கரத்தில்தான்.அனைத்து சக்கரங்களையும் அகற்றி விட்டு, எல்லா திசைகளிலும் நகரக் கூடிய ஒரு பந்தை பொருத்தினார்கள். அதன் பிறகு ஆப்டிகல் மௌஸ் வர ஆரம்பித்தது. முதலில், டையோடுகளை பயன்படுத்தினார்கள். தொழில்நுட்பம் வளர வளர சென்சர்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். தற்பொழுது இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சுகளும், லேசர் கதிர்களும் உபயோகத்தில் இருக்கின்றன.இன்று மௌஸ் எவ்வளவு தேர்ச்சி அடைந்துவிட்டது என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோமே. ஒரே ஒரு பட்டனில் ஆரம்பித்தது, இன்று நான்கைந்து பட்டன்கள் வரை வளர்ந்து நிற்கின்றது! இதற்கெல்லாம் நடுவில் 'ஆப்பிள்' கம்பெனி, 'நானும் புதிதாக செய்கிறேன்' என்ற பெயரில் 'மைட்டி மௌஸ்' என்றொன்றை விற்கிறது. மற்ற மௌஸ்களைப் போல, வயர்லெஸ் வடிவத்தில் இதுவும் கிடைக்கின்றது.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று: 'சந்திராயன்' மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

 'சந்திராயன்' மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.

 பொள்ளாச்சி அருகில் உள்ள கோதவாடி கிராமத்தில் ஜூலை 2, 1958-ல் பிறந்தார். தந்தை, மயில்சாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மாலையில் தையல் வேலையும் செய்வார். அறிஞர் அண்ணாவின் மீதான ஈடுபாட்டால், தன் பிள்ளைக்கு ‘அண்ணாதுரை’ எனப் பெயர் சூட்டினார்.
மயில்சாமி அண்ணாதுரையின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளியிலே அமைந்தது. ஒழுங்கான வகுப்பு அறைகள்கூட கிடையாது. ‘மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப் பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை மூலம் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்க, 5 கிலோ மீட்டர் நடந்து செல்வார்.
தினமும் ‘பகவத் கீதை’ படிப்பதை வழக்கமாகக்கொண்டு இருக்கிறார். திருக்குறளின் மீது எல்லையற்ற பற்றுதல் உண்டு. பள்ளிக் காலத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை வெகுவேகமாகச் சொல்வார். ‘அரசாங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஊக்கத் தொகையைப் பெறக் கூடாது’ என்ற அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொண்டாலும், 11-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக, அரசாங்கம் தங்கப் பதக்கம் வழங்கி, படிப்புச் செலவையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது.

‘நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம்’ கல்லூரியில் எம்.ஏ. மின்னணுவியல் பயின்றார். தமிழ் வழியில் இருந்து, ஆங்கில வழிக் கல்விக்கு மாறியதால் முதலில் சிரமப்பட்டார். பிறகு, தமிழ் ஆசிரியர் சிற்பி அய்யாவின் ஊக்குவிப்பால், முதன்மையான மாணவனாக ஜொலித்தார். தான் எழுதிய ‘கையருகே நிலா’ என்கிற கட்டுரைத் தொகுப்புக்கு, முன்னுரையை சிற்பியிடம் இருந்தே பெற்றார்.
இளநிலைக் கல்வி படிக்கும்போது, மற்ற மாணவர்கள் ஒரு புராஜெக்ட் செய்யவே திணறியபோது, நான்கு புராஜெக்ட்கள் மற்றும் முதுநிலைக் கல்வியில் மூன்று புராஜெக்ட்கள் செய்தவர் மயில்சாமி அண்ணாதுரை. ‘இதற்குக் காரணம், அன்னைத் தமிழ் வழி கற்ற கல்வியே’ எனப் பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.
‘ஆரோலேக்’ என்கிற ஃப்ரெஞ்ச் கம்பெனியில் வேலை கிடைத்தபோதும், அதைவிடக் குறைந்த ஊதியம் கிடைக்கும் இஸ்ரோவில் பணியாற்றினார். பிறகு, நாசாவில் வேலை வாய்ப்பு வந்தது. அன்னை நாட்டுக்குப் பணியாற்றுவதே நிறைவு’ என்று அதை மறுத்துவிட்டார்.

இஸ்ரோவில் பணியாற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, நுண்செயலியைப் (Microprocessor) பற்றிய இவரின் அறிவு, அங்கே இருந்தவர்களைப் பிரமிக்கவைத்தது. வேலைக்குச் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே, செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கான மென்பொருள் முன்மாதிரியை உருவாக்கலாம் எனச் சொன்னார். அதை, வெற்றிகரமாகவும் செய்து முடித்தார். இதன் மூலம், சென்ஸார் செயல் இழந்தாலும் செயற்கைக்கோள் செயலாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
விஞ்ஞானிகள் கூட்டத்தில்… பிறரின் கருத்துக்களில் தவறு இருந்தால், உடனே சுட்டிக்காட்டிவிடுவார். ‘இது சரியான அணுகுமுறை அல்ல. தனியே அந்த அறிஞரிடம் சென்று விளக்க வேண்டும்’ என்ற முனைவர் நாகபூஷணம் அவர்களின் அறிவுரை, தன் வாழ்வைத் திருப்பியது என்பார். இவரின் புதிய அணுகுமுறை, சந்திராயனின் இயக்குனராக இவரை உயர்த்தியது.

சந்திராயன் மூலம் நிலவில் தண்ணீர் உருவான இடத்தைக் கண்டறிந்து, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தார். அந்த செயற்கைக்கோள் எடுத்த படங்களின் துல்லியம், உலக நாடுகளைப் பிரமிக்கவைத்தது. ‘இது கூட்டு முயற்சியின் வெற்றி’ என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார். மேலும், ‘சாதாரணக் கிராமங்களில் இருந்து கிளம்பிய நாம், இந்த வெற்றியை… நாம் புறப்பட்ட மண்ணில் உள்ள இளம் பிள்ளைகளுக்குச் சொல்லி உத்வேகப்படுத்த வேண்டும்” என்று தன் குழுவினருக்குச் சொன்னார்.
விடுமுறை நாட்களில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாற்றி உத்வேகப்படுத்துகிறார் மயில்சாமி அண்ணாதுரை. அன்னைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு என்பார். இதையே…

‘அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்’

எனத் தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) ஏற்பட்ட தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) ஏற்பட்ட தினம் இன்று.

வங்காளதேச விடுதலைப்  போரினைத் தொடர்ந்து  இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே ராஜதந்திர  நல்லுறவைகளை  மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்  தலைநகரான  சிம்லாவில்  இந்திய  அரசுக்கும்  பாகிஸ்தான் அரசுக்கும் இடையே  ஒரு ஒப்பந்தம் ஜூலை 2, 1972 இல்  கையெழுத்தானது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டொவும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:வால்மார்ட் கடை முதன்முதலில் திறக்கப்பட்ட தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

வால்மார்ட் கடை முதன்முதலில் திறக்கப்பட்ட தினம் இன்று.

 ஜூலை 2, 1962. உலக சில்லறை வர்த்தக வரலாற்றில் முக்கிய மான நாள். சாம் வால்டன் அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாகா ணத்தின் ரோஜர்ஸ் நகரில், தன் முதல் வால்மார்ட் கடையைத் திறந்தார். 4,000 சதுர அடியில் சிறிய இடம், மக்கள் தொகை அதிகமில்லாத ஊர் என்பதால் வாடகை கம்மி. இந்த அனுகூலங்களால், குறைவான முதலீடுதான்.

ஆனால், இத்தனை பணம்கூட வால்டனிடம் இருக்கவில்லை. வங்கியில் இருந்த மொத்தச் சேமிப்பையும் எடுத்தார், வீடு, சொத்துகள் அத்தனையையும் அடகு வைத்துக் கடன் வாங்கினார். அப்புறமும் துண்டு விழுந்தது. அவர் தம்பி ஜேம்ஸ் வால்டன், மேனேஜராக வேலைக்குச் சேர்ந்த டான் விட்டேகர் இருவரும் பணம் போட்டு உதவினார்கள்.

இன்று, வால்மார்ட்டுக்கு 27 நாடுகளில் 11,000 கடைகள், 22 லட்சம் ஊழியர்கள். ஆண்டு விற்பனை 486 பில்லியன் டாலர்கள் (சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்).

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:அரசு ஊழியர்களை அடக்குமுறை செய்ய ஜெயலலிதா எஸ்மா சட்டத்தை பிரயோகித்த கறுப்பு தினம் இன்று(2003).*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

அரசு ஊழியர்களை அடக்குமுறை செய்ய ஜெயலலிதா எஸ்மா சட்டத்தை பிரயோகித்த தினம் இன்று(2003).

ஜூலை 02-ம் நாள் தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் உரிமைகள் சலுகைகள் 2002 - 2003-ல் படிப்படியாக பறிக்கப்பட்டு அடக்கு முறை கட்டவிழ்க்கப்பட்டது .

இதனால் அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் அனைத்து சங்கங்களும் ஓரணியில் திரண்டு ஒன்றுபட்ட ஒட்டுமொத்த கூட்டமைப்பும் போராட்டம் (02.07.2003இல்) நடத்தியது.

 தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பெற்று வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வந்தன.

பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து புதிய CPS 1.4. 2003இல் அமல்படுத்தப்பட்டது.
ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பாதது,
 சரண் விடுப்பு ஒப்படைப்பு ரத்து பென்சன், கமுட்டேசன் 40% என்பது 33.33% சதமாக குறைக்கப்பட்டது நாளது வரை  மாற்றப்படவில்லை. உள்ளிட்ட கோரிக்கைகள் சலுகைகள் நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாள் : 02.07.2003.

இதன் காரணமாக போராட்டக்காரர்களை 30.06.2003 அன்றும் 01.07.2003 அன்றும் நள்ளிரவில் காவல்துறை அலுவலர்கள் ஏவல் துறையாக செயல்பட்டு அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களை வீடு வீடாக சென்று
தீவிரவாதிகளையும் கொலை / கொள்ளைக்காரர்களையும் கைது செய்வது போல் நள்ளிரவில் போராட்டக்காரர்களை கைது செய்த நாள் 02.07.2003.

 ஒரு பாவமும் அறியாத அரசு அலுவலர்கள் / ஆசிரியர்கள் மீது பேருந்து மறித்தல், எரிக்க முயற்சி, பேருந்து நிலையங்களில் பணிக்கு வரும் பெண் அலுவலர், ஆசிரியைகளின் கையை பிடித்து இழுத்தல் , பணிக்கு செல்பவர்களை தடுத்தல் , அரசு உடமைகள் சேதப்படுத்துதல், களவாடுதல் "தகாத வார்த்தைகளால் வசைபாடுதல் " பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என எண்ணற்ற / அற்பமான / பொய்யான தகவல்களால் முதல் தகவல் அறிக்கை தயாரித்து சிறைச்சலைக்கு அனுப்பிய நாள் 2.07.2003

தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர்கள் /மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளும் நிரம்பிய நாள் 02.07.2003.

 இந்த போராட்டத்தின் காரணமாக வேலை வாய்ப்பற்ற தகுதியுள்ள இளைஞர்களுக்கு ரூ.4000/- அடிப்படையில் நியமனத்திற்காக அரசு அழைப்பு விடுத்த நாள்.

 நேர்காணல் மூலம் 15,400 க்கு மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் 02.07.2003.

 காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களின் வீடு வீடாக சென்று தீவிரவாதிகளைப் போல தேடித் தேடி/ஒட ஓட விரட்டிய நாள் 02.07.2003.

அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களின் ஒட்டு மொத்த குடும்பமும் | நண்பர்களும், உற்றார் உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுத நாள் O2.07.2003.

ஒரே கையைழுத்தில் 400000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்பட்ட நாள் O2.07.2003.

அரசியல் தலைவர்கள் / சர்வதேச நாடுகள் / உலகளாவிய அரசு /அரசியல்/தொழிற்ச் சங்கங்கள் / அமைப்புகள் வாயடைத்து என்ன செய்வதென்பதையும் அறியாமல் திகைத்து நின்ற நாள் O2.07.2003.

ஒட்டு மொத்த தொழிற் சங்க கூட்டமைப்பும் , சர்வதேச நாடுகளும் தமிழக அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்காகவும் தமிழக அரசை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய நாள் O2.07.2003.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நியாமானது என அவசர வழக்கில் தமிழக அரசுக்கு தெரிவித்து போராட்டர்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட அறிவுத்திய நாள் O2.07.2003.

 போராட்டம் செய்ய அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்து தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்த நாள் O2.07.2003

முதலில் அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் சாதகமாகவும் செயல்பட்ட 'நீதி, பின்னர் அரசுக்கு சாதகமாக மாறிய / மாற்றிய நிகழ்வு நடந்த நாள் O2.07.2003.

தமிழக மத்திய சிறைகளில் கைது செய்து அடைக்கப்பட்ட அரசு அலுவலர்கள்/ ஆசிரியர்களை சிறிய அறைகளில் ஆடு மாடுகளை பட்டியில் (கூண்டில்)அடைப்பதைபோல் ஒரே அறையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் அடைத்தது, அறைகளில் உள்ள கழிப்பிடித்தில் தண்ணீர் வசதி வழங்காதது, மின்சாரம் துண்டித்தது ,குடி தண்ணீர் வழங்காதது , முதல் வகுப்பு தகுதி பெற்று வந்த அலுவலர்களுக்கு முதல் வகுப்பு தராமல் மறுத்தது , சுகாதாரமற்ற தரமில்லாத உணவு தயாரித்து வழங்கி கொடுமை படுத்தியது,
உடல் நலமில்லாதவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தது. ஏற்கனவே சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுள்ள குண்டாஸ் ,திருடர்கள், வழிப்பறியாளர்கள், கொலைகாரர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை மிரட்டியது என சிறைச்சலையிலும் அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களை போராட வைத்து கொடுமை படுத்தி அழகு பார்த்த தினம் O2.07.2003.

 30.6.03 நள்ளிரவு, 01 .07.03, நள்ளிரவு முதல் 03.7.2003 முடிய அனைவரையும் ESMA சட்டத்தில் கைது செய்து விட்டு பின்னர் பல்வேறு மாற்றங்களுடன் TESMA சட்டத்தில் கைது என 04.07.2003 ல் அவசர சட்டம் இயற்ற காரணமான நாள் O2.07.2003 .

கைது செய்யப்பட்ட மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களில் 88 நபர்கள் உயிர் தியாகம் செய்து இன்னுயிர் நீத்ததற்கு காரணமான கருப்பு தினமும் இந்நாள் 02.07.2003.

போராட்டம் வெற்றி பெறும், இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும் என்பதை அறியாமலேயே உயிர் நீத்த தியாக சீலர்களை போற்றி பொற்பாதங்கள் தொட்டு வணங்க வேண்டிய நாளும், நினைவு கூற வேண்டிய நாளும் வீர வணக்கம் செலுத்த வேண்டிய நாளும் தான் இந்த 02.07.2003.

போராட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பல்லாயிரக் கணக்கில் கைது செய்து விட்டு பின்னர் 1000 நபர்கள் மட்டுமே கைது எனவும் பின்னர் 999 நபர்கள் என அவர்களுக்கு பிடித்த 9-ம் எண் அறிவித்துவிட்டு பின்னர் போராட்டக்காரர்களில் ஒருவரை தகுதி நீக்கம் செய்து அவர் அரசுப் பணியில் இல்லை ஓய்வு பெற்றவர் என தெரிவித்த அவலமும் போராட்ட களத்திற்கு மருத்துவ விடுப்பு மற்றும் பிற விடுப்பு களும் எடுத்து வந்த அங்கீகாரமில்லாத / அரசியல் சார்புடைய சங்கத் தலைவர்களின் முகத்திரை கிழிந்த நாளும் O2.07.2003.

பல்வேறு தொழிற்சங்கங்கள் / கூட்டமைப்புகள், சர்வதேச அமைப்புகள் கம்யூனிசக் கொள்கைகள் ஏற்றுக் கொண்டுள்ள /ஏற்றுக் கொள்ளாத நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்ட நிலையிலான நேசக்கரம் / மற்றும் இயன்ற உதவிகள் செய்து தமது வலிமையையும், ஒற்றுமையையும் சர்வதேச / ஐக்கிய நாடுகள் சபைக்கும் உணர்த்திட காரணமான தினம் O2.07.2003.

ஹிட்லரைப் போல் ஒரு சர்வாதிகாரி நாட்டை ஆண்டால் எப்படியெல்லாம் செய்யலாம் என பாடம் சொன்ன நாள் O2.07.2003

 02.07.2003-ல் நடந்த / நடத்திய கொடுமைகளுக்கு எல்லாம் என்ன தீர்வு என அரசு அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள் தொழிற்சங்க அமைப்புகள் இவர்களை ஒத்த குடும்பத்தினர் , உற்றார் உறவினர்கள் நண்பர்கள், பொதுமக்களும் சேர்ந்து 2004 மே திங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 39+1 என்ற அனைத்து தொகுதியிலும் புரட்டிப் போட்ட தோல்வியும் / வெற்றியும் என அரசியல் தலைகளை சிந்திக்க வைத்த நாளும் இதே தினம் தான்.

 பின்னர் வந்த சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சி மாற்றம் காட்சி மாற்றம் செய்தது. புதியதாக வந்த அரசு மீண்டும் அனைத்து சலுகைகளையும் வாரி வழங்கியது, மேலும் போராட்ட காலம், சிறைக்காலம், தண்டனை காலம் , பணி நீக்ககாலம் என அனைத்து தண்டனைகளையும் தளர்த்தி வந்து இறுதியில் ரத்தும் செய்து அனைத்து காலத்திற்கும் சம்பளம் மற்றும் படிகள் வழங்கி (பணிக் காலம் என அறிவித்து ) அந்த காலத்தை அகராதியின் அடிச்சுவடே காணாமல் போக வைத்த நினைவுகளுக்கு எல்லாம் காரணமான நாள் O2.07.2003.

இப்படி முன்னோர் போராடி பெற்ற பலன்களை நீங்கள் இழக்கப்போகிறீர்களா?

சிந்திப்பீர். செயல்படுவீர்.

புதன், 1 ஜூலை, 2020

பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் பெருந்திரள் முறையீடு! பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுகுறித்து உயர்அலுவலர்களின் ஆலோசனைப் பெற்று இரண்டு நாள்களில் முடிவெடுப்பதாக உறுதி!

பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளை 
நிறைவேற்றுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் பெருந்திரள் முறையீடு!

பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர்
கோரிக்கைகளை நிறைவேற்றுவதுகுறித்து  உயர்அலுவலர்களின் ஆலோசனைப் பெற்று
 இரண்டு நாள்களில் முடிவெடுப்பதாக உறுதி!



கல்வித்துறை அலுவலங்களில் 50% பணியாளர்களுடன் செயல்படுதல் சார்ந்து தருமபுரி CEO செயல்முறை நாள்: 30.6.2020


*🌐ஜூலை 1, வரலாற்றில் இன்று:முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 1, வரலாற்றில் இன்று.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று.

 இந்தியாவின் எட்டாவது பிரதமரான சந்திரசேகர் 1927 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி உத்திர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் பிறந்தார். 1977 முதல் 1988 வரை ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். இவர் மாணவ பருவத்திலேயே அரசியலில் ஆர்வத்தோடு ஈடுபட்டார். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் புரட்சியாளராகத் திகழ்ந்தார்.

1955-ல் பிரஜா சோஷியலிச கட்சியின் உத்திர பிரதேச மாநில செயலராக பொறுப்பேற்றார். 1962இல் மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967இல் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் பொது செயலராகப் பொறுப்பேற்றார். 1969இல் 'யங் இந்தியன்" என்ற வார இதழைத் துவக்கினார். இந்த வார இதழுக்கு அவர் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

 1975, ஜூன் 25ம் தேதி அவசர கால சட்டம் அமலாக்கப்பட்ட பின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் சிறைபிடிக்கப்பட்டார். சமுதாய மாற்றம் மற்றும் ஜனநாயக நலனை உறுதி செய்யும் அரசியலை தேர்ந்தெடுத்தார். ஜனதா தளத்தில் பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை உருவாக்கி இவர் 1990 நவம்பர் 10 ஆம் தேதி எட்டாவது இந்திய பிரதமர் ஆனார். இவர் 2007 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி காலமானார்.

*🌐ஜூலை 1,* *வரலாற்றில் இன்று:எழுத்தாளர் கோவை ஞானி பிறந்த தினம் இன்று.*

ஜூலை 1,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் கோவை ஞானி பிறந்த தினம் இன்று.

எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், பள்ளியாசிரியர் எனப் பலவற்றைத் திறம்படச் செய்தவர் கோவை ஞானி. இயற்பெயர் பழனிசாமி. கோவை, பல்லடத்தை அடுத்துள்ள சோமனூரில் 1935 ஜூலை 1 அன்று, கிருஷ்ணசாமி - மாரியம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். ஞானிக்கு மூன்று வயதானபோது குடும்பம் அவிநாசியில் உள்ள கள்ளிப்பாளையத்திற்குக் குடிபெயர்ந்தது. ஐந்தாம் வகுப்பு வரையில் ஞானி அங்கு படித்தார். தந்தை தானிய வியாபாரி. மிக வறுமையான சூழல். கற்றாழையையும், புழுத்த மக்காச்சோளத்தையும் உண்ணும் சூழலிலும் கல்வியைத் தொடர்ந்தார். கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்றவர், தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழிலக்கியம் கற்றார். அங்கு நிலவிய தமிழ்ச் சூழலாலும் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், சோமசுந்தரம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, முத்து சண்முகம் போன்ற தமிழறிஞர்களாலும் ஞானியின் தமிழார்வம் விரிவடைந்தது. பல்கலைக்கழகம் இவருக்கு பல வாசல்களைத் திறந்துவிட்டது. கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம், மெய்யியல், அறிவியல் எனப் பல்துறை நூல்களை வாசித்தார். அது இவரது பார்வையை விசாலமாக்கியது.

படிப்பை முடித்தபின் தமிழாசிரியர் பணி கிடைத்தது. தன்னுடன் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய இந்திராணியை திருமணம் செய்துகொண்டார். ஓய்வு நேரத்தை வாசிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டார். மார்க்சியம் இவரை ஈர்த்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், திறனாய்வு எனப் பல களங்களில் மார்க்சிய சித்தாந்தத்தின் வழியே ஆய்வுகளை மேற்கொண்டார். நண்பர்களுடன் கோவையில் 'சிந்தனை மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கியவர், 'புதிய தலைமுறை' என்ற இதழை வெளியிட்டார். அதில் காத்திரமான பல கட்டுரைகள் வெளியாகின. 'இராவணன்' என்ற புனைபெயரில் கவிதைகளை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினார். மணிவாசகன், கபிலன், கதிரவன், தமிழ்மாறன் என்று பல புனைபெயர்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நா.பா.வின் நாவல்களை விமர்சித்து இவர் எழுதிய கடிதம் முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே 'புதிய தலைமுறை' வெளிவந்தது. தொடர்ந்து 'வானம்பாடி' கவிதை இதழிலும் முக்கியப் பங்காற்றிய ஞானி அதிலிருந்து வெளியேறினார். 'வேள்வி', 'பரிமாணம்', 'நிகழ்', 'தமிழ்நேயம்' போன்ற இதழ்களில் வெவ்வேறு பொறுப்புகளில் பங்காற்றினார். எழுத்தாளர் ஜெயமோகனை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஞானிதான். ஜெயமோகனின் முதல் சிறுகதையான 'படுகை' நிகழில் வெளிவந்ததன் மூலம் ஜெயமோகனின் கலை, இலக்கியப் பயணம் தொடங்கியது. தொடர்ந்து 'நிகழ்' இதழில் ஜெயமோகனின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார்.

ஞானி சிறந்த கவிஞரும்கூட. அகலிகையின் கதையை 'கல்லிகை' என்ற நீள்கவிதையாக வெளியிட்டிருக்கிறார். அகலிகையை மார்க்சிய கோணத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக அவர் பார்க்கிறார். 'கல்லும் முள்ளும் கவிதைகளும்', 'தொலைவிலிருந்து' போன்றன இவரது கவிதைத் தொகுப்புகளாகும். தாகூரின் 'சண்டாளிகா' நாடகத்தை 'தீண்டாதவள்' என்று இவர் வடித்துள்ளது முக்கியமானது. சமயம் குறித்தும் விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டவர் ஞானி. இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு என்பதே ஞானியின் ஆய்வு முடிவு. அதே சமயம் ஞானியை நாத்திகர் என்றும் மதிப்பிட்டுவிட முடியாது. சமயம்பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒரு நேர்காணலில், "அண்ணாமலையில் நான் படிக்கிறபொழுதே தியானம் செய்வதில் ஈடுபட்டு இறுதியில் நானே பிரம்மம் என்ற பேருணர்வைப் பெற்றேன். 'அத்வைதம்' என்ற பேருணர்வுக்கான பொருண்மைத் தெளிவை நாளடைவில் விவேகானந்தர், தாகூர், பாரதி முதலியவர்களைப் பற்றிய படிப்பறிவின் மூலம் பெற்றேன். இந்தப் பார்வை மார்க்சியத்தின் மீதான எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது" என்கிறார்.

தனது தியான அனுபவம் பற்றி ஞானி, "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, தனியறையில் காலை நேரத்தில் அரைமணி நேர தியானமென்று தொடங்கி நாளடைவில் மிக வித்தியாசமான அனுபவங்களை அடைந்தேன். தியானத்திலிருக்கும்போது கண்ணுக்குள் ஒரு நீலநிற ஆகாயம். அதன் மத்தியில் நீலநிறம் விலகி மையத்தில் ஒரு மேகம். சிறிது நேரம் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மேகம் விலகிக் கண்ணைக் கூசச்செய்கிற மாதிரி சூரியன்.... திடீரென்று மேலே உச்சந்தலையிலிருந்து குளிர்ந்த நீர் அப்படியே மெல்லக் கீிழிறங்கும். அதனுடைய ஆனந்தமும் பரவசமும் அளவில்லாதது... ஒரு கட்டத்தில் வேறுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டன. விடுதியில் சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறேன். நான்கைந்து நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை நான் உற்றுப்பார்த்தபோது நாய்களோடு நான் இருக்கிறேன். ஒருமுறை ரயிலில் பயணம் செய்யும்போது எனக்கெதிரே ஒரு அம்மா குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நிமிடம் உற்றுப் பார்த்ததில் நான் குழந்தையாகி விடுகிறேன்." என்று சொல்லியிருக்கிறார்.

தமிழ் நாவல்கள் குறித்து இவரது திறனாய்வுகள் மிக முக்கியமானவை. கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், நீல. பத்மனாபன், பொன்னீலன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோரது படைப்புகள் மட்டுமல்லாமல் ஜெயமோகன், சு.வேணுகோபால், பாலகுமாரன். ம.வே.சிவகுமார், சு.சமுத்திரம், ராஜம் கிருஷ்ணன் எனப் பலரது படைப்புகள் குறித்து இவர் எழுதியிருக்கும் திறனாய்வுக் கட்டுரைகள் கூர்ந்து வாசிக்கத்தக்கன. ஞானியின் ஆய்வுப்போக்கு குறித்து ஜெயமோகன் "நவீன விமரிசனக் கோட்பாடுகளுடன் மார்க்சியத்தை உரையாட வைத்தலிலும் அழகியல் நீதியாக இலக்கியத்தை அணுகும்படி மார்க்சியத்தை மாற்றி அமைத்தலிலும் ஞானியின் பங்கு முக்கியமானதாகும்" என்கிறார். ஞானியின் நடை மிக எளிமையானது. தெளிவானது. குழப்பமான சிந்தனைப் போக்குகளோ, பரபரப்பான வார்த்தைச் சொல்லாடல்களோ, வாசகரை மயக்கும் உத்திகளோ இல்லாமல் நேரடியாக உரையாடலாக எழுதுபவர் ஞானி. அதுவே அவரது பலம்.

சிறந்த தமிழ் பெண்ணெழுத்தாளர் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். 'மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்', 'தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள்', 'எண்பதுகளில் தமிழ் நாவல்கள்', 'படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம்', 'தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம்', 'நானும் என் தமிழும்', 'தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்', 'நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும்', 'செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம்', 'தமிழிலக்கியம் இன்றும் இனியும்' போன்ற இவரது திறனாய்வு நூல்கள் முக்கியமானவை. மெய்யியல் சார்ந்து இவர் எழுதியிருக்கும், 'மணல்மேட்டில் ஓர் அழகிய வீடு', 'கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை', 'நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்', 'மெய்யியல்' போன்ற நூல்கள் சமயம், கடவுள், தத்துவம் தொடர்பானவை. இவை தவிர்த்து, 'பெண்கள் வாழ்வியலும் படைப்பும்', 'மார்க்சியத்தின் எதிர்காலம்', 'படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும்', 'விடுதலை இறையியல்', 'இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்', 'அறிவியல் அதிகாரம் ஆன்மீகம்' போன்ற தொகுப்பு நூல்கள் முக்கியமானவை. 'மணல்மேட்டில் ஒர் அழகிய வீடு' ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை ஆராய்கிறது. 'எண்பதுகளில் தமிழ் நாவல்கள்' என்ற ஆய்வு நூல் 1980களில் வெளிவந்த சுமார் 30 எழுத்தாளர்களின் 65 நாவல்களை ஆராய்கிறது. 'தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்' என்ற நூல், நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் நாவலாசிரியர்களின் படைப்புகள் குறித்து விளக்குகிறது. 28 திறனாய்வு நூல்கள் உள்ளிட்ட 48 நூல்களை எழுதியிருக்கிறார் ஞானி. அவரது வாழ்வுக்கும் சிந்தனைக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏதுமில்லை என்பதையும், 'ஞானி' பெயருக்கேற்றாற் போல் ஓர் உண்மையான பக்குவநிலையில்தான் வாழ்ந்து வருகிறார் என்பதையும் அவரது படைப்புகளைக் கூர்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

1988ல் ஞானிக்குக் பார்வைக்குறைவு ஏற்பட்டது. அதனால் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார் என்றாலும் வாசிப்பை விட்டுவிடவில்லை. உதவியாளர்கள் மூலம் வாசித்தலும், எழுதுதலும், பத்திரிகை வெளியீடும் தொடர்ந்தது. 27 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வைத்திறன் இல்லாதபோதும் உதவியாளரின் ஒத்துழைப்புடன் இவர் ஆற்றிவரும் தமிழ்ப்பணி குறிப்பிடத் தகுந்தது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலம்பு, குறள், கம்ப ராமாயணம் எனப் பண்டை இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சி உடையவர். தமிழாசிரியர் பணி அதற்கு உறுதுணையாக இருந்தது. பாரதியைத் தன் ஆசானாகக் கருதியவர். முனைவர் பட்டம் பெறாவிடினும் பல முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கியிருக்கிறார். பல பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன. பல கருத்தரங்களில் பங்கேற்றுச் சிறப்புச் சொற்பொழிவாற்றியுள்ளார். ஞானியின் 'மார்க்சியம் பெரியாரியம்' எனும் நூலுக்குத் தமிழக அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் 'செம்மொழி ஞாயிறு' என்னும் பட்டத்தை வழங்கியது. கனடாவின் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' இவருக்கு வாழ்நாள் சாதனைக்கான 'இயல் விருது' வழங்கியது. 'விளக்கு' விருதும் பெற்றவர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் 'பரிதிமாற் கலைஞர்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

தமிழகத்தின் மார்க்சியத் திறனாய்வாளர்களுள் முக்கியமானவரான ஞானி, தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர். மனைவி புற்றுநோயால் 2012ல் காலமானார். தற்போது கோவையில் வசித்து வருகிறார். 80 வயதாகும் இவருக்குப் பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். விளம்பரமின்றி அமைதியாக வாழ்ந்துவரும் ஞானியின் படைப்புகளைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. kovaignani.org என்ற அவரது இணைய தளத்தில் ஞானியின் நூல்கள் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன. 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டிருக்கும் 'இலக்கியப் பிதாமகர்' ஞானி, தமிழுக்குச் செய்திருக்கும் பங்களிப்பு என்றும் எண்ணிப் போற்றத்தக்கது.

*ஜூலை 1, வரலாற்றில் இன்று:கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று.*

ஜூலை 1, வரலாற்றில் இன்று.

 கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று.

அப்பா பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் இருந்து வந்திருந்தார் ; பாகிஸ்தானில் இருந்து அகதியாக எல்லாவற்றையும் அங்கே விட்டுவிட்டு கொஞ்சம் காசு,ஏகத்துக்கும் நம்பிக்கை என்று சாதித்து காட்டியவர் அவர். அவரின் கரம்பிடித்து நடைபயின்ற குழந்தை என்பதால் கொஞ்சம் கல்பனாவுக்கு அடம் அதிகம்.
நான்கு பிள்ளைகள் இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் இன்னமும் செல்லம் தூக்கல். எல்லா குழந்தைகளும் வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது வீட்டின் சுவற்றில் விமானங்களை அவரின் பிஞ்சுக்கரங்கள் கிறுக்கி கொண்டு இருக்கும். அண்ணனுடன் சந்திகர் சாலைகளில் போகிற பொழுது கண்கள் எப்பொழுதும் வானோடு காதல் செய்து கொண்டிருக்கும்.

தாகூர் அரசுப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின் கல்லூரி சேர வேண்டும் என்று முடிவான பொழுது உறுதியாக பெண் பிள்ளைகளே இல்லாத பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் ஏரோநாடிகல் துறையை எடுத்து சாதித்து
காட்டிய அந்த பிடிவாதக்கார பெண் அடுத்து கிளம்பியது அமெரிக்காவுக்கு !
முதுகலைப்பட்டம்,முனைவர் பட்டம் பெற்ற பிறகும் விண்ணை தொடும் அவளின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மூன்றாயிரம் பேர் உயிரை உறைய வைக்கும் தேர்வு முறைகள் இறுதியில் ஆறே ஆறு பேர். அதில் ஒருவராக நம்மின் குட்டிப்பெண்ணும். பயிற்சிகள் ஆரம்பித்தன எந்த அளவுக்கு என்றால் ஆற்றின் ஒரு புறத்தில் இருக்கும் ஒரு பொதிமூட்டையை கொண்டு போய் இன்னொரு புறம் இருட்டில் யாருமே இல்லாமல் சேர்க்க வேண்டும். சேர்த்த பிறகு பிரித்துப்பார்க்க வேண்டும். பிணம் கனம் கனக்கும் அதைக்கொண்டு போய் சேர்த்து பிரித்து பார்த்தால் பிணமே இருக்கும் ! இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களை,சோதனைகளைத்தாண்டி விண்ணில் முதல்முறை பறந்த பொழுது விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி ஆனார் .

கொலம்பியா ஓடத்தில் நாற்பத்தி ஒரு வயதில் பறந்த அந்த வான்வெளி தேவதையின் இறுதி பயணமாக அதுவே மாறிப்போனது. பூமியை ஓடம் தொடுவதற்கு பதினாறு நிமிடங்களுக்கு முன்பு அது வெடித்து சிதற வானோடு உறைந்தது கல்பனா சாவ்லாவின் சிரிப்பு. சின்னஞ்சிறு ஊரில் இருந்து விண்ணைத்தொட்ட அந்த தேவதை மண்ணில் பிறந்த தினம் இன்று.