தினத்தந்தி _ தலையங்கம்
‘நீட்’ தேர்வுக்கு என்ன அவசரம் வந்தது?
ஆகஸ்ட் 28, 2020
இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்று மத்திய அரசாங்கமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், திருமண மண்டபங்களை திறக்கவோ, சினிமா தியேட்டர்களை திறக்கவோ, பெரிய வழிபாட்டு தலங்களை திறக்கவோ, ஏன் பள்ளிக்கூடங்களை - கல்லூரிகளைத் திறக்கவோ இன்னும் அனுமதிக்கவில்லை.
ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, ‘நீட்’ தேர்வையும், ஜே.இ.இ. என்று கூறப்படும் இணை நுழைவுத் தேர்வையும் ரத்துசெய்யவோ, தள்ளிவைக்கவோ மத்திய அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை. எவ்வளவோ கோரிக்கைகள் விடப்பட்டும் பலனில்லை. இந்தநிலையில், ஜே.இ.இ. தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலும், ‘நீட்’ தேர்வு 13-ந்தேதியும் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துவிட்டது. ஜே.இ.இ. தேர்வை இந்தியா முழுவதும் 9 லட்சத்து 53 ஆயிரத்து 473 பேர், 660 மையங்களில் எழுதுவார்கள் என்றும், தமிழ்நாட்டில் 53 ஆயிரத்து 765 பேர், 34 மையங்களில் எழுதுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், ‘நீட்’ தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர், இந்தியா முழுவதிலும் உள்ள 3,842 மையங்களிலும், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர், 238 மையங்களிலும் எழுதுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. இப்போது ஹால்டிக்கெட் வழங்கும் பணியையும் தொடங்கிவிட்டார்கள். இந்தத் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று மாணவர்களும், அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் வலியுறுத்திவருகின்றன. இந்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தேர்வுகளை உடனடியாக ஒத்திவைக்கவேண்டும் என்று மத்திய கல்வி மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று முன்தினம் இணையதளம் மூலமாக கூட்டிய கூட்டம் ஒன்றில், மம்தா பானர்ஜி உள்பட கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 மாநில முதல்-மந்திரிகளின் கருத்தும் ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்பதாகவே இருந்தது. மேலும், அனைவரும் ஒன்றாக இணைந்து, ‘நீட்’ தேர்வுக்கு அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ‘நீட்’ தேர்வு நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், ‘நீட்’ தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர், இந்தியா முழுவதிலும் உள்ள 3,842 மையங்களிலும், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர், 238 மையங்களிலும் எழுதுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. இப்போது ஹால்டிக்கெட் வழங்கும் பணியையும் தொடங்கிவிட்டார்கள். இந்தத் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று மாணவர்களும், அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் வலியுறுத்திவருகின்றன. இந்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தேர்வுகளை உடனடியாக ஒத்திவைக்கவேண்டும் என்று மத்திய கல்வி மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது தி.மு.க.வின் கொள்கை. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் அதுவும் அனைவரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் இந்தக்கட்டத்தில், மாணவ - மாணவியரைத் தேர்வுகள் மூலம் துன்புறுத்துவதை ஒத்திவைப்பதாவது; ‘நீட்’ ரத்துக்கான தொடக்கமாக அமையட்டும்” என்று கூறியுள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை ரத்துசெய்யும் வகையில் மத்திய அரசாங்கம் அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆக, ஒட்டுமொத்த இந்தியாவின் குரல் ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்பதுதான். மத்திய அரசாங்கம் உடனடியாக இதற்கு செவிசாய்த்து, ஒன்று இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும். அல்லது கொரோனா பாதிப்பு குறையும்வரை தள்ளிவைக்கவேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. பல மாநிலங்களில் போக்குவரத்து வசதியும் இல்லை. இப்போது ஐ.ஐ.டி.யையோ அல்லது மருத்துவ கல்லூரிகளையோ நிச்சயமாக உடனடியாக திறக்கமுடியாது. அப்படியிருக்க, ‘நீட்’ தேர்வை நடத்த மட்டும் என்ன அவசரம் வந்தது? என்பதுதான் மாணவர்களின் கேள்வி.