தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பதிவு...
“ செருமுகம் நோக்கிச் செல்கெனெ விடுமே! “
சங்க இலக்கியங்களில் ஒன்றான புற நானூற்றில் உள்ள பல பாடல்களில் மேற்குறித்தவாறு முடியும் புறப்பாடலும் ஒன்று. ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
வீரத்தமிழ்மகள் ஒருத்தியின் தந்தை முதல் நாள் நடந்த போர்க்களத்தில் ஒரு யானையை வீழ்த்தி மாண்டு போனார் ; நேற்று நடந்த போரிலோ அவளது கணவன் ஆநிரைகளை மீட்கப் போராடி மடிந்து போனான்; வாழ்க்கையின் இரு பெரும் அரண்களையும் இரண்டே நாட்களில் அடுத்தடுத்து இழந்த அந்தத் தாய், இன்றைக்கும் போர்ப்பறை கேட்டவுடன், அவ்வொலியில் பெருவிருப்பம் கொண்டவளாகி, வாழ்வின் பற்றுக்கோடாக இருக்கும் தன் ஒரே மகனையும் அழைத்து அவன் தலையை வாரி, வெண்ணிற ஆடையை உடுத்தி , கையில் வேலினைக் கொடுத்து இன்முகத்தோடு, “போர்க்களத்துக்குப் போ மகனே!” என்று அனுப்பி வைத்தாள் என்று அந்தப் பாடல் சொல்கிறது.
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள்
கழித்து இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது.
கொரொனா நோய்த்தொற்று இன்னும் குறையாத நிலையில், தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வித்துறை, அக்டோபர் 1ம் தேதி முதல் ‘ சந்தேக நிவர்த்திக்காக’ பள்ளிக்கூடங்களைத் திறப்பதாக அறிவித்து உள்ளது. ‘சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும், ஆலோசனையைப் பெறவேண்டியும்’தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள், தங்கள் சுய விருப்பத்தையும், முழு மனதுடனான தங்கள் ஒப்புதலையும் தெரிவித்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அனுப்பவேண்டிய கடிதத்தின் மாதிரியும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றது.
கடித வரிகளைப் படித்த போது, அதை அனுப்பி வைக்கப் போகும் ஒவ்வொரு பெற்றோரும், போர்க்களத்துக்குப் பெரு விருப்பத்தோடு தானே தன் பிள்ளையை அனுப்பிவைத்த புறநானூற்றுத் தாயாக மாறவேண்டும் என்ற அவர்களின் விருப்பம் புலனாகிறது. அவ்வாறு நாம் கருதும் வகையில் இந்தக் கடிதத்தை வரைவு செய்தவர், நிச்சயம் ஒக்கூர் மாசாத்தியார் வழிவந்தவராகவே இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடும் உடன் எழுகிறது.😉