₹ 50,000-க்கு மேல் TDS பிடித்தம், ITR தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்; புதிய விதிமுறைகள் என்னென?
பான் எண் கொடுத்தால் 10 சதவிகிதம் டி.டி.எஸ் பிடிக்கும்பட்சத்தில், பான் எண் இல்லை என்றால் 20% டி.டி.எஸ் பிடிக்கப்படும்.
2021 ஜூலை 1-ம் தேதி முதல் இந்திய வருமான வரிச் சட்டத்தில் புதிய பிரிவு நடைமுறைக்கு வருகிறது.
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி கடந்த 2020-21 பட்ஜெட்டின்போது வருமான வரிச் சட்டத்தில் 206 ஏ.பி மற்றும் 206 சி.சி.ஏ ஆகிய (206AB and 206CCA) பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான கே.ஆர்.சத்தியநாராயணன் கூறும்போது, ``ஒருவரிடமிருந்து டி.டி.எஸ் (மூலத்தில் வருமான வரி பிடித்தம்) பிடிக்கும்பட்சத்தில் அவர் கண்டிப்பாக பான் கார்ட் எண் கொடுக்க வேண்டும். அப்படி பான் எண் கொடுக்கவில்லை என்றால் அதிக வரி பிடிக்கப்படும். பொதுவாக, பான் எண் கொடுத்தால் 10 சதவிகிதம் டி.டி.எஸ் பிடிக்கும்பட்சத்தில், பான் எண் இல்லை என்றால் 20% டி.டி.எஸ் பிடிக்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் (2018-19 மற்றும் 2019-20) ரூ.50,000-க்கு மேல் ஒருவரிடமிருந்து டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால், இனி அவர்களுக்கு இரு மடங்கு டி.டி.எஸ் பிடிக்கப்படும். மேலும், அபராதம் செலுத்த வேண்டி வரலாம். இந்தப் புதிய சட்டப்பிரிவு 2021 ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’’ என்றார்.
வருமான வரித்துறை ஏற்கனவே 2021-22 –ம் நிதி ஆண்டில் 2018-19 மற்றும் 2019-20 நிதி ஆண்டுகளில் ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடிக்கப்பட்டு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களின் பட்டியலைத் தயாரித்திருக்கிறது. அவர்கள் விரைவில் வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்களுக்கான டி.டி.எஸ் பிடித்தம் இரு மடங்காக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது.
நன்றி : விகடன்