பணமதிப்பு நீக்கமும் பொதுச் சரக்கு-சேவை வரி அமலும் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.
நேர்முக, மறைமுக வரி வசூல் அதிகரிப்பு இதைக் காட்டுகிறது. பொருளாதாரத்தை 'முறைசார்ந்த அமைப்பு'க்குக் கொண்டுவருவது, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற இரண்டு நோக்கங்களும் நிறைவேறிவருகின்றன.
2015-16 நிதியாண்டில் 5.9 கோடிப் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல்செய்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 1.01 கோடி மேலும் உயர்ந்துள்ளது.
தனிநபர்கள் செலுத்தும் வருமான வரி அளவு 2017-18 நிதியாண்டில் ஜிடிபி மதிப்பில் 2.3% ஆக உயர்ந்து வரலாறு படைக்கவிருக்கிறது. 2013-14 நிதியாண்டு முதல் 2015-16 நிதியாண்டு வரையில் இது ஜிடிபியில் 2% ஆகவே இருந்தது. நாட்டு மக்களில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வெறும் 4%. ஆனால், இது 23% ஆக இருக்க வேண்டும். எனவே, சிறிய அளவிலான இந்த எண்ணிகை அதிகரிப்பு, எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த முதல் ஆறு மாதங்களில் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50% அளவுக்கு உயர்ந்திருக் கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு முன்னால் நாடு முழுக்க 65 லட்சம் பேர்தான் வணிக வரி செலுத்தினர். இப்போதும்கூட எல்லோருமே தங்களைப் பதிவுசெய்து முடித்துவிடவில்லை. இது வளரும்போது வரிக்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதாச்சாரம் அதிகரித்து, பேரியல் பொருளாதாரக் காரணிகளை மேலும் வலுப்படுத்தும்.
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது மத்திய அரசின் வெளி வர்த்தக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறையும் நிச்சயம் அதிகரிக்கும். இந்நிலையில் நேர்முக, மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த விலை உயர்வின் சுமையை அரசால் குறைக்க முடியும்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள பிரச்சினையைத் தீர்த்துவைத்தும், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சரக்குப் போக்குவரத்தை 'இ-வே பில்' முறை மூலம் எளிமையாக்கியும் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட முடியும்.
புதிய பட்ஜெட்டில் வருமான வரி விகிதமும், அடுக்குகளும் மாற்றப்படவில்லை. போக்குவரத்து, மருத்துவச் செலவுகளுக்காக ரூ.40,000 நிரந்தரக் கழிவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத் தொகை யிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய் ரூ.50,000 வரைக்கும் வரிப் பிடித்தம் இருக்காது. வருமான வரி விதிப்பில், அதிக சலுகைகளை அளிக்காவிட்டாலும், வரவு - செலவு பற்றாக்குறை அதிகரித்துவிடக் கூடாது என்ற கவனம் வெளிப்படுகிறது. மக்களுடைய துயரங்களையும் பொருளாதாரப் பிரச்சினை களையும் தீர்ப்பதற்கு மனிதாபிமானம் உள்ள அணுகு முறையும் அவசியம் என்பதை அரசு உணர வேண்டும்.
நன்றி:தி இந்து தமிழ்,02.02.18.