செவ்வாய், 8 மே, 2018

தலைமை செயலகம் வந்தவர்கள் தடுத்து நிறுத்தம்-அரசு ஊழியர்கள் சாலை மறியல்...

JacttoGeo போராட்டம் எதிரொலியாக தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்...


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னைக்குள் நுழைவதை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்  
தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்றும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் கைது நடவடிக்கை தொடர்கிறது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக JacttoGeo அறிவித்ததன் எதிரொலியாக தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்

தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு...

அரசு ஊழியர்களை விட எம்.எல்.ஏ.க்களுக்கு தான் அதிக சம்பள உயர்வு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குற்றச்சாட்டு...


ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்  பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்து இருந்தார். அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை வெளியிட்டு, இது தமிழக அரசின் வரி வருவாய் தொகையில் 70 சதவீதம் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை(விளம்பரம்) அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலையும், அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடு நிலவி வருகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில், 'அரசு அலுவலர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை திட்ட செலவினமாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர வருவாய் செலவினமாக கருதக்கூடாது' என்று தெளிவாக கூறி உள்ளார். இதனை முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரும் வழிமொழிந்து உள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளார் கு.தியாகராஜன் கூறும்போது, 'எங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் 15 முதல் 20 சதவீதம் தான். ஆனால், கடந்த ஆண்டு எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளத்தை 55 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இது அவர்கள் சம்பளத்தில் 100 மடங்கு அதிகமாகும். அரசு ஊழியர்களை விட எம்.எல்.ஏ.க்களுக்கு தான் அதிக சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதுக்கு கட்சித்தலைவர்கள் கண்டனம்...


மாநிலம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்களின் போராட்டத்தை களைய வேண்டுமானால், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சரோ, முதல்-அமைச்சரோ பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுப்பதால் தான் அரசு கடன் சுமையில் சிக்கியிருப்பதை போன்றும், அதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதை ஏற்க முடியாது. அரசு ஊழியர் ஊதியம் உயர்த்தப்பட்டது பிரச்சினையில்லை. அதற்கு இணையாக அரசின் வருமானத்தை உயர்த்தாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகும்.

இதையெல்லாம் மறைத்துவிட்டு, அரசின் தோல்வியை அதிகாரிகள் மீது சுமத்தி சிக்கலை திசைதிருப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வீணாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

 'மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பு தலைவர்களை இரவோடு இரவாக கைது செய்து உள்ளனர். போராட்டத்துக்கு வந்து கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாகனங்கள் வழியிலேயே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ள கொடுமை நடைபெற்று வருகிறது. இத்தகைய அரசின் மோசமான நடவடிக்கைகள் அரசின் ஆணவ போக்கையே காட்டுகிறது. எனவே இதனை தவிர்த்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த நிலையில், திடீரென முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை த.மா.கா. வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

எத்தனை பேர் கைது செய்யப்பட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு...


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது..

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக போலீசார் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் முதலே கைது செய்த வண்ணம் உள்ளனர்.

இருந்தபோதிலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகள் அனைத்தும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே. அவற்றை செயல்படுத்தாத காரணத்தால் தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே கடந்த பிப்ரவரி 21-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டோம். பின்னர் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதை கருத்தில் கொண்டு எங்களது போராட்டத்தை மே 8-ந் தேதிக்கு (இன்று) மாற்றினோம். அதன்படி, இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த தயாரானோம்.

ஆனால், எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண விரும்பாத தமிழக அரசு எங்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களை  கைது செய்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். அதில் மாவட்டத்துக்கு தலா 2 ஒருங்கிணைப்பாளர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் போராட்டத்திற்கு வருபவர்களை சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் தான் மறித்து கைது செய்வார்கள். ஆனால், இந்த முறை அந்தந்த மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலேயே வழிமறித்து போலீசார் கைது செய்து உள்ளனர். 

போராட்டத்தை தடுக்க நினைக்கும் தமிழக அரசின் உச்சகட்ட நடவடிக்கையாக, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் தனியார் பஸ்கள், வேன்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிமம் வழங்கவில்லை. இரவு நேரத்தில் போலீசாரின் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த சுங்கச்சாவடியை கடந்து 50 மீட்டர் தொலைவிலும் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அனைத்து பஸ்களிலும் தீவிரமாக சோதனை செய்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்கின்றனர்.

எனினும், ஆசிரியர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் 2 நாட்களுக்கு முன்பே ஏராளமான ஆசிரியர்கள் சென்னை வந்துவிட்டனர். மேலும், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கார், ரெயில்கள் மூலம் சென்னை வர உள்ளனர். எனவே ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும், அடக்குமுறைகளை அரசு செயல்படுத்தினாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு இந்த கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று நடைபெற உள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக் கான ஏற்பாடுகளை செய்து வரும் முக்கிய நிர்வாகிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 250 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஞாயிறு, 6 மே, 2018

தமிழகத்திற்கு வரும் 2018-19ம் கல்வியாண்டுக்கு மொத்தம் 1427.37 கோடி மத்திய அரசின் பங்களிப்பு~ எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ இணைத்து சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டம்…


சர்வ சிக்‌ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

பள்ளி கல்வித்துறையில் சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. 

இத்திட்டத்தில் 1 முதல் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் வழிக்கற்றலும், 5 முதல் 8ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பித்தல் நடைபெறுகிறது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, பள்ளி வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை கட்டுவது, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி, பெண் கல்வி போன்ற பல்வேறு கல்வி இணை செயல்பாடுகள் இந்த திட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டோடு இத்திட்ட செயல்பாடுகள் முடிவுக்கு வந்த நிலையில் பின்னர் காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

மேலும் கடந்த 2005ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுகின்ற சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் ( ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றை இணைத்து 'சமக்ர சிக்‌ஷா அபியான்' (எஸ்எஸ்ஏ) என்ற புதிய திட்டத்திற்கு மத்திய  அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் இனி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி செயல்பாடுகள் சமக்ர சிக்‌ஷா அபியானின் கீழ் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே எஸ்எஸ்ஏ மற்றும் ஆர்எம்எஸ்ஏக்கு தனித்தனியே அலுவலர்கள் நியமித்து மாநில அளவில், மாவட்ட அளவில், வட்டார அளவில் கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இரண்டும் ஒன்றிணைக்கப்படுவதால் இவ்விரு திட்டங்கள் சார்ந்த அலுவலகங்களும் இனி கலைக்கப்படும். 

அவற்றுக்கு பதிலாக சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தை செயல்படுத்த புதிய அலுவலர்களை கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். ஒரே அலுவலகம் செயல்படும். கல்வித்துறை அமைச்சரை தலைவராக கொண்ட ஆளுகை குழுவும், பொது கல்வித்துறை செயலாளரை கொண்ட நிர்வாக குழுவும் இடம்பெறும். புதிய குழுக்களுக்கான அதிகாரங்களும், கட்டுப்பாடுகளும் தொடர்பான விதிமுறைகள் ஒரு மாத காலத்திற்குள் வகுக்கப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் திட்டம் செயல்பாட்டிற்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எஸ்எஸ்ஏ, ஆம்எஸ்எஸ்ஏக்கு நியமிக்கப்பட்டுள்ள தனித்தனி திட்ட இயக்குநர்களுக்கு பதிலாக ஒரே திட்ட இயக்கநர் இடம்பெறுவார். சமக்ர சிக்‌ஷா அபியானுக்கு நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. 

 இவை ஒருபுறம் இருக்க வரும் கல்வியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் மாவட்ட அளவில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமக்ர சிக்‌ஷா அபியான் தொடர்பான வரைவு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பட்ஜெட் விபரங்கள் ஓரிரு நாட்களில் மாநில திட்ட இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்திற்கு 1427.37 கோடி
சமக்ர சிக்‌ஷா அபியானில் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு இடம்பெறும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதமும், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதம் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்திற்கு வரும் 2018-19ம் கல்வியாண்டுக்கு மொத்தம் 1427.37 கோடி மத்திய அரசின் பங்களிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முயற்சி இருந்தால் உலகில் எதுவும் சாத்தியமே~கைகள் இழந்தவர்களுக்கு தானியங்கி கரங்கள்…

கார் விபத்தில் சிக்காமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம்...

பூகம்பம், பனிப்புயலை ஆய்வு செய்ய செவ்வாய் கிரகத்துக்கு புறப்பட்டது இன்சைட்~நாசா ஆய்வு மையம் அனுப்பியது…