திங்கள், 21 மே, 2018
பிடித்தம் செய்த TDS தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம்...
பிடித்தம் செய்த TDS தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
வருமான வரி சட்ட விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
டிடிஎஸ் பிடித்தம் செய்வோர் நிலுவை வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக செலுத்த செய்யவும் அபராதம் விதிப்பதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது.
இதில் வரி பிடித்தம் செய்வோர் கவனத்துக்கு:
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை செலுத்த இந்த மாதம் 31ம் தேதி கடைசி.
பிடித்தம் செய்த வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதித்தால், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும். எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட தொகையை பிடித்தம் செய்து வைத்திருந்தால் உடனடியாக வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும்.
பிடித்தம் செய்யாதவர்கள் உடனடியாக பிடித்தம் செய்து இந்த மாதத்துக்கு செலுத்த வேண்டும். இவர்கள் https://www.tdscpc.gov.in. இணையதளத்தில் தங்களது டான் எண் மற்றும் பிடித்தம் செய்தவர்களின் பான் எண் பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது டான் எண் குறிப்பிடாமல் டிடிஎஸ் பட்டியல் சமர்ப்பித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கிய குறிப்பு:
இந்த பணத்தை அந்தந்த டிடிஓ- க்கள் சம்பளம் வழியாக மட்டுமே பிடித்தம் செய்தல் வேண்டும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் பட்டியல்...
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு இன்று தற்காலிக மதிப்பெண் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் நடந்தது. மே 16ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
இதையடுத்து, மே 21ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இதன்படி, மாணவ மாணவியர் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளிகள், தேர்வு மையங்களில் இன்று மதியம் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்து தாங்களே தங்களின் தற்காலிக மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஞாயிறு, 20 மே, 2018
பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான்...
பிளஸ் 2 படிப்பில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டில் பிளஸ் 2வில் உள்ள 6 பாடத்திற்கும் இனிமேல் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண் மட்டுமே கணக்கிடப்படும்.
ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை கடந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது.
அதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் 2018-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் பிளஸ்2க்கு மட்டும் தனியாக மதிப்பெண் சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாட வகுப்பு நடத்த -அமைச்சர் உத்தரவு...
புதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில் 170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன.
இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது. அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)