வியாழன், 21 பிப்ரவரி, 2019

**5, 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு ... அரசு பின்வாங்கியது ஏன்?**

*5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது என்ற அரசின் முடிவுக்குக் கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.*

*`இடை நிற்றல் இல்லாத நிலை ஏற்படுத்திட, எட்டாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடத்துவதில்லை' என்ற முறை இருந்துவருகிறது. இந்த நிலையில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த முனைந்தது தமிழக அரசு. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவை முடிவெடுக்கும்" என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே பள்ளிக்கல்வித் துறை, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து விவரங்களையும் சேகரித்து, வினாத்தாள் தயாரிக்கும் பணியைத் தொடங்கியது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.*

*`5 மற்றும் 8-ம் வகுப்பின் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், தமிழக அரசு  இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?' எனக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.*

*இதுகுறித்து முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான வசந்தி தேவியிடம் பேசினோம். ``5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது மிகவும் பிற்போக்குத்தனமானது; இது ஏழைக் குழந்தைகளுக்கும், பொதுக்கல்விக்கும் எதிரானது. கல்வியில் மாற்றம் கொண்டு வருகிறேன் எனப் பொதுத்தேர்வை அறிமுகப்படுத்துவது, ஏழை குழந்தைகளுக்குக் கிடைத்து வரும் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவது போன்றது. அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற இலவச கட்டாய கல்வி சட்டத்துக்கு இது முரணானதும் கூட.*

*தொடக்கக்கல்வியில் பொதுத்தேர்வு என்று புனல்கொண்டு வடிகட்ட நினைத்தால், ஏழை  குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் உருவாகும். இதனால், பெரும் நிறுவனங்களுக்குக் குறைந்த ஊழியத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற சூட்சமம் அடங்கி இருப்பதையும் கவனிக்க வேண்டும். பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவார்கள். இவர்களுக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது. பெண் குழந்தைகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதபோது, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே நிறுத்தும் சூழலும் ஏற்படும். குழந்தைத் திருமணத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.*

*ஒருமுறை பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்கள், அடுத்த பொதுத்தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று எந்த ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை. தொடக்கக் கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்குத் தகுந்த முறையில் கற்றுக்கொடுப்பதற்கு வசதியில்லை என்றுதான் அர்த்தம். பள்ளிகளில் தகுந்த வசதி ஏற்படுத்தாதது அரசின் தோல்வியே'' என்றார்.*

*கல்வியாளர் ராஜகோபாலன், ``தொடக்கக்கல்வியில் சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உயர் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார்கள். ஆரம்பக் கல்வி வகுப்புகளில் பொதுத்தேர்வு வைப்பது மழலைகளிடையே தேர்வு பயத்தையே உருவாக்கும். பொதுத்தேர்வில் தோல்வி அடைய வைப்பது அவர்களிடையே வன்முறை குணத்தையே உருவாக்கும்" என்றார்.*

*மாநில பொதுக்கல்வி மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ``பொதுத்தேர்வுகளால் மாணவர்களின் திறமையை மேம்படுத்த முடியாது. கற்பித்தலைச் சிறப்பான முறையில் மேற்கொள்வதன் மூலமே மாணவர்களைத் திறன் மிக்கவர்களாக மாற்ற முடியும். ஆரம்ப கல்விக்கான போதுமான கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களும் இல்லாத சூழ்நிலையில், தரத்தை மேம்படுத்துவதற்காகப் பொதுத்தேர்வு என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை" என்றார்.*

*தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், ``மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் 5 பொதுத்தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது. இது மாணவர்கள் மன அமைதியைக் குலைக்கும். கடந்த ஆண்டு  11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கை குறைந்திருக்கிறது. கல்வி முறையைத் தகுந்த முறைக்கு மாற்றியமைக்காமல் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்துவதில் நியாயமில்லை" என்றார்.*

*அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து, "இந்த ஆண்டு 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது" எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தற்காலிகமாக இந்தப் பொதுத் தேர்வைத் தள்ளிவைத்திருப்பதாகவே தெரிகிறது. ஒருவேளை மீண்டும் பா.ஜ.க தலைமையிலான அரசு ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி நெருக்கடி கொடுக்கப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.*

மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணிக்கு நேர்காணல்~22ம் தேதி தொடக்கம்…

நாமக்கல் பகுதியில் பகல் வெப்ப அளவு உயரும் ~ வானிலை மையம் தகவல்...

குழந்தைகள் நலக்குழு பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

தமிழ்த்தாயே!ஊழித்தாண்டவம் ஆடுவாயாக!!

வரித்திட்டம்,
மின் திட்டம்,
நீட்த்தேர்வு 
என்பனவற்றையெல்லாம் 
மத்தியரசு
மாநில அரசுகளின் வழியிலேயே மாநிலங்களில் நடைமுறைப்படுத்திட 
இசைவு பெறும் என்று அறிந்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு ,
எட்டாம்வகுப்பு  பொதுத்தேர்வு போன்றனவற்றில் மாநில அரசுகள் வழியில் இல்லாமலேயே துறையின் இயக்குநர்கள்,
மாவட்ட சிஇஓக்கள் போன்ற அலுவலர்களின் வழியிலேயே நடைமுறைப்படுத்திட எத்தனிப்பது 
மாநில உரிமைக்கு,
மாநிலத்தின் கல்வி உரிமைக்கு,
மாநில சுய ஆட்சி உரிமைக்கு விடப்பட்டுள்ள சவலாக கருத இடமில்லை என்றாலும்,
பங்கம் விளைவிக்கிறது என்றே ஆழ்மனம் கவலைகொள்கிறது.

பெரிதும் சிலாகித்து சட்டமன்றத்திலேயே பாராட்டுப்பெற்ற  முப்பருவ பாடமுறை சத்தமின்றி கொல்லப்படுகிறது.

தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு முறை இயற்கை மரணம் நோக்கி தள்ளப்படுகிறது.

எளிய செயல்வழி மற்றும் எளிய படைப்பாற்றல் வழி கல்விமுறைகளின் வழியிலான தேர்வு முறைகள் கைவிடப்படுகிறது.

சுமையின்றி கற்றல் என்பது தூரதேசத்து கதையாகிறது.

1 - 14 வயது குழந்தைகளுக்கு இலவசக்கல்வி என்பது தமிழ்நிலத்தில்  கட்டணக்கல்வியாகிறது.
 
தாய்மொழி வழிக்கல்வியின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கிறது.

ஏகலைவன்களின் தேசமாக தமிழ்தேசம் பின்னுக்கு தள்ளப்படும் சதித்திட்டமாகிறது.

குலக்கல்வி முறைக்கு சத்தமின்றி 
தமிழ் சமூகம் தள்ளப்படுகிறது.

கல்வி சிறந்த தமிழகம் என்பார் மகாகவி பாரதி.
கல்வி சிதைந்த தமிழகமாக சிதைக்கப்படுகிறது.

நெஞ்சம்  பதறுகிறது.
குடல் குலையெல்லாம் அதிர்கிறது.
உடலெல்லாம் நடுங்குகிறது.
சத்தமின்றி,
பொது விவாதம் இன்றி,
ஒருமித்த கருத்தொற்றுமை இன்றி
பொதுத் தேர்வு 
என்று சுற்றறிக்கை வெளியாவது
 நாகரீக சமுதாயத்தில் தான் இப்படி எல்லாம் நடக்கும்(!?); சாத்தியமாகும் போல் என்ற விரக்தி பீடிக்கிறது.

மாதச்சம்பளம் தேவை என்ற குடும்பநிலைக்காக 
எத்தனை ..
எத்தனை ...
பாவங்களை எல்லாம் கல்வியில்  செய்வது?!

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு துரோகம் இழைப்பது?!

அய்யகோ! 
தமிழ் நிலமே!
நீ பிளப்பாயாக!என்னைப் புதைத்துக்கொள்வாயாக!
 சிலப்பதிகாரத்து பூதங்களை அவிழ்த்து விடுவாயாக!
கண்ணகியின் அறச்சீற்றத்தை எல்லோருக்கும்  ஊட்டுவாயாக!
அறமே வெல்லட்டும்
குழந்தைகள் நலம் காக்கட்டும்
-முருகசெல்வராசன்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் - வரவினங்கள் மற்றும் செலவினங்கள் ஒத்திசைவு செய்வது தொடர்பாக அறிவுரைகள்...

நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தலைவிரித்தாடும் இலஞ்ச-இலாவண்ய, ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடுக!

நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தலைவிரித்தாடும் இலஞ்ச-இலாவண்ய,
ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடுக! என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல் மாவட்டக்கிளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனடிப்படையிலேயே கையூட்டு ஒழிப்பின்  ஒருபகுதியாகவே  திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீது உரிய விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு  தொடக்கக்கல்வி இயக்குநரிடம் ஆசிரியர் மன்றம் எதிர்நோக்குகிறது. சட்டத்தின் ஆட்சி் நிலைநிறுத்தப்படும் என்று விண்ணப்பம் படைக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தின் 16 இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையப்பணிகளிலிருந்து விடுவித்து தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் மீளப்பணியமர்த்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக்கிளை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரிடம் வேண்டுகோள்...