சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப்பெறுக!
கல்வியாளர்கள்- அறிவியலாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம்!
***************************
மத்திய அரசு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே இருக்கும் 2006-ம் ஆண்டு அறிவிக்கையை வலுப்படுத்துங்கள் எனக் கோரி 500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மத்திய சுற்றச்சூழல் அமைச்சகம் இந்த அறிவிக்கையை வெளியிட்டது. இதுவரை அமைச்சகத்துக்கு 17 லட்சத்துக்கு மேலான ஆலோசனைகள் வந்துள்ளன. அதில் பல கண்டனங்களும், எதிர்ப்புகளும் அடங்கும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த அறிவிக்கை மீது தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருந்தது.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது.
ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை வெளியிடப்பட்டதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து இந்த அறிவிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.
மேலும், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த அறிவிக்கையை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சூழலில் 500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதிய அந்த அறிவிக்கையைத் திரும்பப் பெறக் கோரியுள்ளனர்.
இதுதவிர 130 கல்வி நிறுவனங்களும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் தங்களுக்கு இருக்கும் கவலைகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து அதைத் திரும்பப் பெறக் கோரியுள்ளனர்.
இந்த அறிவிக்கைக்கு அனுமதியளித்தால், சுற்றுச்சூழலில் பெரும் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும், அனுமதியளிக்கும் முறையை நீர்த்துப்போகச் செய்யும் எனக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி),இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஐஐஎஸ்இஆர்), ஐஐடி, தேசிய உயிரி அறிவியல் மையம் (என்சிபிஎஸ்), இந்திய வனவியல் நிறுவனம் (டபிள்யுஐஐ) ஆகியவையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி, அந்த அறிவிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளன.
கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் எழுதிய கடிதம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், “ மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை வெளியிட்டதிலிருந்தே தீவிரமான விமர்சனங்கள், அதிருப்திகள் உருவாகி வருகின்றன.
மாணவர்கள், மக்கள், செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் போராடி வருகிறார்கள். இந்த அறிவிக்கை சுற்றுச்சூழலின் அடித்தளப் பாதுகாப்பைத் தகர்த்துவிட்டு வர்த்தகத்தை எளிமையாகச் செய்யத் தூண்டுகிறது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் முனைவர் படிப்பு பயிலும் மாணவர்கள், 105 பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், மூத்த அறிவியலாளர்கள், முனைவர் பட்டம் பெறக் காத்திருக்கும் 400 மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், சுயமாக சுற்றுச்சூழல் ஆய்வில் ஈடுபடுவோர் என அனைவரும் சேர்ந்து இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறோம்.
நிறுவனம் தொடங்கியபின், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது என்பது, சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முறையை நீர்த்துப்போகச் செய்யும். சரியான சுற்றுச்சூழல் மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளித்து, அதிக மாசுபடுத்தும் பல தொழில்கள் மற்றும் திட்டங்களை மறுவடிவமைப்பது குறித்துக் கவலை தெரிவிக்கிறோம்.
இந்த அறிவிக்கை தொடர்பாக மக்களின் முழுமையான, மேம்பாட்ட ஆலோசனை கேட்டபின், முடிவு எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், ஏற்கெனவே இருக்கும் 2006-ம் ஆண்டு அறிவிக்கையை வலுப்படுத்துங்கள்
அதிகமான ஒலிவரும் போதும், முக்கிய விலங்கினங்களான புலி, ஆமைகள், யானைகள், தனிப்பட்ட விலங்குகள் ஆகியவற்றுக்குத் தொந்தரவு ஏற்படும்போது, அதற்கேற்றவாறு எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.
உண்மை என்னவென்றால், மோசமாகத் திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பல்உயிரிச் சூழலுக்கும், உயிரிச் சூழலுக்கும், மக்களுக்கும் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:இந்துதமிழ்திசை