ஞாயிறு, 14 ஜூன், 2020

*🌐ஜூன் 14, வரலாற்றில் இன்று:உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் இன்று.*

ஜூன் 14, வரலாற்றில் இன்று.

உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் இன்று.

இரத்தத்தில் உள்ள வகைகளை முதன்முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் 1901ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இதன்மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. இரத்த தானம் செய்வதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. இரத்தத்தை பணம் பெறாமல் தானம் வழங்குபவர்கள் உள்ளனர். அவர்களை கௌரவிக்கவே உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

*🌐சே குவேரா எனும் விடுதலைப் போராளி பிறந்த தினம்.*

ஜூன் 14, வரலாற்றில் இன்று.

சே குவேரா எனும் விடுதலைப் போராளி பிறந்த தினம் இன்று.

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது.
ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.
அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக‌ சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான‌ உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.
அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.
முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதப்படும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,
பின் மருத்துவக் கல்லூரியில் படித்தார் ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொம்மையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைது செய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.

பொதுவாக தென் அமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.
கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும்  சீனியும்.
நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்து கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பின்னணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார்.
ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?
ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூபாவில் ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.
பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன் பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.
ஆம் எல்லை கடந்து கியூபா விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.
ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென் அமெரிக்கா திரும்பினார்.
இந்த காலகட்டத்திற்குள் சே குவாரோவை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாக கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,
ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைப்பட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".

மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.
கியூபாஅரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார். இந்திய கியூபா உறவுகள் தொடரவேண்டும் என்றார்.
இலங்கைக்குச் சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர்  அவர்தான்.
இப்படியாக உலகெல்லாம் கொண்டாடப்பட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலைமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன. அவை இப்படி சொன்னது:
உலகெங்கும் பெரும் செல்வாக்கினைப் பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம் ( சாத்தியம் இருந்தது). அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுக்கொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணையத் தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது. சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல."

அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது. சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.
சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழச்சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.

சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.
அக்டோபர் 9, 1969... அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தார். அங்கு ஆடுமேய்த்துக் கொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபப்பட்டு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார். சுற்றிப் பார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, "இது என்ன இடம், பள்ளிக்கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!"
சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கிறார் பார்த்தீர்களா? இதுதான் சே.
விசாரித்து தீர்ப்பளித்தால் சிக்கல் பெரிதாகும். உலகம் கொந்தளிக்கும் எனக் கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.
எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூபா மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோகக்கடலில் ஆழ்த்தியது
அவரை சுட்டவீரன் சொன்னான், "முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திற்று" என சொல்லி பின்னர் அழுதான்.

அது நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.
ஒரு தேசத்தில் போராடச் சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், "எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்"
ஆஸ்துமா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார், "அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சயமாக எனது நண்பன்"
இன்று அவரின் பிறந்த தினம். அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்கத் தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழத் தமிழரை போல அகதிகளாய் வாழும், சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து, பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.
மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தைப் பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்கத் தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.
ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு. அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.

ஒன்றுமட்டும் உண்மை, சே வின் சம காலத்தில் ஈழப் போராட்டம் தீவிரமடைந்திருந்தால், நிச்சயம் அவர்களோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக நின்றிருப்பார்.
காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் எனப் போராடிய ஒரே போராளி சே மட்டுமே. சே குவாரேவிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்த தெல்லாம் மானிட நேயம் மட்டுமே.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றான் வள்ளுவன், சே உயிரையும் கொடுத்து உயர்ந்து நின்றான், வரலாற்றில் நின்றான்.
அவனுக்கு அழிவே இல்லை.

*🌐ஜூன் 14, வரலாற்றில் இன்று:உலக வலைப்பதிவர் தினம் இன்று.*

ஜூன் 14, வரலாற்றில் இன்று.

உலக வலைப்பதிவர் தினம் இன்று.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் படைப்பாக்கத் தாகமும் எழுதிய பதிவுகள் உடனே உலகெங்கும் பரவும் வேகமும் வலைப்பதிவுகளின் பரவலாக்கத்திற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. உலக வலைப்பதிவுகளின் வரலாறு 1999 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது. கடந்த 16 ஆண்டுகளில் வலைப்பதிவுகள் பெற்றிருக்கும் வெற்றி நம்மை மலைக்க வைக்கிறது. வரும் காலங்களில் வலைப்பதிவுகள் எட்டிப்பிடிக்கப் போகும் சிகரங்கள் எத்தனையோ?

சனி, 13 ஜூன், 2020

பள்ளிக்கல்வி _அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு Applications of mathematics in different domains (பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் )_பயிற்சி அளித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள், நாள் : 12.06. 2020



பள்ளிக்கல்வி- அரசு /நிதி உதவி பெறும் மேல்நிலை /உயர்நிலைப் பள்ளிகளில் 2019 -20 ஆம் கல்வி ஆண்டில் (02.06 .2019 முதல் 01.05. 2020 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்று ) 31.05 2020 வரை பணிபுரிந்த தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள்- ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்குதல் -சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு w.p. (MD)No 6442 /2020 _08.06.2020 தீர்ப்பாணையிணை செயல்படுத்துதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் , நாள்: 09.6.2020



*☀கொரோனா கிருமிக்காலத்தில்அரசு செய்ய வேண்டியவைகள் யாவை? மக்கள் செய்ய வேண்டியவைகள்யாவை? அறிவியலாளர் திரு த. வி வெங்கடேஸ்வரன் அவர்களின் பதில்கள்.

கொரோனா கிருமிக்காலத்தில்அரசு
செய்ய வேண்டியவைகள் யாவை?

மக்கள் செய்ய வேண்டியவைகள்யாவை?

அறிவியலாளர் திரு த. வி வெங்கடேஸ்வரன் அவர்களின் பதில்கள்
****************************************

*1. கோவிட் 19 வைரஸ், பெருந்தொற்று குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல்பூர்வ அடிப்படைகள் என்னென்ன?*
   
கோவிட் 19 என்ற நோய் நாவல் கரோனா என்ற வைரஸினால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது? எப்படி ஒருத்தரிடமிருந்து ஒருத்தருக்கு பரவி நோய் ஏற்படுத்துகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது முதல் அடிப்படை. இது சுவாச நோய். அதாவது இந்த கிருமி தாக்கிய மனிதர்களிடம் சுவாசக் குழாயில் மட்டுமே பெருமளவுக்கு இருக்கும். அந்த நபருக்கு நோய் முற்றி மிகவும் கடுமையான நிலைக்குச் சென்றால் சுவாசக் குழாயை விட்டு ரத்த நாளங்கள் வழியே அது இருதயம் போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம். ஆனால் சாதாரணமாக இது சுவாசக் குழாயில் இருக்கக் கூடிய ஒரு வைரஸ். வேறு யாருக்காவது பரவ வேண்டும் என்று சொன்னால், கடுமையான நோய் இருக்கக் கூடியவர்கள்  ஆஸ்பத்திரியில்தான் இருப்பார்கள். நம்ம பக்கத்தில் இருந்து, நம்முடைய அலுவலகத்திற்கு வந்து நோய் பரவும் தன்மை இருப்பவர்கள் எல்லோருக்கும் கிருமி அவர்களுடைய சுவாசக் குழாயில் மட்டுமே இருக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். சுவாசக் குழாயிலிருந்து இந்தக் கிருமி எப்படி வெளியில் வரும்? ஒன்று பேசும் போது இது வெளியே வரும். பேசும் போது நம்முடைய வாயிலிருந்து சிறு சிறு துளிகளாக எச்சில் துளிகள் விழுகிறது. அதன் மூலமாக இந்த வைரஸ் வெளியே வரும். தும்மும் போது வெளியே வரும். இருமல் செய்யும் போது இது வெளியே வரும். எனவே, எல்லோரும் முகக் கவசம் அணிந்து கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைந்து போகும்.
இரண்டாவது, இப்படி தும்மி, இருமி  செய்யக் கூடிய நபர், தவறுதலாக அந்த சமயத்தில் தன்னுடைய வாயையோ, மூக்கையோ கையால் தொட்டு அந்தத் துளிகள் அவர் கையில் இருக்கும் போது, அந்தக் கையோடு ஏதாவது ஒரு வாஸ் பேசினிலிருக்கக் கூடிய குழாய் அல்லது கதவு போன்ற விசயங்களைத் தொட்டால், அதை நாம் அடுத்த சில மணி நேரத்திற்குள் நாம் போய் தொட்டால் நமக்கு பரவுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இது தான் பரவுவதற்கான இரண்டு மிக மிக முக்கிய வழிகள்.
மற்றவைகளெல்லாம் கணக்கிலேயே கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதைத் தெரிந்து கொள்ளவதினுடைய அவசியம் என்ன? எப்படி இந்தக் கிருமி பரவுகிறது என்று தெரிந்தால், நாம் எப்படி நடந்து கொண்டால் இந்தக் கிருமியிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நமக்குப் புரியும். இது எச்சில் துளி, இருமல் துளி போன்ற துளிகளால் மட்டும்தான் பரவும் என்பதால், முகக்கவசம் அணிவது, அவ்வப்போது கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பது, முடிந்தளவு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருப்பது என்பதன் மூலமாக இந்தக் கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுவதற்கான வாய்ப்பை முழுமையாக நாம் அழிப்பதற்கான முயற்சி செய்யலாம். முழுமையாக முடியாது, சற்றேறக்குறைய அழிக்கலாம். மற்றைய எல்லா அறிவியல் தகவல்களும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது நல்லதே. இந்த வைரஸில் புதிய வகை உருவாகிறது, இந்த வைரஸ் எப்போது உற்பத்தியானது, இந்த வைரஸில் என்னென்ன பகுதிகள் இருக்கின்றன... என்பன குறித்த அலுவலகம் இது. ஆனால் இவை எதுவும் நம்முடைய உடனடி, சாமானிய மனிதனுடைய உடனடி தினசரி நடவடிக்கையோடு சம்பந்தப்பட்டதல்ல. இவைகளெல்லாம் அறிவுக்காகப் படிக்கலாம். அச்சமடைவதற்காகப் படிக்கக் கூடாது.

*2. உலகமே கோவிட் 19 பரவலைத் தடுக்க போராடிவரும் வேளையில் மக்களைப் பாதுகாக்க இந்திய அரசு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?*

இந்திய அரசினுடைய பிரதம அறிவியல் ஆலோசகர் அவர்களிடம் நான் இதைப்பற்றி ஒருதடவை பேசிக் கொண்டிருந்தேன். அவர் இரு கருத்துக்களை  கூறினார்.

ஒன்று, மூன்று விசயங்கள் மக்கள் செய்யவேண்டும். இரண்டு அரசாங்கம் செய்ய வேண்டும் என்று ஐந்து விசயங்களை அவர் விளக்கினார். மக்கள் செய்ய வேண்டிய மூன்று விசயங்கள். வீட்டை விட்டு எப்பொழுது வெளியே போனாலும் முகக் கவசம் அணிய வேண்டும். எதைத் தொட்டாலும் உடனடியாக அல்லது வெகுவிரையில் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். இப்போது பஸ்ஸில் போகிறோம், அல்லது அது அந்த மாதிரி இடத்தில் இருக்கிறோம், நடைமுறையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சாத்தியமில்லை என்றால் பரவாயில்லை, ஒரு இரண்டு நிமிடங்கள் அப்படி இருந்தோம், பத்து நிமிடங்கள் இருந்தோம், அரை மணி நேரம் இருந்தோம் என்றாலும் பரவாயில்லை. ஆனால், எப்பொழுதுமே அப்படியே இருப்பேன் என்பது அவசியமல்ல. அதனால்தான் முடியும் போது என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
இந்த மூன்றைத் தவிர அவர் இரண்டு விசயங்கள் அரசாங்கங்கள் செய்ய வேண்டியது என்று சொன்னார். என்ன? முதல் விசயம் பரிசோதனை. பரிசோதனையைத் தொடர்ந்து செய்ய வேண்டிய விசயங்கள் என்ன? எவ்வளவிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு அதிகமாக பரிசோதனையின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பரிசோதனையில் யாராவது ஒருவருக்கு பாசிட்டிவ் என்று தெரியவந்தால், அவரோடு தொடர்புடைய எல்லோரையும் இனம் கண்டு அவர்களை பரிசோதிக்க வேண்டும். இது முதல் விசயம்.

இரண்டாவது விசயம். பாசிட்டிவ் என்று தெரிந்த நபர்களை தனிமைப்படுத்த வேண்டும். இந்தக் கிருமி மனிதரிடம்தான் இருக்கிறது. ரோட்டில், குப்பை மேட்டில், பஸ்ஸ்டாண்டில் அங்கெல்லாம் இல்லை. மனிதருடைய சுவாசக் குழாயில்தான் இருக்கிறது. அது இன்னொருவருக்கு பரவ வேண்டுமென்றால், யாருடைய சுவாசக் குழாயில் இருக்கிறதோ, அவருடைய சுவாசக் குழாயிலிருந்து இன்னொருவருக்குப் பரவ வேண்டும். இல்லையென்றால் பரவாது. ஆகையினால், நோய் அறிகுறி இருப்பவர்களை, டெஸ்டிங்கில் பாசிட்டிவ் என்று வந்தவர்களை தனிமைப்படுத்துவதன் மூலமாக இந்த கிருமி பரவுவதை வெகுவாகக் குறைக்கலாம். இதுதான் நாம் செய்ய வேண்டியது.

*3. கோவிட் 19 சமூகப் பரவலாகி வரும் பின்னணியில் சாமானிய மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான தற்காப்பு நடைமுறைகள் என்னென்ன?*

சாதாரண மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் அப்படியென்று கேட்டீர்களானால், மூன்றுதான். தேவையில்லாத விசயத்திற்கெல்லாம் அச்சப்பட்டு, பயப்பட்டெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒன்று, வெளியில், வீட்டிற்கு வெளியில் செல்லும் போது முகக்கவசம் மிக முக்கியம். அது ஏன்? தப்பித்தவறி நமக்கு இருக்கலாம். உங்களுக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கும். பல பேருக்கு, அறிகுறியே இல்லாமல் இருக்கும். நீங்கள் மற்றவர்களுடைய தொற்றுக்கு, இறப்பிற்கு காரணமாகி விடுவீர்கள். அந்தக் கவலையோடு நம்மால வேறொருத்தருக்கு தீங்கு வரக்கூடாது என்ற எண்ணத்தோடு முகக்கவசம் அணியவேண்டும். நீங்க நினைக்கலாம், எனக்கு ஒரு அறிகுறியும் இல்லை, ஒன்றும் இல்லை என்று, அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். எண்பது சதமானம் பேர், அம்பது சதமானம் பேருக்கு அறிகுறியே இருப்பதில்லை. ஆகையினால் எல்லோரும் அணிய வேண்டும். தப்பித் தவறி உங்கள் பக்கத்தில் நோய்க் கிருமியோடு ஒருத்தர் இருந்தால், அவர் பேசினால், அவருடைய பேச்சுத் துளிகளிலிருந்து இந்த கிருமி வெளியே வரும். அப்படி வந்தாலும் அது உங்களுக்கு வராமல் தடுப்பதற்கும் இந்த முகக்கவசம் உதவி செய்யும். முகக்கவசம், இது தான் வேண்டும், அதுதான் வேண்டும் அப்படியெல்லாம் அடம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நாம சாதாரண மக்கள். மருத்துவப்பணியாளர்களுடைய நிலை வேறு, அவர்களைப்பற்றி பேசவில்லை. நாம் சாதாரண மக்களாகப் பேசுகிறோம். காட்டன் துணியில் செய்ததாக இருந்தாலும் பரவாயில்லை, துப்பட்டா போன்றவை என்றாலும் பரவாயில்லை, கைக்குட்டையாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் முக்கியமான விசயம், வீட்டிற்குத் திரும்பியதும் அதை நன்றாக சோப்புப் போட்டு துவைத்திட வேண்டும். இது முதல் விசயம்.

 இரண்டாவது எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ, நாம் கொண்டு போன பொருட்கள், நம்முடைய பொருட்கள் தவிர வேறு எதைத் தொட்டாலும், முடிந்த அளவிற்கு கைகளைக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவ முடியவில்லையென்றால் சானிடைசர் முடிந்தளவு.

மூன்றாவது, ஒருவருக்கு ஒருவர்  இடைவெளி.

இதுதான் மூன்று விசயங்கள்.

சென்டரலைஸ்டு ஏசி இருக்கக் கூடிய அலுவலகங்களில் பணிபுரியாமல், அந்த இடங்களில் அந்த சென்டரலைஸ்டு ஏசி இல்லாமல் இருக்க முடிந்தால் நல்லது. அப்படி சாத்தியமே இல்லை என்றால், 70 சதவீதம் சுத்தமான காற்று வருவதாக அதை செட் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி செட் பண்ணுகிறார்களா என்று பாருங்கள். அதாவது, உள்ளுக்குள்ளே இருக்கக் கூடிய காற்றையே சுற்றிச்சுற்றி விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பவர் கம்மியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அப்படிப் பண்ணுவார்கள். 70 சதவீதம் புதிதாக வெளியிலிருந்து காற்றை எடுத்துக் கொண்டு வந்தால், அது சூடான காற்றாக இருக்கும். அதை குளிர் விக்க வேண்டும். அதனால், பவர் குறைவாகப் பயன்படுத்துவதற்காக அப்படிப் பண்ணுவார்கள். அதாவது, வெண்டிலேசனை அடைத்து வைத்திருப்பார்கள். அப்படிப் பண்ணாதீர்கள், வெண்டிலேசனை முழுமையாகத் திறந்து விட்டு இப்படிச் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். இது சென்டலைஸ்டாக இருந்தால்.

தனித்தனி ஏசியாக ஆனால் நீங்கள் பொதுவான ஒரு அறையில்  இருக்கிறீர்கள், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு தொடர்பு இருக்கும்படியாக இருந்தால், அங்கேயும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உங்கள் சொந்த வீட்டில் ஏசி போட்டுக் கொள்ளுங்கள், போடாமல் இருங்கள். அதனால் ஒன்றும் பிரச்சினை வரப்போவதில்லை.நான் சொல்வதெல்லாம் அலுவலகம் சார்ந்த விசயம், ஏசியைப் பொருத்தவரைக்கும். காற்றோட்டமான இடம்தான் நல்லது. காற்றோட்டம் இல்லையென்றால் பரவுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் கூடும். அவ்வளவே.

இவை குறித்த அறிவியல் பூர்வமான பகிர்வுகள் விழிப்பை நமக்கு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு உருவாக்கும்.

*🌐ஜூன் 13, வரலாற்றில் இன்று:1825ஆம் ஆண்டு சேப்டிபின் எனப்படும் ஊக்குக்கான காப்புரிமத்தை வால்டர் ஹண்ட் பெற்ற தினம்.

ஜூன் 13, வரலாற்றில் இன்று.

1825ஆம் ஆண்டு இதே நாளில் சேப்டிபின் எனப்படும் ஊக்குக்கான காப்புரிமத்தை
வால்டர் ஹண்ட் பெற்றார்.

கடன் கொடுத்த ஒருவர் வால்டரை தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தார் .
வெறுத்துப் போன வால்டர் தனது பட்டறையில் உட்கார்ந்து, கையில் கிடைத்த ஒரு செப்புக் கம்பியை இப்படியும் அப்படியுமாக முறுக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இன்னொரு சிறிய, ஆனால் பயனுள்ள பொருள் கிடைத்தது. அதுதான் `சேப்டி பின்'.

*🌐ஜூன் 13, வரலாற்றில் இன்று:ஜேம்ஸ் மாக்ஸ்வெல் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 13, வரலாற்றில் இன்று.

ஜேம்ஸ் மாக்ஸ்வெல் பிறந்த தினம் இன்று.

 ஸ்காட்டியக் கணிதவியலாளர் மற்றும் கோட்பாட்டு இயற்பியலாளரான ஜேம்ஸ் மாக்ஸ்வெல் 1831 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி பிறந்தார். இவரது முக்கியமான சாதனை, மின்காந்தவியல் கோட்பாடு ஆகும். மாக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின. இவர் 1864இல் தானெழுதிய மின்காந்தப் புலத்தின் இயங்கியல் கோட்பாடு என்பதன் மூலம், மின் மற்றும் காந்தவியல் தோற்றப்பாடுகளைப் போலவே ஒளியும் அதே ஊடகத்தில் உண்டாகும் என்பதை முன் மொழிந்தார். இவர் 1879 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி காலமானார்.

*🌐ஜூன் 13, வரலாற்றில் இன்று:இந்திய மருந்தியலின் தந்தை என அழைக்கப்பட்டவரும், இந்திய மருத்துவ களஞ்சியம் அமைக்க முனைப்பாக பாடுபட்டவருமானப் பேராசிரியர் ராம்நாத் சோப்ரா நினைவு தினம் இன்று(1973).*

ஜூன் 13, வரலாற்றில் இன்று.

இந்திய மருந்தியலின் தந்தை என அழைக்கப்பட்டவரும்,  இந்திய மருத்துவ களஞ்சியம் அமைக்க முனைப்பாக பாடுபட்டவருமானப்  பேராசிரியர் ராம்நாத் சோப்ரா நினைவு தினம் இன்று(1973).

 வட இந்தியாவில் ராவல்பிண்டியிலிருந்து குடிபெயர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்து வந்தவா்கள் தோக்கரா குடும்பத்தினா். இக்குடும்பத்தில் 1882 ஆம் ஆண்டு ரகுநாத் சோப்ரா என்பவரின் தலைமகனாகப் பிறந்தார் ராம்நாத் சோப்ரா.

ஜம்முவிலும் ஸ்ரீநகரிலும் இவரது பள்ளி வாழ்க்கை தொடங்கியது. ராம்நாத் சோப்ரா பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கீழ் லாகூரில் உயர்நிலைக் கல்வி கல்லூரிப் பட்டங்கள் பெற்றார்.

1903 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் நகரில் டௌனிங் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஏறத்தாழ பத்தாண்டுக் கல்விப் பயணத்தில் அறிவியல் பட்டம் (1905), எல்.ஆர்.சி.பி (LRCP), எம்.ஆா்.சி.எஸ்.(MRCS), எம்.பி(MB), வேதியல் இளங்கலை (BCH) எனப் பட்டங்கள் பெற்றார்.

1912 ஆம் ஆண்டு மருந்தியல் உயர்பட்டம் (MD) பெற்றார். இலண்டனில் தூய பர்த்தலோமியெவ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த காலகட்டத்தில் இந்திய மருத்துவப் பணித் தேர்விலும் மூன்றாம் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

கிழக்கு ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பணிபுரிந்தார். பின்னர் வெப்பப் பிராந்திய மருந்துக் கூடம், கல்கத்தா மருத்துவக் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் 1921 ஆம் ஆண்டு முதல் மருந்தியல் பேராசிரியராக பணியாற்றினார்.

 பின்னாளில் கல்கத்தாவில் வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் இயக்குநராகவும் உயர்ந்தார்.

நாகவல்லி அல்லது சர்ப்பகந்தி எனப்படும் இந்திய மூலிகையின் பயனை முதன் முதலில் அறிவித்தார் ராம்நாத் சோப்ரா.

இந்திய அரசின் விசாரணைக் குழுவின் தலைவராக இந்திய அரசியல் சாசனத்தில் மருந்துச் சட்டம், மருந்தியல் சட்டம் ஆகியன இடம் பெற வலியுறுத்தினார்.
இவரது முனைப்பினால் அறிவியல் தொழிற்துறை ஆய்வுக்குழுமத்தின் கீழ் ஜம்முவில் பிராந்திய ஆய்வுக்கூடம் உருவானது.
சோப்ரா குழுவின் அறிக்கையில் தான் மருந்தியல் என்ற சொல் முதன்முதலாக இந்திய சாசனத்தில் (1931) அறிமுகமானது.

ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனம் போதை மருந்து ஒழிப்பு நிபுணர் குழுவில் பங்கு வகித்தார்
1941 ஆம் ஆண்டு நவம்பர் முதல் கல்கத்தா வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் இயக்குநராக செயலபட்டார்.

ஜம்மு காஷ்மீரில் மருத்துவ பணி மற்றும் மருந்து ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக செயல்பட்டார்.
வாரனாசியிலிருந்து வெளியான இந்திய மருந்து ஆராய்ச்சி சஞ்சை எனும் இதழாசிரியர் குழுவின் தலைவராக இருந்தார்.

 இந்திய மருத்துவத்துறையில் அளப்பரிய பங்களிப்பு செய்த ராம்நாத் ஜூன் 13,1973இல் காலமானார்.

*🌐ஜூன் 13, வரலாற்றில் இன்று:வி. கணபதி அய்யர் ( நவம்பர் 10, 1906- ஜூன் 13, 1987) நினைவு தினம் இன்று.*

ஜூன் 13, வரலாற்றில் இன்று.

வி. கணபதி அய்யர் ( நவம்பர் 10, 1906- ஜூன் 13, 1987) நினைவு தினம் இன்று.

 இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர். 'பேராசிரியர் வி.ஜி.அய்யர்' என்று அக்காலக் கணித உலகில் சிறப்பாக அறியப்பட்ட கணபதி அய்யர் அவருடைய எளிமையான நடை உடை பாவனையாலும் மிகவும் மதிக்கப்பட்ட கணித மேதை. பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் உள்ளடங்கிய எல்லா கணிதப் பிரிவுகளிலும் இடவியல் என்ற இருபதாவது நூற்றாண்டின் புதிய கணிதப்பிரிவிலும் அவர் ஆழம் மிகுந்த 55 ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உலகமறியப் போற்றப் பட்டவர். கணிதப் பாருலகுக்கு 15 இந்திய மாணவமணிகளை முனைவர் பட்டம் பெற பயிற்றுவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் முழுவதும் கணித உலகுக்குப் பயனுள்ள சேவை செய்யக் காரணமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தவர்.

கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில்வெங்கடாசலம்-லட்சுமி தம்பதியினருக்குப் புதல்வராகப் பிறந்தார். உள்ளூரிலேயே பள்ளியிறுதியை (எஸ்.எஸ்.எல்.சி) யை முடித்து சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து 1927 இல் பி.ஏ. ஆனர்ஸ் தேர்வில் கணிதப் பிரிவில் முதல் வகுப்பில் தேறினார். 1938ம் ஆண்டுசென்னைப் பல்கலைக் கழகத்தில்டி.எஸ். ஸி பட்டம் பெற்றார். முனைவர்கள் கே. ஆனந்த ராவ், ஆர். வைத்தியநாதசுவாமி முதலியோர் அவரைக் கணித வழி நடத்தினர்.

மசூலிப்பட்டணத்தில் அரசாங்கக்கல்லூரியில் விரிவுரையாளராக இரண்டாண்டுகள் இருந்தபின், 1939 இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கணிதத்துறையில் சேர்ந்தார். அங்கு 1950இல் பேராசிரியராகவும் கணிதத் துறைத் தலைவராகவும் உயர்ந்தார்.1972 இல் அவர் ஓய்வு பெறும் வரையில் அங்கிருந்தே கணித உலகுக்குப் பணியாற்றினார்.

இந்தியக் கணிதக்கழகத்தின்தலைவராக (1957 - 1959) தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 இல் அதன் பொன்விழாச் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

1960 ஜனவரியில் நடந்த இந்திய விஞ்ஞானக் கழகத்தின் வருடாந்திர மாநாட்டில், அதன் கணிதப் பிரிவின் தலைவராகப் பதவி ஏற்று அதை செவ்வனே நடத்தினார்.

கணிதமோ, வேதியியலோ, இயற்பியலோ, எந்த விஞ்ஞானத் துறையிலும் தான் திறமை பெற்ற உட்துறையில் தான் எந்த சராசரிப் பேராசிரியரும் முனைவர்பட்டப் படிப்புக்குத் தன்னிடம் வரும் மாணவர்களை ஊக்குவித்து ஆய்வு செய்விப்பது வழக்கம். ஆனால் கணபதி அய்யர் ஆய்வாசிரியர்களுக்கே ஒரு முன்னோடியாக இருந்தவர். அவரிடம் சென்ற மாணவர்கள் கணிதத்தில் எந்த உட்துறையிலும் ஆய்வு செய்யலாம். அவருடைய வழிமுறையினால் அவருடைய ஆய்வு மாணவர்கள் அகலமும் ஆழ்வும் நிறைந்த ஆய்வுத்திறன் பெற்றவர்களானார்கள்.

முனைவர் படிப்புக்குரிய மாணவன் தன் மனதிற்கிசைந்த உட்துறையில் ஓரிரண்டு நூல்களை ஒரு மாதம் ஊன்றிப்படித்தபிறகு அவரிடம் தன் ஐயங்களைத்தெளிந்து கொள்வதற்காகச்செல்கிறான். அவன் சொல்வதையெல்லாம் நிதானமாகக்காது கொடுத்துக்கேட்பார். கால் மணி அல்லது அரை மணியில் அவன் தனக்குத்தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடுவான். அவையெல்லாம் அவருடைய ஆய்வுத் துறைகளுக்குத் துளிக்கூட சம்பந்தமில்லாததாகவே இருந்தாலும், அவர் இதற்கு முன் பார்க்காத நூல்களிலிருந்து மாணவன் பேசிக்கொண்டிருந்தாலும், அவர் நன்றாகவே புரிந்து கொள்வார்.பிறகு சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்திருப்பார். ஓரிரண்டு கேள்விகள் தான் கேட்பார். அவன் சொல்லும் அரைகுறை பதில்களையும் கேட்டுக்கொள்வார். பிறகு அவர் ஒரு நீண்ட சொற்பொழிவே செய்வார். அவர் பார்க்காத இந்த புது உட்துறையில் இன்னும் என்னென்னவெல்லாம் ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கும், இதற்காக இன்னின்ன நூல்களைப் படிக்க வேண்டியிருக்கும், உலகில் இத்துறையில் என்னென்ன இன்னும் பிடிபடாமல் இருக்கின்றன, இத்துறைக்கும் கணிதத்திலோ கணிதத்திற்கப்பாலோ உள்ள மற்ற துறைகளுக்கும் வருங்காலத்தில் உறவுகள் எப்படி பிணைக்கப்படலாம் என்றெல்லாம் அவரே அதில் ஆய்வு செய்து கரைகண்டவரைப்போல் பேசுவார். இந்த அளவுக்கு எந்த புது விஷயத்தையும் உள்வாங்கி அதைப்பற்றி மேலும் ஆக்கமுறையில் பேசக்கூடிய கணித ஆய்வாளர்கள் உலகிலேயே மிகக்குறைவானவர்கள் என்பதே அவர் காலத்திய மற்ற பேராசிரியர்களுடைய தீர்மானம்.

பொதுவாக சிக்கலெண் பகுவியலிலும், குறிப்பாக Entire Functions என்ற பிரிவிலும் அவர் ஆய்வுகளைத் தொடங்கி, சார்புப் பகுவியல், இடவியல்,தொடர்கூட்டு வாய்ப்பு, முதலிய பிரிவுகளிலும் அவருடைய கட்டுரைகள் பெயர் பெற்றன. அவருடைய மாணவர்களுடைய ஆய்வுகள் இவைகளைத் தவிர இன்னும் நிகழ்தகவு, தன்னிச்சைமாறி, முதலிய மற்ற பிரிவுகளிலும் செய்யப்பட்டன

அவருடைய இயக்க-மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களில் சிலர்:

எம்.எஸ். ராமானுஜன். (பின்னால் ஆன் ஆர்பரில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானார்)எம்.ஆர். பரமேசுவரன். (பின்னால் ஈஸ்ட் லான்சிங்கில் மிச்சிகன் ஸ்டேட் பலகலைக் கழகத்தில் பேராசிரியரானார்.வி. கிருஷ்ணமூர்த்தி. (பின்னால் பிலானியில் பிட்ஸில் பேராசிரியரானார்)எஸ். சுவேதாரண்யம்.கே. எஸ். பத்மநாபன். (அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்)ஜீ. சங்கரநாராயணன். (அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்)எஸ். கணேசன். (அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்)

கணபதி அய்யர் சாந்தம், அடக்கம், நேர்மை இவைகளுடன் எளிமையாக வாழ்ந்து வந்தார். இருபதாம் நூற்றாண்டின் உலகக்கணித மேதைகளில் உயர் மட்டத்தில் கணிக்கப்பட்ட ஒருவரான அமெரிக்கப் பேராசிரியர் மார்ஷல் ஹெச் ஸ்டோன்என்பவர் இந்தியா வரும்போதெல்லாம் -- அவர் சென்னை சங்கீத விழாவுக்காக அடிக்கடி வருவது வழக்கம் -- அண்ணாமலைநகர் சென்று கணபதி அய்யரைப் பார்த்துப் பேசாமல் போகமாட்டார். கணபதி அய்யரை ஒரு மகான் (saint) என்றே அவர் குறிப்பிடுவார். கணபதி அய்யர் தன் ஆய்வுகளையும் படிப்புகளையும் விடியற்காலை நேரத்தில் தான் செய்வார். அதனால் இரவு எட்டு மணிக்கே படுக்கைக்குச் சென்று விடுவார்.

கணபதி அய்யர் அரட்டை அடித்து யாரும் பார்த்ததில்லை. அவர் சாதாரணமாக சில பேச்சுகள் பேசினாலும் அது ஆழம் பொதிந்ததாக இருக்கும். முனைவர் ஆர். வைத்தியநாதசுவாமி அவருடைய குரு. முனைவர் எம். வெங்கடராமன் கணபதி அய்யருடன் கூட வேலைபார்த்த ஆசிரிய நண்பர். இவர்கள் இருவரும் கணிதப் பேராசிரியர்கள் மட்டுமல்லாமல், அரவிந்தர் வழியில் வந்த நூல்களையெல்லாம் நன்கு அறிந்து அரவிந்தருடைய நெறிமுறைப்படி வாழ்பவர்கள். இவர்கள் இருவருடன் கணபதி அய்யர் அடிக்கடி பேசுவார். இம்மூவரது உரையாடலில் கணிதம், சரித்திரம், வேதாந்தம், பண்பாடு என பலதரப்பட்ட விசயங்கள் கலந்திருக்கும்.

மனதிலேயே எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகள்

கணபதி அய்யர் ஆய்வுக்கட்டுரை எழுதும் முறையே விந்தையானது. பலமுறை எழுதி, அடித்து, திருத்தி, மாற்றி, எழுதுவதெல்லாம் அவரிடம் கிடையாது. எழுதவும் மாட்டார். எல்லாம் தட்டச்சு இயந்திரத்தின் முன் உட்கார்ந்து தட்டச்சு செய்வார். கட்டுரைக்கு முன்னுரை, கணிதக்குறியீடுகள், உருவகங்கள், நிறுவலுக்கு வேண்டிய அடிப்படை வரையறைகள், உதவித்தேற்றங்கள், எல்லாம் அவையவை இருக்கவேண்டிய இடத்திற்குத்தகுந்தபடி முன்னாலேயே அவர் மனதில் உருவாகியிருக்கும். ஒரே தடவை தான் தட்டச்சு செய்வார். சிறிய கட்டுரை யானாலும், பெரிய கட்டுரையானாலும், ஒரு முறை தட்டச்சுசெய்து முடியும்போது அது அப்படியே மாற்றமில்லாமல் அச்சடிக்கத் தயாராகிவிடும்.

குறிப்புகள்

↑ சென்னை கிருத்துவக் கல்லூரிப்பேராசிரியர் டபிள்யூ. எஃப். கிப்பிள் ஒரு முறை அவரைப் பார்க்கச் சென்றபோது, இரவு எட்டரை மணியாகியிருந்தது. கணபதி அய்யரைத் தூக்கத்திலிருந்து எழுப்பும்படியாகிவிட்டது. 'என்ன இவ்வளவு சீக்கிரம் தூங்கச் சென்றுவிட்டீர்களே' என்று கிப்பிள் கேட்டதற்கு அவருடைய பதில்: 'என்னைப் பொருத்தவரையில் அதுவே நள்ளிரவேயாகும்'!