சனி, 13 ஜூன், 2020

*☀கொரோனா கிருமிக்காலத்தில்அரசு செய்ய வேண்டியவைகள் யாவை? மக்கள் செய்ய வேண்டியவைகள்யாவை? அறிவியலாளர் திரு த. வி வெங்கடேஸ்வரன் அவர்களின் பதில்கள்.

கொரோனா கிருமிக்காலத்தில்அரசு
செய்ய வேண்டியவைகள் யாவை?

மக்கள் செய்ய வேண்டியவைகள்யாவை?

அறிவியலாளர் திரு த. வி வெங்கடேஸ்வரன் அவர்களின் பதில்கள்
****************************************

*1. கோவிட் 19 வைரஸ், பெருந்தொற்று குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல்பூர்வ அடிப்படைகள் என்னென்ன?*
   
கோவிட் 19 என்ற நோய் நாவல் கரோனா என்ற வைரஸினால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது? எப்படி ஒருத்தரிடமிருந்து ஒருத்தருக்கு பரவி நோய் ஏற்படுத்துகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது முதல் அடிப்படை. இது சுவாச நோய். அதாவது இந்த கிருமி தாக்கிய மனிதர்களிடம் சுவாசக் குழாயில் மட்டுமே பெருமளவுக்கு இருக்கும். அந்த நபருக்கு நோய் முற்றி மிகவும் கடுமையான நிலைக்குச் சென்றால் சுவாசக் குழாயை விட்டு ரத்த நாளங்கள் வழியே அது இருதயம் போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம். ஆனால் சாதாரணமாக இது சுவாசக் குழாயில் இருக்கக் கூடிய ஒரு வைரஸ். வேறு யாருக்காவது பரவ வேண்டும் என்று சொன்னால், கடுமையான நோய் இருக்கக் கூடியவர்கள்  ஆஸ்பத்திரியில்தான் இருப்பார்கள். நம்ம பக்கத்தில் இருந்து, நம்முடைய அலுவலகத்திற்கு வந்து நோய் பரவும் தன்மை இருப்பவர்கள் எல்லோருக்கும் கிருமி அவர்களுடைய சுவாசக் குழாயில் மட்டுமே இருக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். சுவாசக் குழாயிலிருந்து இந்தக் கிருமி எப்படி வெளியில் வரும்? ஒன்று பேசும் போது இது வெளியே வரும். பேசும் போது நம்முடைய வாயிலிருந்து சிறு சிறு துளிகளாக எச்சில் துளிகள் விழுகிறது. அதன் மூலமாக இந்த வைரஸ் வெளியே வரும். தும்மும் போது வெளியே வரும். இருமல் செய்யும் போது இது வெளியே வரும். எனவே, எல்லோரும் முகக் கவசம் அணிந்து கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைந்து போகும்.
இரண்டாவது, இப்படி தும்மி, இருமி  செய்யக் கூடிய நபர், தவறுதலாக அந்த சமயத்தில் தன்னுடைய வாயையோ, மூக்கையோ கையால் தொட்டு அந்தத் துளிகள் அவர் கையில் இருக்கும் போது, அந்தக் கையோடு ஏதாவது ஒரு வாஸ் பேசினிலிருக்கக் கூடிய குழாய் அல்லது கதவு போன்ற விசயங்களைத் தொட்டால், அதை நாம் அடுத்த சில மணி நேரத்திற்குள் நாம் போய் தொட்டால் நமக்கு பரவுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இது தான் பரவுவதற்கான இரண்டு மிக மிக முக்கிய வழிகள்.
மற்றவைகளெல்லாம் கணக்கிலேயே கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதைத் தெரிந்து கொள்ளவதினுடைய அவசியம் என்ன? எப்படி இந்தக் கிருமி பரவுகிறது என்று தெரிந்தால், நாம் எப்படி நடந்து கொண்டால் இந்தக் கிருமியிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நமக்குப் புரியும். இது எச்சில் துளி, இருமல் துளி போன்ற துளிகளால் மட்டும்தான் பரவும் என்பதால், முகக்கவசம் அணிவது, அவ்வப்போது கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பது, முடிந்தளவு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருப்பது என்பதன் மூலமாக இந்தக் கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுவதற்கான வாய்ப்பை முழுமையாக நாம் அழிப்பதற்கான முயற்சி செய்யலாம். முழுமையாக முடியாது, சற்றேறக்குறைய அழிக்கலாம். மற்றைய எல்லா அறிவியல் தகவல்களும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது நல்லதே. இந்த வைரஸில் புதிய வகை உருவாகிறது, இந்த வைரஸ் எப்போது உற்பத்தியானது, இந்த வைரஸில் என்னென்ன பகுதிகள் இருக்கின்றன... என்பன குறித்த அலுவலகம் இது. ஆனால் இவை எதுவும் நம்முடைய உடனடி, சாமானிய மனிதனுடைய உடனடி தினசரி நடவடிக்கையோடு சம்பந்தப்பட்டதல்ல. இவைகளெல்லாம் அறிவுக்காகப் படிக்கலாம். அச்சமடைவதற்காகப் படிக்கக் கூடாது.

*2. உலகமே கோவிட் 19 பரவலைத் தடுக்க போராடிவரும் வேளையில் மக்களைப் பாதுகாக்க இந்திய அரசு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?*

இந்திய அரசினுடைய பிரதம அறிவியல் ஆலோசகர் அவர்களிடம் நான் இதைப்பற்றி ஒருதடவை பேசிக் கொண்டிருந்தேன். அவர் இரு கருத்துக்களை  கூறினார்.

ஒன்று, மூன்று விசயங்கள் மக்கள் செய்யவேண்டும். இரண்டு அரசாங்கம் செய்ய வேண்டும் என்று ஐந்து விசயங்களை அவர் விளக்கினார். மக்கள் செய்ய வேண்டிய மூன்று விசயங்கள். வீட்டை விட்டு எப்பொழுது வெளியே போனாலும் முகக் கவசம் அணிய வேண்டும். எதைத் தொட்டாலும் உடனடியாக அல்லது வெகுவிரையில் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். இப்போது பஸ்ஸில் போகிறோம், அல்லது அது அந்த மாதிரி இடத்தில் இருக்கிறோம், நடைமுறையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சாத்தியமில்லை என்றால் பரவாயில்லை, ஒரு இரண்டு நிமிடங்கள் அப்படி இருந்தோம், பத்து நிமிடங்கள் இருந்தோம், அரை மணி நேரம் இருந்தோம் என்றாலும் பரவாயில்லை. ஆனால், எப்பொழுதுமே அப்படியே இருப்பேன் என்பது அவசியமல்ல. அதனால்தான் முடியும் போது என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
இந்த மூன்றைத் தவிர அவர் இரண்டு விசயங்கள் அரசாங்கங்கள் செய்ய வேண்டியது என்று சொன்னார். என்ன? முதல் விசயம் பரிசோதனை. பரிசோதனையைத் தொடர்ந்து செய்ய வேண்டிய விசயங்கள் என்ன? எவ்வளவிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு அதிகமாக பரிசோதனையின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பரிசோதனையில் யாராவது ஒருவருக்கு பாசிட்டிவ் என்று தெரியவந்தால், அவரோடு தொடர்புடைய எல்லோரையும் இனம் கண்டு அவர்களை பரிசோதிக்க வேண்டும். இது முதல் விசயம்.

இரண்டாவது விசயம். பாசிட்டிவ் என்று தெரிந்த நபர்களை தனிமைப்படுத்த வேண்டும். இந்தக் கிருமி மனிதரிடம்தான் இருக்கிறது. ரோட்டில், குப்பை மேட்டில், பஸ்ஸ்டாண்டில் அங்கெல்லாம் இல்லை. மனிதருடைய சுவாசக் குழாயில்தான் இருக்கிறது. அது இன்னொருவருக்கு பரவ வேண்டுமென்றால், யாருடைய சுவாசக் குழாயில் இருக்கிறதோ, அவருடைய சுவாசக் குழாயிலிருந்து இன்னொருவருக்குப் பரவ வேண்டும். இல்லையென்றால் பரவாது. ஆகையினால், நோய் அறிகுறி இருப்பவர்களை, டெஸ்டிங்கில் பாசிட்டிவ் என்று வந்தவர்களை தனிமைப்படுத்துவதன் மூலமாக இந்த கிருமி பரவுவதை வெகுவாகக் குறைக்கலாம். இதுதான் நாம் செய்ய வேண்டியது.

*3. கோவிட் 19 சமூகப் பரவலாகி வரும் பின்னணியில் சாமானிய மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான தற்காப்பு நடைமுறைகள் என்னென்ன?*

சாதாரண மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் அப்படியென்று கேட்டீர்களானால், மூன்றுதான். தேவையில்லாத விசயத்திற்கெல்லாம் அச்சப்பட்டு, பயப்பட்டெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒன்று, வெளியில், வீட்டிற்கு வெளியில் செல்லும் போது முகக்கவசம் மிக முக்கியம். அது ஏன்? தப்பித்தவறி நமக்கு இருக்கலாம். உங்களுக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கும். பல பேருக்கு, அறிகுறியே இல்லாமல் இருக்கும். நீங்கள் மற்றவர்களுடைய தொற்றுக்கு, இறப்பிற்கு காரணமாகி விடுவீர்கள். அந்தக் கவலையோடு நம்மால வேறொருத்தருக்கு தீங்கு வரக்கூடாது என்ற எண்ணத்தோடு முகக்கவசம் அணியவேண்டும். நீங்க நினைக்கலாம், எனக்கு ஒரு அறிகுறியும் இல்லை, ஒன்றும் இல்லை என்று, அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். எண்பது சதமானம் பேர், அம்பது சதமானம் பேருக்கு அறிகுறியே இருப்பதில்லை. ஆகையினால் எல்லோரும் அணிய வேண்டும். தப்பித் தவறி உங்கள் பக்கத்தில் நோய்க் கிருமியோடு ஒருத்தர் இருந்தால், அவர் பேசினால், அவருடைய பேச்சுத் துளிகளிலிருந்து இந்த கிருமி வெளியே வரும். அப்படி வந்தாலும் அது உங்களுக்கு வராமல் தடுப்பதற்கும் இந்த முகக்கவசம் உதவி செய்யும். முகக்கவசம், இது தான் வேண்டும், அதுதான் வேண்டும் அப்படியெல்லாம் அடம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நாம சாதாரண மக்கள். மருத்துவப்பணியாளர்களுடைய நிலை வேறு, அவர்களைப்பற்றி பேசவில்லை. நாம் சாதாரண மக்களாகப் பேசுகிறோம். காட்டன் துணியில் செய்ததாக இருந்தாலும் பரவாயில்லை, துப்பட்டா போன்றவை என்றாலும் பரவாயில்லை, கைக்குட்டையாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் முக்கியமான விசயம், வீட்டிற்குத் திரும்பியதும் அதை நன்றாக சோப்புப் போட்டு துவைத்திட வேண்டும். இது முதல் விசயம்.

 இரண்டாவது எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ, நாம் கொண்டு போன பொருட்கள், நம்முடைய பொருட்கள் தவிர வேறு எதைத் தொட்டாலும், முடிந்த அளவிற்கு கைகளைக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவ முடியவில்லையென்றால் சானிடைசர் முடிந்தளவு.

மூன்றாவது, ஒருவருக்கு ஒருவர்  இடைவெளி.

இதுதான் மூன்று விசயங்கள்.

சென்டரலைஸ்டு ஏசி இருக்கக் கூடிய அலுவலகங்களில் பணிபுரியாமல், அந்த இடங்களில் அந்த சென்டரலைஸ்டு ஏசி இல்லாமல் இருக்க முடிந்தால் நல்லது. அப்படி சாத்தியமே இல்லை என்றால், 70 சதவீதம் சுத்தமான காற்று வருவதாக அதை செட் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி செட் பண்ணுகிறார்களா என்று பாருங்கள். அதாவது, உள்ளுக்குள்ளே இருக்கக் கூடிய காற்றையே சுற்றிச்சுற்றி விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பவர் கம்மியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அப்படிப் பண்ணுவார்கள். 70 சதவீதம் புதிதாக வெளியிலிருந்து காற்றை எடுத்துக் கொண்டு வந்தால், அது சூடான காற்றாக இருக்கும். அதை குளிர் விக்க வேண்டும். அதனால், பவர் குறைவாகப் பயன்படுத்துவதற்காக அப்படிப் பண்ணுவார்கள். அதாவது, வெண்டிலேசனை அடைத்து வைத்திருப்பார்கள். அப்படிப் பண்ணாதீர்கள், வெண்டிலேசனை முழுமையாகத் திறந்து விட்டு இப்படிச் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். இது சென்டலைஸ்டாக இருந்தால்.

தனித்தனி ஏசியாக ஆனால் நீங்கள் பொதுவான ஒரு அறையில்  இருக்கிறீர்கள், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு தொடர்பு இருக்கும்படியாக இருந்தால், அங்கேயும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உங்கள் சொந்த வீட்டில் ஏசி போட்டுக் கொள்ளுங்கள், போடாமல் இருங்கள். அதனால் ஒன்றும் பிரச்சினை வரப்போவதில்லை.நான் சொல்வதெல்லாம் அலுவலகம் சார்ந்த விசயம், ஏசியைப் பொருத்தவரைக்கும். காற்றோட்டமான இடம்தான் நல்லது. காற்றோட்டம் இல்லையென்றால் பரவுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் கூடும். அவ்வளவே.

இவை குறித்த அறிவியல் பூர்வமான பகிர்வுகள் விழிப்பை நமக்கு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக