அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து
ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதல் கட்டமாக ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும்.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, பள்ளியின் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் இடைநிற்றலைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடைகள், பாடப் புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.
அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படும்.
அனைத்து மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்ய, பயோ மெட்ரிக் முறை கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது.
மாணவர்களின் கற்றல் முறையை எளிமைப்படுத்தவும், செயல்முறைக் கல்வியை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது 9ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் தொழில்சார் கல்வி முறை, இனி ஆரம்பப் பள்ளி வகுப்பிலேயே அறிமுகப்படுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முக்கிய அறிவிப்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் பாலர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இடைநிற்றலைக் குறைக்க அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் கார்டு வழங்கப்படும் என மத்திய கல்வி ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக