புதன், 17 ஜனவரி, 2018

ஜனவரி மாத இறுதியில் ‘HD’ செட்டாப் பாக்ஸ் அறிமுகம்...



தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம், ஜனவரி மாத இறுதியில் 'ஹெச்டி' செட்டாப் பாக்ஸ்களை அறிமுகப்படுத்துகிறது.

மேலும் விரைவில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் 'பிரீபெய்டு' திட்டத்தையும் அறிமுகப்படுத்தஉள்ளது.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர்  கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி, கடந்த ஆண்டு செப்.2-ம் தேதி தொடங்கிவைத்தார்.மொத்தம் 70 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் முதல்கட்டமாக 24 லட்சம் பாக்ஸ்களுக்கான உத்தரவுஅளிக்கப்பட்டு, 17 லட்சத்து 54 ஆயிரத்து 480 செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.இதில், 16 லட்சத்து 63 ஆயிரத்து 10 பாக்ஸ்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 13 லட்சத்து 28 ஆயிரத்து 843 செட்டாப் பாக்ஸ்கள் தற்போது வரை இணைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன.சென்னையில் 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு, 22 ஆயிரம் பாக்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே அரசு கேபிள் நிறுவனத்தில் இணைந்துள்ள 26 ஆயிரத்து 500 கேபிள் ஆபரேட்டர்கள், அந்தந்த பகுதி கேபிள் நிறுவன தாசில்தார்களிடம் ரூ.180 செலுத்தி பாக்ஸ்களை பெற்று இணைப்பு வழங்குகின்றனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 300 சேனல்கள் கொண்ட ரூ.175-க்கான தொகுப்பையே விரும்பி பெற்றுள்ளனர். சேவையை மேம்படுத்தும் வகையில், இம்மாத இறுதியில் துல்லிய படங்களை தரும் 'ஹெச் டி' இணைப்பை தர முடிவெடுத்துள்ளோம். ரூ.225க்கு 380 வழக்கமான சேனல்களுடன் 30 ஹெச்டி தர சேனல்கள் இதில் கிடைக்கும். இதற்கு வழக்கமான கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டிசெலுத்த வேண்டும்.

அதே போல் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தும் 'பிரீ பெய்டு' முறையை விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தால் சரிசெய்யவும், மாற்றித்தரவும் மாவட்டத்துக்கு ஒரு சேவை மையம் அமைத்துள்ளோம். 

 அதே போல், இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரை 50 தொழில் முனைவோர் இணைந்துள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 117 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக